Published : 23 Jun 2022 10:57 PM
Last Updated : 23 Jun 2022 10:57 PM

வயிற்று பிரச்சினைகளைத் தீர்க்கும் முலாம் பழம் - சில குறிப்புகள்

முலாம் பழங்கள் வைட்டமின் – சி, வைட்டமின் – ஏ, ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், சிறிதளவு நுண்ணூட்டங்களையும் கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 90 சதவிகிதம் நீர்ச்சத்தையும் 9 சதவிகிதம் மாவுச் சத்தையும் குறைந்த அளவில் புரதத்தையும் கொழுப்பையும் கொண்டது. கேலிக் அமிலம், கேஃபிக் அமிலம், கேடிகின் போன்ற நலம் பயக்கும் பீனாலிக் வேதிப்பொருட்களை முலாம் பழங்கள் நிறையவே கொண்டிருக்கின்றன.

வயிறு பிரச்சினை போக்கும்: வயிற்றுப் பொருமல், நாட்பட்ட மலக்கட்டை முலாம் பழச்சதைகள் குணப்படுத்துவதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உடலின் நீரிழப்பைச் சரிசெய்ய முலாம் பழங்கள் ஏற்றவை. பகல் பொழுதில் சாப்பிட, தடைப்பட்ட செரிமானத்தைத் துரிதப்படுத்தும். திறம்பட மூளை செயல்படுவதற்கும் முலாம் பழங்கள் உதவுகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும், தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிப்பதற்கும் முலாம் பழங்கள் உற்ற துணை.

வேனிற் காலங்களில் உடலை உரமாக்கச் சிறந்த பழம். வெப்பமகற்றிச் செய்கை, சிறுநீர்ப்பெருக்கிச் செய்கை ஆகியன இதன் நிரந்தரச் சொத்துக்கள். சிறுநீர்த் தாரையில் ஏற்படக்கூடிய தொற்றுகளையும் அழிக்கும் வல்லமை இதற்கு உண்டு. கபத்தை அதிகரிக்கும் தன்மையுடையதால் மழைக் காலங்களில் இதன் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது.

மலமிளக்கி: பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்த முலாம் பழச்சாற்றோடு தேன் கலந்து பருகலாம். வெப்பக் கழிச்சலுக்கு, முலாம் பழத்தை மோரில் அடித்துச் சீரகத் தூள் தூவி சாப்பிடலாம். உடலுக்கு வன்மையை அளிக்கும் சித்த மருந்துகளில் இதன் விதைகள் சேர்க்கப்படுகின்றன. இதன் விதைகளுக்கு மலமிளக்கிச் செய்கையோடு சேர்த்துப் புழுக்களை அழிக்கும் வன்மையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சருமத்தை காக்கிறது: முலாம் பழத் தோலை உலர்த்திப் பொடித்துத் தேங்காய் எண்ணெய் கலந்து சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களின் மீது தடவ விரைவில் குணம் கிடைக்கும். இதன் பொடித்த தோலை இயற்கைக் குளியல் பொடி கலவைகளில் கலந்து பயன்படுத்த, தேகம் பளபளப்பாகும். பழச்சதையைப் பாலோடு சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசிப் பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவ, பளீச் பொலிவு உண்டாகும்.

முலாம் பழச் சதையோடு, சிறிது மிளகு, சீரகம், நிலவாகைப் பொடி கலந்து கொடுக்க, மலக்கட்டிலிருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம். குறிப்பாய் மூல நோய் குறி குணங்களான ஆசனவாய் எரிச்சல், வலி போன்றவற்றுக்குச் சிறந்த பலன் அளிக்கும். வயிற்றுப் புண் உடையவர்கள் முலாம் பழச் சதைகளை, நுங்கு சதையோடு குழைத்துச் சாப்பிட்டு வர விரைவில் குணம் கிடைக்கும்.

அதிக இரத்த அழுத்தம் உடையவர்கள் சாப்பிட வேண்டிய பழங்களுள் முலாம் பழம் முக்கிய இடம் பிடிக்கிறது. முலாம் பழத்தோடு சீரகம், வெண்தாமரை இதழ்களைச் சேர்த்துத் தினமும் சுவைத்து வர, அதிக இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். கண்களின் ஆரோக்கியத்திற்கும் இதிலுள்ள வைட்டமின் – ஏ துணை நிற்கும்.

வலிகளுக்கு உகந்தது: மாதவிடாய் நேரங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் குறைக்க முலாம் பழச்சாறு அருந்தி வரலாம். உடற்சோர்வு, கெண்டைச் சதை வலி போன்ற குறி குணங்களுக்கு முலாம் பழத்தை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

பழத்தின் விதை முதல் தோல் வரை மருத்துவக் குணங்களை வெளிப்படுத்தவல்லன. இதன் விதைகளுக்கு எதிர்-ஆக்ஸிகரணி செய்கை இருப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுநீரைப் பெருக்கும் மருந்துகளோடு முலாம் பழ விதைகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டால் விரைவாகப் பலன் கிடைக்கும்.

பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

கைகளால் தூக்கும்போது கனமாக இருப்பதோடு, முகர்ந்து பார்க்கும்போது நாசியைத் துளைக்கும் வாசனையிருந்தால் தரமான பழம் என்று நம்பி வாங்கலாம். உட்பிரயோகமாகத் தோலை நாம் பயன்படுத்தப் போவதில்லை என்றாலும் தண்ணீரால் கழுவிய பிறகே உட்சதையை எடுக்க முற்பட வேண்டும். விரைவில் கெட்டுவிடும் என்பதால், சீக்கிரமாகப் பழத்தை உபயோகிப்பது அவசியம்.

> இது, அரசு சித்தமருத்துவர் வி.விக்ரம்குமார் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x