

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் போல கிழக்குத் தொடர்ச்சி மலை ஆராதிக்கப்பட்டதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை போல ஒரே சீராகக் கிழக்குத் தொடர்ச்சி மலை இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம். இந்தியாவின் முக்கிய ஆறுகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா போன்றவை கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர் இடையே பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்புதான் இந்த மலை துண்டு துண்டாக போனதற்குக் காரணம். அதேவேளையில் இந்த மலைத்தொடர் வங்காள விரிகுடாவிற்கு இணையாக நீண்டிருப்பதும் ஆச்சரியமான உண்மை.
தமிழகத்தில் இந்த மலைத் தொடர் வடகிழக்காகத் தொடங்கி தென்மேற்காகப் பரந்து விரிந்துள்ளது. தமிழகத்தில் சமவெளி பகுதிகளையும் கிழக்குப் பகுதியாகக் கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் கிழக்குத் தொடர்ச்சி மலை. தமிழகத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பளவு 98 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். தமிழகத்தில் இந்த மலைத்தொடர் திருநெல்வேலியில் வல்லநாட்டில் தொடங்கி குருமலை, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம் மலை, அழகர்மலை, நாகமலை, யானைமலை, கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன்மலை, கல்வராயன் மலை, சிறுமலை என விதவிதமான பெயர்களில் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றன. இதில் பச்சைமலை பற்றிப் பார்ப்போம்.
சமவெளிப் பகுதியாக அறியப்படும் திருச்சியில் மலை உள்ளது என்றால் பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பச்சைமலை தமிழகத்தில் திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரவி நிற்கும் ஒரு மலை. இந்த மலை சராசரியாக 500 மீ. முதல் 1000 மீ. உயரம் கொண்டது. சங்கக் காலத்தில் பச்சைமலையை ‘விச்சிமலை’ என்று அழைத்ததாகச் சொல்கிறார்கள். இந்த மலையில் விச்சிப்பூ அதிகமாகப் பூத்துக் குலுங்குவதால் இப்பெயரைக் கொண்டு அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போதும்கூடப் பச்சைமலையில் விச்சிப்பூ அதிகமாக வளர்வதைக் காணலாம். பச்சை மலையை வைத்து ஏராளமான சினிமாப் பாடல்களும் உருவாக்கப்பட்டிருப்பது இந்த மலைக்குக் கிடைத்த பெருமையாகச் சொல்லலாம்.
பெயருக்கு ஏற்ப எங்கும் பச்சை போர்த்திய மரங்கள், ஜில் காற்று, மூலிகை சுவாசம் என அம்சமாக இருக்கிறது பச்சைமலை. இது மிகவும் சிறிய மலைதான். எனவே, இந்த மலை சுற்றுலாத்தலமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. பச்சைமலையிலுள்ள டாப் செங்காட்டுப்பட்டி, முருகன் கோயில், கீழ்கரை, கன்னிமார்சோலை, ஷோபனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பார்வைக் கோபுரங்களில் இருந்தபடி மலையின் அழகையும் சமவெளிப் பகுதியையும் காண்பது தனி அனுபவம் தரும். இதற்காகவே இங்கெல்லாம் ‘வியூ பாயின்ட்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.
மலைக்கே உரிய கொண்டை ஊசி வளைவுகள் இடையிடையே ஏராளமாக வந்து செல்லும். டாப் செங்காட்டுப்பட்டியிலிருந்து 10 கி.மீ. பயணம் மேற்கொண்டால் சேலம் மாவட்டம் மாயம்பாடிக்குச் சென்றுவிடலாம். இந்த வழிகளில் மயில்கள், குயில்கள், அரிய வகைக் குருவிகள், மான், காட்டுப்பூனை போன்ற உயிரினங்களைப் பார்த்து ரசிக்கலாம். பெரம்பலூரில் லாடபுரம் வழியாக நடைபாதையில் மலை ஏறினால் மயிலூத்து அருவியைக் காண முடியும். ஆனால், மழைக் காலத்தில் மட்டுமே இந்த அருவியில் தண்ணீர் கொட்டுவதைக் கண்டு ரசிக்க முடியும்.