ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் கொடுத்து கார் வாங்கிய தருமபுரி இளைஞர் - சிறுசேமிப்பை ஊக்கப்படுத்தும் முயற்சி!

சேலத்தில் ரூ.10 நாணயங்களாக ரூ.6 லட்சம் கொடுத்து,புதிய காரை வாங்கிய தருமரியை சேர்ந்த வெற்றிவேல்.
சேலத்தில் ரூ.10 நாணயங்களாக ரூ.6 லட்சம் கொடுத்து,புதிய காரை வாங்கிய தருமரியை சேர்ந்த வெற்றிவேல்.
Updated on
2 min read

சேலம்: சிறுவர்களிடம் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தருமபுரியை சேர்ந்த இளைஞர், ரூ.10 நாணயங்களாக ரூ.6 லட்சம் கொடுத்து புதிய கார் வாங்கியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் வெற்றிவேல். இவர் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவர் சனிக்கிழமை ரூ.6 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்து, புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். சிறார்களிடம் சேமிப்பு பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்ததாகக் கூறும் வெற்றிவேலின் இந்த செயலுக்கு பின்னால் உள்ள காரணம் அதிர்ச்சியளிக்கும் ஆச்சரியமாக உள்ளது.

தமிழகத்தின் சில இடங்களில் ரூ.10 நாணயத்தை பேருந்து நடத்துனர்கள், கடைக்காரர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பல முறை நாளிதழ், தொலைகாட்சிகளில் பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இருப்பினர், பலரும் ரூ.10 நாணயம் வாங்கிட தயக்கம் காட்டி வரும் நிலையில் தங்குதடையின்றி நாணயம் புழக்கத்துக்கு வருவதில் இடையூறான நிலையே நீடிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், வெற்றிவேல் வசிக்கும் பகுதியில் சிறுவர்கள் ரூ.10 நாணயத்தை விளையாட்டு பொருளாக பயன்படுத்தி வந்ததை பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து சிறார்களிடம் கேட்டப் போது, அவர்கள் இது செல்லாத நாணயம் என்று பதில் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிற்றார்களிடம் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி, ரூ.10 நாணயம் செல்லுபடியாகும் என்பதை மெய்ப்பித்து காட்டிட வெற்றிவேல் முடிவு செய்தார்.

உடனடியாக ரூ.10 நாணயத்தை தேடி பிடித்து சேமிக்க ஆரம்பித்தார். கோயில், வணிக வாளாகம், பீடா கடைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் உள்பட பல தரப்பில் இருந்தும் ரூ.10 நாணயத்தை வெற்றிவேல் சேமித்ததில், ரூ.6 லட்சம் சேர்ந்தது. இந்த ரூ.10 நாணயம் செல்லும் என்பதை சமூகத்துக்கு எடுத்துக்காட்டவும், சிறுவர்களிடம் சிறுசேமிப்பு பழக்கத்தால், பெரிய தொகை சேர்த்து, அவர்களின் லட்சிய செலவுக்கு பயன்படுத்திட முடியும் என எடுத்துக்காட்ட நினைத்தார்.

வெற்றிவேல் சேர்த்து வைத்த ரூ.10 நாணயத்தை மூட்டைகளாக கட்டி, சரக்கு வாகனத்தில் நேற்று இன்று சேலம் கொண்டு வந்தார். சேலம், ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தை அணுகிய வெற்றிவேல், நாணயம் செல்லும் என்பதையும் சிற்றார்கள் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனது தீர்மானத்தை எடுத்துக்கூறினார். இதற்கு கார் நிறுவனத்தினர் ஒப்புக் கொண்டதை அடுத்து, கார் நிறுவன வளாகத்தில் நாணயங்களை கொட்டி நிறுவன் ஊழியர்கள், குடும்பத்தினர் உதவியுடன் எண்ணியதில், ரூ.6 லட்சம் இருந்தது. அந்த நாணயத்தை கொடுத்து வெற்றிவேல் புதிய காரை வாங்கினார்.

சிறுக சிறுக சேமித்தால் மிகப்பெரும் தொகையாக உருவெடுத்து, விரும்பும் பொருளை தாராளமாக வாங்க முடியும் என்பதுடன் செல்லா நாணயம் என்று கூறி புறக்கணிப்பவர்களுக்கு ரூ.10 நாணயம் செல்லும் என புரிய வைக்கும் வெற்றிவேலின் நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் வெற்றிவேல் குடும்பத்தினருடன், தாங்கள் வாங்கிய புதிய காரில் பயணமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in