

அழியும் நிலையிலுள்ள நாட்டு நாய்களைப் பண்ணை அமைத்து பாதுகாத்து வருகிறார் உசிலம் பட்டியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். வெளிநாட்டு நாய்களுக்கு இணையாக நாட்டு நாய்களையும் வணிக நோக்கோடு தரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள போத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (38). மென்பொருள் பொறியாளரான இவர் நாட்டு நாய்களுக்கென பண்ணை அமைத்து 110 நாய்களுக்கு மேல் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். வெளிநாட்டு நாய்களை இங்குள்ளோர் வளர்ப்பதுபோல் நமது பாரம் பரிய நாட்டு நாய்களையும் வெளிநாட்டுக்காரர்கள் விரும்பி வளர்க்கும் வகையில் சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து பொறியாளர் அ.சதீஷ் கூறியதாவது: சிறு வய திலிருந்தே நாட்டு நாய்கள் மீது கொள்ளைப் பிரியம். தெருவில் திரியும் குட்டி நாய்களைத் தூக்கி வந்து வீட்டில் வளர்ப்பேன். எனது ஆர்வத்தைப் பார்த்து தலைமைக்காவலரான எனது தந்தை அருள் 25 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையம் ரக நாட்டு நாய் வாங்கித் தந்தார். வீட்டில் 7 ஆண்டுகள் வளர்ந்த நாய் திடீரென காணாமல் போனதால் வருத்தம் ஏற்பட்டது. அதேபோல், தரமான ராஜபாளையம் நாட்டு நாய் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்க ராஜபாளையம் சென்றபோது தரமான நாய் கிடைக்கவில்லை. பல பண்ணைகளுக்குத் தேடி அலைந்து வாங்கினேன்.
அப்போதே, அழிந்து வரும் நாட்டுநாய் இனங்களைப் பாது காக்க முடிவெடுத்தேன். ஒரு பண்ணை உரிமையாளர், அவரிடம் வாங்கிய நாய்களை கோவையில் நடந்த கண்காட்சிக்குக் கொண்டு வருமாறு கூறினார். அதன்படி கண்காட்சிக்குச் சென்ற இடத்தில் ராஜபாளையம் நாய்க்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அதன்படி, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராமநாதபுரம் ஆகிய நாட்டு இனங்களை ஒரு ஏக்கரில் பண்ணை அமைத்து வளர்த்து வருகிறேன். பல கண்காட்சிகளில் வெளிநாட்டு நாய்களை அதிக எண்ணி்க்கையில் கொண்டு வருகின்றனர். இதன் மூலமும் வெளிநாட்டு நாய் களைப்போல் நமது பாரம்பரிய நாட்டு நாய்களை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ‘யுனைடெட் கென்னல் கிளப்’ மூலம் இணைந்து நமது பாரம் பரிய நாட்டு நாய்களையும் வணிக நோக்கோடு தரப்படுத்தும் முயற்சி யில் குழுவாக இணைந்து செயல்படுகிறோம், என்றார்.