பழங்குடியின பெண்களின் வேலைவாய்ப்புக்கு உண்ணிச்செடியின் தண்டுகளில் நாற்காலிகள் தயாரிக்க பயிற்சி
பொள்ளாச்சி அடுத்த கீழ்பூனாச்சி பழங்குடியின கிராமப் பெண்களுக்கு, வனப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் உண்ணிச்செடிகளின் குச்சிகளை வைத்து நாற்காலி உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 6 வனச்சரகங்கள் உள்ளன. இதில் அடர்ந்த வனப்பகுதியில் 17 பழங்குடியின கிராமங்களும், ஊராட்சி, பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடியிருப்புகளும் உள்ளன. இங்கு சுமார் 8,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வனத்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் இயந்திரம் மூலம் கால்மிதியடி தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, மிதியடிகள் விற்பனையில் பழங்குடியின பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கீழ்பூனாச்சி பழங்குடி யின கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு வனப்பகுதிகளில் களைச்செடியாக உள்ள உண்ணிச்செடிகளை பயன்படுத்தி நாற்காலி, டீபாய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதிகளில், களைச்செடியான உண்ணிச்செடிகள் அதிகளவில் உள்ளன.இந்த செடிகள் வளரும் இடத்தில், புற்கள், செடிகள் என பிற தாவரங்கள் முளைப்பதில்லை. வனத்தில் களைச்செடிகளை அப்புறப்படுத்தும் நோக்கில், உண்ணிச் செடிகளின் தண்டுகளை பயன்படுத்தி நாற்காலி, டீ பாய், வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க மைசூருவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பழங்குடியின மக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
பயிற்சிக்குப்பின் பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் பொருட்களை, பயிற்சி அளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமே கொள்முதல் செய்து கொள்ள உறுதி அளித்துள்ளனர். இவ்வகை பொருட்களை பழங்குடியின மக்களின் விற்பனை கடைகள் மூலம் சந்தைப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணி களுக்கும் விற்பனை செய்யப்படும். இதனால் பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
