இளையராஜாவின் இசையில் ஓர் அழகான அவஸ்தை!

இளையராஜாவின் இசையில் ஓர் அழகான அவஸ்தை!
Updated on
1 min read

`எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' ஆங்கிலப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை யூடியூபில் வெளியிட்டிருக்கின்றனர். ஸ்ரீராம் பக்திசரண் எழுதியிருக்கும் இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் எமிலி மேக்கிஸ்.

யாரிடமிருந்து, எதனிடமிருந்து பிரிவது என்பதில்தான் பிரிவு மகிழ்ச்சிக்கு உரியதா, வேதனைக்குரியதா என்பதை முடிவுசெய்ய முடியும். காதலர்களுக்கு இடையே பிரிவே ஓர் அவஸ்தைதான். இளையராஜாவின் இசையில் ஓர் அழகான அவஸ்தையாக, பிரிவு இந்தப் பாடலில் உருவாகியிருக்கிறது.

மனிதனிடமிருந்து காதல் உணர்வு பிரிந்துவிட்டால் நடைபிணமாகிவிடுவான். காதலர்களிடமிருந்து காதல் பிரிந்துவிட்டால், அந்தக் காதலர்களின் நிலை என்னவாகும்? 'இந்தப் பிரிவுச் சிறையிலிருந்து என்னை மீட்கப் போவது யார்? காலம் முடியும்வரை நான் இருப்பேன் நான் இருப்பேன்...’ மர்மத்தையும் காதலையும் சரிபங்காகச் சுமந்திருக்கும் இந்தப் பாடலுக்கான இளையராஜாவின் இசை, திரைப்படத்தின் பூடகத் தன்மையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் மரபில் பாடல் தொடங்குவதற்கு முன்பாக ஒரு தொகையறா போன்ற முன்னொட்டுக் கொடுத்துத் தொடங்குவர். அந்த மரபின் தொடர்ச்சியை இந்த ஆங்கிலப் பாடலிலும் காணமுடிகிறது.

`எங்கோ எவரோ பாடுகிறார்
அந்த வலியை உன்னால் உணரமுடிகிறதா?'
எனப் படர்க்கையில் தொடங்கி, முன்னிலையில் வளர்ந்து, தன்னிலையில் (ஒரு பெண்ணின் குரலில்) பாடல் தொடங்குகிறது.
பல்லவிக்கும் சரணத்துக்குமான இடையிசைகளில் சில நொடிகள் கடைப்பிடிக்கப்படும் மவுனங்களில் அடர்த்தி அலாதியானவை. முழுப் பாடலிலும் ஒலிக்கும் திஸ்ர ஜதித் தாளமும், அதைக் கையாண்டிருக்கும் விதமும் அதில் பொதிந்திருக்கும் மாயத் தன்மையும் மேற்குலக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.

வீடியோவை இங்கே காண...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in