Published : 24 Jun 2022 07:46 PM
Last Updated : 24 Jun 2022 07:46 PM

செலவு கொடுக்காத ‘ஊட்டச்சத்து மருத்துவர்’ பப்பாளி... - ஏன்? 

மனமகிழ்ச்சி தரும் பழம்: பப்பாளிப் பழச் சதைகளைப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அடித்து 'ஸ்மூத்தி' போல மாலை வேளைகளில் குடித்து வரலாம். உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை வழங்குவதுடன் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். மாதவிடாய் பிரச்சனை உடையவர்கள் பப்பாளிப் பழத்தை தங்களது உணவுப் பட்டியலில் இணைத்துக் கொள்வது நல்லது.

பப்பாளி சர்பத்: எலுமிச்சை, நன்னாரி கொண்டு சர்பத் தயாரிப்பதைப் போல, பப்பாளிப் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் சர்பத் சில நாடுகளில் பிரபலம். பழத்தைக் கொண்டு பச்சடி, ஜாம் போன்ற உணவுப் பொருட்களையும் உருவாக்கலாம். தேங்காய்த் துருவல் மற்றும் பப்பாளியோடு பனைவெல்லம் சேர்ந்த காம்போ, நாவின் எச்சில் சுரப்பை அதிகரிக்கும். பப்பாளிப் பழத்தோடு உருளைக் கிழங்கு சேர்த்தரைத்து 'கட்லட்' போலச் செய்த பின், புதினா சட்னியைத் தொடு உணவாக வழங்க, பசி அதிகரித்து, உடல் ஊட்டம் பெறும்.

சத்துக்களஞ்சியம்: மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் போன்ற மூலநோய் குறி குணங்களால் அவதிப்படுபவர்கள், பப்பாளிப் பழத்துண்டுகளைத் தேனில் குழைத்துத் தினமும் சில துண்டுகள் சாப்பிட்டு வரலாம். முதியவர்களின் செரிமானக் கருவிகளுக்கு வலு அளிக்கும் பழம் பப்பாளி. வளரும் இளம் குழந்தைகளின் மதிய உணவுப் பெட்டியில், பப்பாளி எனும் சத்துக் களஞ்சியம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். செரிமானம் பாதிப்படைந்தவர்கள், பப்பாளிப் பழத்தோடு அன்னாசிப் பழத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொள்ளலாம்.

பப்பாளி ஊறுகாய்: சிறுநீரை முறையாக வெளியேற்றும் ஆயுதமாகவும் பப்பாளிப் பழத்தைப் பயன்படுத்தலாம். மனம் மயக்கும் இனிப்புச் சுவையுடன், உடலுக்கு மெல்லிய வெப்பத்தை மட்டும் பப்பாளிப் பழம் கொடுக்கும். அனைவரும் நினைப்பதைப் போல, அதிவெப்பத் தன்மை கொண்ட உணவுப் பொருள் அல்ல. பப்பாளிக் காயைக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கும் வழக்கம் பெரும்பாலான நாடுகளில் உண்டு. இதன் பிஞ்சுக் காயிலிருந்து வடியும் பாலுக்கு அதிக மருத்துவக் குணங்கள் உண்டு. கூடவே தாய்ப்பாலைப் பெருக்கவும் பப்பாளிக் காய், பழங்கள் உதவுகின்றன.

இறைச்சி ரகங்களைச் சமைக்கும்போது, சிறு துண்டு பப்பாளிக் காயைச் சேர்த்துச் சமைக்க, இறைச்சி மிருதுவாகும். பப்பாளிக் காயை உலர்த்திச் சமையல் வகைகளில் சேர்த்துச் சாப்பிட்டு வர, கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு.

கத்திரிக்காயைச் சமைப்பதைப் போலப் பப்பாளிக் காய்களையும் அவ்வப்போது சமைக்கலாம். தோல் நோய்களில் பப்பாளி இலைகளை அரைத்துப் பூச விரைவில் குணம் கிடைக்கும். டெங்கு சுரத்தில் பப்பாளி இலைகளின் பங்கு பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. இரத்தத் தட்டணுக்களை அதிகரிக்கும் தன்மை பப்பாளி இலைகளுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொலிவு தருகிறது: பப்பாளிப் பழத் துண்டுகளுடன் தேன் சேர்த்துக் குழைத்து, முகத்தில் மென்மையாக மசாஜ் செய்து முகம் கழுவி வர முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் படிப்படியாகக் குறைவதுடன், எண்ணெய்ப் பிசுபிசுப்பும் நீங்கும். பெரும்பாலான முகப்பொலிவு கிரீம்களில் பப்பாளிச் சத்து (Papaya extract) சேர்ந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

சிங்சு (Singzu): கொஞ்சம் கருவாடை, மூன்று சிவப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கி, அரைத்துப் பசை போலச் செய்து கொள்ளவும். பின்னர் தனியாக இரண்டு தேக்கரண்டி எள் விதைகளை வறுத்துச் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தோல் நீக்கிய பப்பாளிக் காயைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மேற்சொன்ன பசையையும், எள்ளுப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொத்தமல்லி இலைகளை மேற்தூவி பரிமாறலாம். 'மணிப்பூர் ஸ்பெஷல்' இந்த ரெசிப்பி!

> இது, அரசு சித்த மருத்துவர், வி.விக்ரம்குமார் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x