Published : 17 Jun 2022 02:18 PM
Last Updated : 17 Jun 2022 02:18 PM

கலைஞர் 100 | பகுதி-3 | அவரது கண்கள் என்னைத் தேடும்!

இவர் பயணிக்காத நாடில்லை, படிக்காத நூலில்லை என்று ஓர் ஒளிப்படக் கலைஞரைப் பார்த்துக் கூறமுடியும் என்றால் அவர் ‘கலைமாமணி’ யோகா. தமிழ்கூறும் பத்திரிகை உலகம் அறிந்த மூத்த ஒளிப்படக்காரர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட எண்ணற்ற திரைப் பிரபலங்கள், தமிழக வனத்துறை, பல்வேறு தமிழ், ஆங்கில, வெளிநாட்டு இதழ்கள் என யாருக்கும் எங்கும் தங்குதடையின்றி கடந்த 50 ஆண்டுகளைக் கடந்து திறன்மிக்க ஒளிப்படக் கலைஞராக பணியாற்றி வருபவர். எழுத்திலும் வல்லவராக வலம் வரும் யோகா, கலைஞர் மு. கருணாநிதியின் பிரத்யேக ஒளிப்படக்காரர் என்பது அவரின் தனித்த அடையாளங்களில் ஒன்று. கலைஞரை இவர் தன் கேமராவில் பதிகிறாரா இல்லை; இதயம் வழியே பதிந்திருக்கிறாரா என்று ஐயுறும் வகையில் அரசியலுக்கு வெளியே நின்று அவரது ஆத்ம நண்பராகவும் பழகி வந்திருக்கிறார். 80ஆம் அகவையில் அடி வைத்திருக்கும் அவரைச் சந்தித்துப்பேசியதிலிருந்து...

கலைஞரிடமிருந்து கலைஞர் விருதுபெறும் ‘கலைமாமணி’ யோகா​​

‘கலைஞர் 77’ என்கிற வண்ண ஒளிப்பட ஆல்பம் இன்றைக்கும் கலைஞரை உயிருடன் இருப்பதுபோல் காட்டுகிறது. எவ்வளவு காலம் கலைஞரை உங்கள் கேமரா வழியாகப் பின்தொடர்ந்தீர்கள்?

நம்மைவிட்டு மறைந்துவிட்டாலும் இன்றைக்கும் தமிழகத்தின் பெருநிதியாகத் திகழ்கிறவர் டாக்டர் கலைஞர். அவருடைய பெருமைகளைக் கட்டுரை வடிவிலும் கவிதை வடிவிலும் பழகிப் பார்த்த பல்துறை அறிஞர்களும் படைப்பாளிகளும் அழகுறப்பதிவு செய்துள்ளனர். எனக்குக் கைவந்தது ஒளிப்படக்கலை. அக்கலையின் துனையோடு நான் கலைஞரை
வண்ணமயமாகப் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக அந்தப் பெருமகனை அருகில் இருந்து கண்டு வியந்து பதிவு செய்யக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும்பேறு! அவற்றை ஒரு வண்ணத் தொகுப்பாக கொண்டு வந்தபிறகுதான் அந்த நீண்ட நெடிய முயற்சிக்கு ஒரு அர்த்தம் கிடைத்தது என்று நம்புகிறேன். கழக உடன்பிறப்புகளுக்கு அது பிடித்தமான காபி டேபிள் ஆல்பம். ஊடக நண்பர்களும் அதை விரும்பி வாங்கி தங்கள் சொந்த நூலகங்களில் வைத்துக்கொண்டனர். அது எனக்கான பெருமையல்ல; கலைஞருக்கான பெருமை. அதில் சிறுதுளி எனக்குக் கிடைத்தால் போதும் மகிழ்ந்துகொள்ள..

வெற்றிகரமான ஒளிப்படக் கலைஞராக உயர்ந்ததன் பின்னணியில் உங்கள் இளமைக் காலத்துக்குப் பங்கிருக்கிறதா?

நமக்குள்ளிருக்கும் படைப்புத்திறனை நமக்கு அடையாளம் காட்டுவது பால்யம்தான். பெற்றோர்கள், உறவுகளைத் தாண்டி, சிறுவயதில் நமக்குக் கிடைக்கும் நண்பர்களால் நமது குணவியல்புகள் உருவம்பெறுவது மட்டுமல்ல, ரசனையும் உருப்பெறுகிறது. எனது பால்யம் ஒருவிதத்தில் எனக்குச் சாபமென்றால் இன்னொரு விதத்தில் வரம் என்பேன். நண்பர்களே எனக்கு வரமாக அமைந்தார்கள்.

பெங்களூரு கண்டோன்மெண்ட் பகுதியில் குடியேறி வாழ்ந்த தமிழ்க் குடும்பம் எங்களுடையது. செல்வச் செழிப்பும் செல்வாக்கும் மிக்க குடும்பமாக இருந்ததது. அப்பா நகைக்கடை வைத்திருந்தார். இரண்டு சித்தப்பாக்கள் மிகப்பெரிய அரசப் பதவிகளில் இருந்தார்கள். அப்பாவுக்கு மட்டும் தங்கநகை வியாபாரத்தில் தேர்ச்சி, ஆர்வம். நேர்மையான வியாபாரி எனப் பெயரெடுத்திருக்கிறார். ஒரு தெருவில் தொடங்கி அடுத்த தெருவில் முடியும் பெரிய சுற்றுக்கட்டு வீடு. வீட்டின் முன் பகுதியில் நகைக்கடை இருக்கும். அப்பா மிகுந்த பக்திமான். அம்மாவுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. அடுத்து நான்.

எங்களது குலதெய்வம் சோளிங்கரில் கோயில் கொண்டிருக்கும் யோக நரசிம்மர். ‘எனக்கு ஆண் வாரிசு பிறந்தால் ‘யோகானந்த்’ என்று உன் பெயரைச் சூட்டுகிறேன்’ எனக் குலதெய்வத்திடம் உருக்கமாக வேண்டியிருக்கிறார் அப்பா. ஆனால் நான் பிறப்பதைக் காண அவர் உயிருடன் இருக்கவில்லை.1946 அக்டோபர் மாதம் நடந்த இனக்கலவரத்தில், கூட்டமாக வந்த கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்டு இறந்துபோனார். அப்பாவின் முகத்தைக் காணமுடியாத பாக்கியவானாக நான் பிறதேன். சித்தப்பாக்களை நம்பி இருக்காமல் காஞ்சிபுரத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கே என்னையும் அக்காவையும் அழைத்து வந்துவிட்டார் அம்மா.

அம்மாவுக்கென இருந்த கொஞ்ச விவசாய நிலத்தின் தயவில் குடும்பம் உயிர் பிழைத்தது. நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரிக்குச் சொந்தமான பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்தேன். கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதாகக் வாக்குறுதி அளித்திருந்த எனது சித்தப்பாக்கள் என்னைக் கைகழுவிவிட்டார்கள். நான் அம்மா வயிற்றில் ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோது அப்பா இறந்துபோனதால் அம்மாவுக்கு என் மீது கண்டிப்பு இருந்ததே தவிர பிடிப்பு இல்லை. அம்மாவின் ஆதங்கம் நியாயமானதாக இருந்திருக்கலாம். சித்தப்பாக்களாவது ஆதரித்து இருக்கலாம். இரண்டுமே எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இப்படி இளமையிலேயே உறவுகளால் புறக்கணிக்கப்பட்டது என்னை பாதித்தது.

என் இளமைக்காலம் மிகக் கடுமையான நாட்களைக் கொண்டிருந்தது. அதுபோன்ற தருணங்களில் என்னை மீட்டெடுத்து, என்னைத் தத்தெடுத்துக்கொண்ட தேவதூதர்கள் என்றால் இன்றுவரை என்னுடன் நட்பில் தொடரும் என் பால்ய நண்பர்கள்தான்.

கேமரா கான்சியஸ் இல்லாதவர் கலைஞர்

புறக்கணிப்பிலிருந்து என்ன கற்றுக்கொண்டு மேலே வந்தீர்கள்?

புறக்கணிப்பே எனது முதல் ஆசான் என்பேன். புறக்கணிப்பு யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழவேண்டும் என்கிற மனப்பான்மையை என்னுள் உருவாக்கியது. பள்ளிக்காலத்தில் எனக்கு வெகுசில நண்பர்கள் மட்டும்தான். ஜெர்மனியிலிருந்து வாங்கிவரப்பட்ட ஜெட் ராட் என்கிற வானொலிப் பெட்டியில் கர்னாடிக், இந்துஸ்தானி, சினிமா பாடல்கள் என்று கலவையாகக் கேட்டு ரசனையை வளர்த்துக்கொண்டேன். நண்பர்களுடன் ஊர் சுற்றும் பழக்கம் இல்லாமல் போனதால் வாசிப்பை நேசிக்கத் தொடங்கினேன். ஜெயகாந்தனை வெறித்தனமாக வாசித்திருக்கிறேன். எனது நண்பர்களில் ஒருவன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். நானோ சிவாஜி ரசிகன். அவனுக்காக நான் முதல் காட்சி எம்.ஜி.ஆர். படமும் எனக்காக அவன் இரண்டாம் ஆட்டத்தில் சிவாஜி படமும் பார்ப்போம். இசையும், வாசிப்பும் திரைப்படமும் என்னைச் செதுக்கியது.

நான் இன்று பெயரோடும் புகழோடும் இருக்கிறேன் என்றால் அதில் எனது திறமைக்கு 25 சதவீதம்தான் இடமிருக்கிறது. மீதமிருக்கும் 75 சதவீதமும் நண்பர்கள் என் மீது காட்டிய அன்பால்தான் என் வளர்ச்சியும் வெற்றிகளும் சாத்தியப்பட்டிருக்கின்றன.

சென்னையில் எப்போது வாழ்க்கையைத் தொடங்கினீர்கள்?

நான் கல்லூரியில் படிக்கவேண்டும் என்று விரும்பியதும் பெங்களூரு வீட்டை விற்றுக் கிடைத்த பணத்தில் மிச்சமிருந்த இரண்டாயிரம் ரூபாயை எடுத்து என் கையில் கொடுத்து சென்னை அனுப்பி வைத்தார் அம்மா. சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஆகவேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. எம்.ஜி.ஆரின் மேக்கப் மேன் பீதாம்பரம் எங்கள் குடும்ப நண்பர். அவரது சிபாரிசுடன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1967இல் சேர்ந்தேன். படித்து முடித்ததும் விஜயா ஸ்டுடியோவின் ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பார்க்லேவிடம் உதவியாளராகச் சேர்த்துவிடும்படி அவரிடம் கோரிக்கை வைத்தேன். புகழ்பெற்ற அந்த ஒளிப்பதிவாளர் பல எம்.ஜி.ஆர் படங்களை உலகத்தரத்தில் ஒளிப்பதிவு செய்தவர். இளங்கலை அறிவியலில் கெமிஸ்ட்ரி படித்துமுடித்து வெளியே வந்தபோது விஜயா ஸ்டுடியோவில் கேமரா டிபார்ட்மெண்டையே மூடிவிட்டார்கள். மார்க்கஸ் பார்க்லே பணி ஓய்வுபெற்றுச் சென்று விட்டார். எனக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.

பிறகு ஜெமினி கலர் லேப்பில் பீதாம்பரம் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். ஆனால் அந்த வேலை இயந்திரத்தனமாக இருந்தது. இந்த நேரத்தில் எனது ஒன்றுவிட்ட சகோதரரான சங்கர் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தார். சிறந்த ஒளிப்படக் கலைஞர், ஜெனித் ஸ்டுடியோ என்கிற ஒளிப்பட ஸ்டுடியோவை சென்னையில் நடத்தி வந்தார். இன்னும் அந்த ஸ்டுடியோ இயங்குகிறது. அவர்தான் எனது குரு. ஒரேசமயத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரின் பர்செனல் போட்டோகிராபராக இருந்தார். அவரது உதவியாளராக அவரது கேமரா பையைத் தூக்கிக்கொண்டு அவரது நிழலைப்போல் தொடர ஆரம்பித்தேன். இப்படித்தான் எனது ஒளிப்பட வாழ்க்கையைத் தொடங்கினேன்.

அரசியல் நிகழ்வொன்றில் கலைஞரை ‘க்ளிக்’கும் யோகா

‘போட்டோ ஜர்னலிஸ்ட்’ என்கிற அடையாளம் எப்போது கிடைத்தது?

அதுவொரு சுவாரஸ்யமான சம்பவம். ஒளிப்படக் கலையின் வீச்சை எனக்குப் புரிய வைத்த திருப்புமுனை என்றே சொல்லலாம். ஒருமுறை நானும் எனது சகோதரரும் ஒரு நண்பரைப் ஒளிப்படம் எடுக்க மிதிவண்டியில் எலியட்ஸ் கடற்கரைக்குப் போய்க்கொண்டிருந்தோம். மாலை ஐந்து மணி இருக்கும். எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த காந்தி சிலைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பசுமாடு, காந்தியைப் பார்த்து எதோ அர்த்தப்பூர்மாக பேசுவதுபோல் தலையை உயர்த்தி சிலையைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது. உடனடியாக மிதிவண்டியிலிருந்து கேமரா பையுடன் கீழே குதித்தேன். சட்டென்று கேமராவை எடுத்து, காந்தி சிலையையும் பசுவையும் பிரேமுக்குள் கொண்டுவந்து கம்போஸ் செய்து, அந்தக் காட்சியை கச்சிதமாகப் படமெடுத்துவிட்டேன். ஸ்டுடியோவுக்கு வந்ததும் ஆசையுடன் அந்த நெகட்டீவைக் கழுவி பிரிண்ட்போட்டு குமுதம் வார இதழுக்கு அனுப்பிவிட்டேன். அனுப்பியபிறகு மறந்தும்போய்விட்டேன்.

இரண்டுவாரங்கள் கழித்து எனது அறைக்கு குமுதம் இதழ் ஒன்று அஞ்சலில் வந்திருந்தது. பிரித்துப் பார்த்ததும் முதல் பக்கம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு நான் எடுத்த காந்தி – பசு ஒளிப்படம் பிரசுரிக்கப்பட்டு, ‘மாடு காந்தியிடம் பேசியிருந்தால் என்ன பேசியிருக்கும்?’ – சிறந்த கருத்துச் சித்திரத்துக்கு 400 ரூபாய் முதல் பரிசு என்று அறிவித்திருந்தார்கள். அன்று 400 ரூபாய் என்பது இடைநிலை அரசு ஊழியர் ஒருவரின் இரண்டுமாத ஊதியம். அதைவிட ஆச்சரியம் புகைப்படம்: யோகா என்று குறிப்பிட்டு எனது பெயரை அச்சிட்டிருந்தார்கள். முதல்முறையாக எனது கலைக்கான அங்கீகாரம் ஒரு அச்சிதழில் வந்திருந்ததால் வானத்தில் பறப்பதைப்போல உணர்ந்தேன். அதன்பிறகு குமுதம் பத்திரிகை அலுவலகம் சென்று பத்திரிகையாளர் பால்யூவைச் சந்தித்து நண்பர் ஆனேன். “பேசும் படத்தை எடுப்பவன்தான் அசலான போட்டோ ஜர்னலிஸ்ட்... நீ எடுத்துவிட்டாய்” என்று பாராட்டினார். அப்போது புலிவாலைப் பிடித்ததுபோல் பத்திரிகை உலகில் எனது பணி தொடங்கியது. குமுதம் தொடங்கி பல முன்னணி இதழ்களுக்கும் நாளிதழ்களுக்கும் பத்திரிகை ஒளிப்படக்காரனாக மிகப்பெரிய வட்டம் அடித்துவிட்டேன்.

இன்றைய முதல்வருடன்.. (முன்பு எடுத்துக்கொண்ட படம்)

அரசியல் பிரபலங்களை எப்போது படமெடுக்கத் தொடங்கினீர்கள்?

இந்திரா காந்தி இரண்டாவது முறை பிரதமர் வேட்பாளராக நின்ற தேர்தல் அது. சிக்மங்களூர் எம்.பி.தொகுதியில் அவர் போட்டியிட்டபோது அந்தத் தொகுதிக்கு செய்தி சேகரிக்க குமுதம் பால்யூ கிளம்பினார். நான் வரலாமா என்றேன். “ஊதியம் எதுவும் கிடைக்காது, சொந்த விருப்பத்தில் வந்து எடு. நீ எடுத்த படம் ஏதேனும் பிரசுரமானால் அது உன் அதிர்ஷ்டம்” என்றார். அதுபோதும் என்று மூன்றுவிதமான கேமராக்களுடன் அவருடன் கிளம்பிவிட்டேன். மூன்றுநாள் இந்திராவின் பின்னால் சுற்றிக்கொண்டிந்தோம். இந்திராவின் முகத்தில் சிரிப்பே இல்லை. அந்த மூன்று நாட்களில் சுமார் 80 படங்கள் எடுத்திருப்பேன். எந்தப் படமும் உணர்வுபூர்வமான படமாக அமையவில்லை. மூன்றாம் நாள் மாலை பிரச்சாரம் முடிந்து இந்திரா கிளம்பும்போது எல்லா ஒளிப்படக்காரர்களையும் பார்த்து சிலநொடிகள் நன்றியுடன் புன்னகைத்தார். அந்த அபூர்வமான தருணத்துக்காக பசியுடன் காத்திருந்தவனைப்போல, கலர் நெகட்டிவ் கேமராவில் புன்னகைத்த இந்திராவைக் கைது செய்தேன்.

அந்தப் படம் குமுதம் அட்டையில் பிரசுரமானது. யார் இந்த யோகா என அனைவரையும் கேட்கும்படி செய்துவிட்டது. அந்தப் படத்தைத் தாங்கிய குமுதம் வெளியான அன்றுதான் இந்திரா இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத அந்த ஒற்றுமை, கடவுள் அளித்த தருணமாகவே எனக்குத் தோன்றியது. அந்த அட்டைப் படத்துக்கு குமுதம் எனக்கு 80 ரூபாய் சன்மானம் அளித்தது. ஆனால் அந்தப் படம் வெளியான பிறகு என் மீது பத்திரிகையாளர்களின் கவனம் குவிந்தது. அந்த ஒரு படம் என்னை பிரபலங்களை எடுக்கும் போட்டோ ஜர்னலிஸ்டாக மாற்றிவிட்டது.

தனது செல்ல நாயுடன் கலைஞர்

கலைஞரோடு எப்போது அறிமுகமானீர்கள்?

குங்குமம் பத்திரிகையின் ஆசிரியராகச் சாவி பணியாற்றிவந்தார். ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் அவர் பணியிலிருந்து விலகியபோது, அங்கே இணையாசிரியராக இருந்த பாவை சந்திரன் ஆசிரியர் பொறுப்புக்கு வந்தார். அவர் பால்யூவிடம், “உங்களுக்குப் படமெடுக்கும் யோகா எங்கள் குழுமப் பத்திரிகைகளுக்கு பணிபுரிய வருவாரா?” என்று கேட்க, “இதைவிடப் பெரிய வாய்ப்பு அமையாது, உடனடியாக குங்குமம் ஆசியரைப் போய் பார்” என்று வாழ்த்தி அனுப்பினார் பால்யூ. பாவை என்னை முரசொலி மாறனிடம் அழைத்துச் சென்று “இவர்தான் யோகா” என்று அறிமுகப்படுத்தினார். அப்போது தொடங்கியதுதான் முரசொலி, குங்குமம், குங்குமச்சிமிழ், வண்ணத்திரை உள்ளிட்ட ஆறு பத்திரிகைகளுக்கும் எனக்குமான தொடர்பு.

குங்குமம் குழுமத்துக்கு பணியாற்றத் தொடங்கி ஓராண்டு காலம் முடிந்திருக்கும். அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். அவரது பிறந்த தினத்தை ஒட்டி குங்குமம் அட்டையில் கலைஞரின் படத்தைப்போட்டு அவரது புதிய செயல்திட்டங்கள் குறித்து கட்டுரை எழுத இருந்தார் பாவை. கலைஞரைப் படமெடுக்க அப்பாயிண்மெண்ட் வாங்கிவிட்டார். ஆனால் அவர் கொடுத்திருந்த நேரத்துக்குப் போகமுடியவில்லை. கலைஞர் கோட்டைக்குக் கிளம்பிவிட்டார். நேரம் தவறாமையில் சிவாஜிக்கே மூத்தவர் கலைஞர். அன்று கலைஞரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனிடம் கெஞ்சியதும் “அவர்களை நாளைக்கு வரச்சொல்லுங்கள்” என்று கோபத்தை உடனே மறந்து மறுநாளே நேரம் கொடுத்தார் கலைஞர். சரியான நேரத்துக்கு சற்று முன்பாகவே போய் தயாராக இருந்தேன்.

முதல்நாள் அப்பாயிண்மெண்ட்டை தவறவிட்டது பற்றி கோபப்பட்டுத் திட்டுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு கலைஞனை ‘மூட் அவுட்’ செய்யக்கூடாது என்கிற இதமும் இங்கித இதயமும் அவரிடம் இருந்ததால் “வாய்யா.. யோகா! உன் கலை வண்ணத்தைக் காட்டு!” என்று அமர்ந்தார். அதன்பிறகு சுமார் ஒன்றைரை மணிநேரம் நான் கேட்டபடியெல்லாம் போஸ் கொடுத்து எனக்கு ஒத்துழைத்தார். அவர் பார்க்காத ஒளிப்படக் கலைஞர்களா? எனக்கு நீண்ட நேரம் கொடுத்ததுபோல் அவர் யாருக்குமே கொடுக்கவில்லை. அப்போது இன்றைய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இருபது வயதைக்கூட எட்டாத இளைஞர். அன்று நான் கலைஞரை எடுத்த படங்கள், முரசொலி, குங்குமம், மற்ற இதழ்கள், கட்சி போஸ்டர்கள், கட்-அவுட்டுகள் என்று பிரபலகின. அந்தப் படங்கள் கலைஞரை உயிருக்கு உயிராக நேசிக்கும் அவரது தொண்டர்களோடு பேசின.

கலைஞர் மு.கருணாநிதிக்கு ‘கேமரா கான்சியஸ்’ உண்டா?

துளிகூடக் கிடையாது. நான் கண்ட முகங்களில் கலைஞரின் முகம் மிக வித்தியாசமான ஒன்று. அவரிடம் இருக்கும் ‘எக்ஸ்பிரசிவ்’ தன்மையை நடிகர்களிடம் கூட எதிர்பார்க்கமுடியாது. ஒளிப்படமெடுக்க இவரிடம் ‘அப்பாயிண்மெண்ட்’ பெறுவது மட்டும்தான் கடினமே தவிர, பெற்றுவிட்டால், நம்பிடம் அவரை முழுவதுமாக ஒப்படைத்துவிடுவார். நாம் கேட்பதை மட்டுமல்ல; நாம் மனதில் நினைத்துக் கேட்கத் தயங்குவதையும் கற்பூரம்போல் புரிந்துகொண்டு “இதுதானே கேட்கிறீங்க..?” என்று இறங்கிவந்து ஒத்துழைப்புக் கொடுப்பார். சிவாஜி தொடங்கி இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் என் கேமராவில் பதிவு செய்திருக்கிறேன். ஸ்டில் கேமராவை எடுத்ததுமே நடிகர்களிடம் கேமரா ‘கான்சியஸ்’ வந்துவிடும். ‘கான்சியஸ்’ வந்துவிட்டால் உடம்மை விரைத்துக்கொள்வார்கள். உடல்மொழியிலும் முகத்திலும் இயல்புத் தன்மை விடைபெற்றுவிடும். ஆனால் கலைஞர் இதில் ஆச்சரியகரமான ஆளுமை. ‘ஹி இஸ் டோண்ட் பாதர் இன்ஃபிரண்ட் ஆஃப் கேமராஸ்’. நம்மைப் படமெடுக்கிறார்கள் என்கிற உணர்வை ஒருமுறைகூட நான் கண்டதில்லை. நான் மிகவும் ரசித்துப் படமெடுக்கும் ஆண் ஆளுமை என்றால் அது கலைஞர் மட்டும்தான். பெண் ஆளுமை எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா.

குடும்பத்தினருடன் யோகா

கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஒரு சாமானியத் தோற்றத்தில் இடுப்பில் லுங்கி கட்டுக்கொண்டு, கண்களில் கண்ணாடி அணியாமல் அவர் இருந்ததை ஒளிப்படங்களாக எடுத்தீர்கள். அது பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் உருவாக்கியது. இது எப்படிச் சாத்தியமானது?

அவர் முகம் கழுவி, பல் துலக்கி, நீராகாரம் சாப்பிடுவது, யோகா செய்வது, தனக்காகக் காத்திருக்கும் செல்லப் பிராணிகளைக் கொஞ்சுவது, நடைப்பயிற்சி செய்வது, பூபந்து விளையாடுவது என கலைஞரை ஒரு எளிய மனிதராகப் படம்பிடிக்கும் வாய்ப்பு எனக்கு மட்டுமே அமைந்தது. கலைஞரின் 74வது பிறந்த தினத்துக்காக முரசொலி பதிப்பித்த பிறந்த தின மலருக்காக ‘கலைஞருடன் ஒருநாள்’ என்கிற தலைப்பில் படங்களை எடுத்தேன். காலையில் படுக்கையில் அவர் கண்விழித்தபோது பட்பட்டென்று படங்களை எடுக்கத் தொடங்கினேன். இதைக் கலைஞரே எதிர்பார்க்கவில்லை.

நம் யோகாதானே கண்டிப்பாக முரசொலிக்காகத்தான் இருக்கும் என்று புரிந்துகொண்டு, முகம் கழுவிட்டுவந்து என் முகத்தைப் பார்த்தார். “நான் கலைஞருடன் ஒருநாள்” என்றேன். குழந்தையைப்போல் சிரித்தார். நான் எதிர்பார்த்த எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படி போஸ் கொடுக்கலாமா என்று அவர் யோசிக்கவும் இல்லை. உடம்பில் லுங்கி மட்டுமே கட்டிக்கொண்டு திறந்த மார்புடன் இருந்த படத்தை இன்றுவரை நான் வெளியிடவில்லை. அதைப் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். என்றைக்கும் அதை வெளியிடமாட்டேன்.

இத்தனை ஆண்டுகளாக கலைஞர் குடும்பத்துக்கும் உங்களுக்குமான உறவு எப்படிப்பட்டதாக இருக்கிறது?

அதை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு கலைஞரை ஒரு தனிமனிதராக உன்னதங்களின் உன்னதமாக உணர்ந்தவன் நான். அவரது கூர்மையான அன்பு கலந்த அறிவைக் கண்டு வியந்திருக்கிறேன். கலைஞரின் அரச சுற்றுப்பயணங்கள், வெளிநாட்டுப்பயணங்கள் என ஒரு ஒளிப்படக் கலைஞனாக என்னை மட்டுமே உடன்வர அனுமதித்திருக்கிறார். எனது கேமரா கண்கள் அவரைப் பின் தொடர வேண்டும் என்று விரும்பினார். பொது நிகழ்ச்சிகளில் நான் எங்கிருந்து படமெடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பதைக் கடைக்கண்ணால் நொடியில் இனங்கண்டு ஒரு தோழமையான புன்னகையை எனக்கு மட்டும் உதிர்ப்பார் பாருங்கள்...! அதற்கு விலையே கிடையாது. எவ்வளவு நெருக்கடியான கூட்டத்திலும் அவரது கண்கள் நான் எங்கிருக்கிறேன் எனத் தேடும்.

அதேபோல் கலைஞரின் குடும்பத்தில் தயாளு அம்மாள் குடும்பத்தினர் என்றாலும் ராசாத்தி அம்மாள் குடும்பத்தினர் என்றாலும் இரண்டு குடும்பங்களுக்குமே இன்றுவரை நான்தான் ஒளிப்படக் கலைஞன். கலைஞர் நல்ல நினைவுடன் இருந்தவரை அவரும் இப்போது அவர் இல்லையென்றாலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவர்களில் ஒருவராகத்தான் இந்த நிமிடம்வரை என்னை மதித்துக் கொண்டாடி வருகிறார்கள். எனது மகளின் திருமணத்துக்கு தயாளு அம்மாளுடன் கலைஞர் கலந்துகொண்டார். அப்போது மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, கனிமொழி கருணாநிதி என ஒவ்வொருவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டார்கள். கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புக்களும் திரண்டுவிட்டார்கள். அந்த அன்பில் நான் திக்கித் திணறிப்போனேன்.

நான் கற்பனை கூட பண்ணிப் பார்க்காத விருது கலைஞர் விருது. டத்தோ சாமிவேலு, கவிப்பேரரசு வைரமுத்து, கீ. வீரமணி, எஸ்பி.முத்துராமன் என்று பெரும் சாதனையாளர்களுக்குக் கொடுத்த அந்த விருதை எனக்குக் கொடுத்து அங்கீகரித்தார். இது ஒன்றுபோதும் கலைஞரின் பரந்த மனத்தை எடுத்துக்காட்ட!

கலைஞர் மு.கருணாநிதியின் பிரத்தியேக ஒளிப்படக் கலைஞர் என்ற முறையில் அவரது வாழ்க்கையை எப்படி மதிப்பிடுவீர்கள்?

கலைஞரைப்போல பிராப்தமும் கொடுப்பினையும் கொண்ட நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர் வேறு யாரும் கிடையாது என்று சொல்வேன். அந்த வகையில் கொடுத்து வைத்தவர் கலைஞர். 94ஆம் அகவைக்குப் பின்னர் உடல்நலம் குன்றி, பேச்சை இழந்து அவர் வீட்டில் இருந்தபோது அவரது குடும்பத்தினர் அவர் வாழ்ந்த வாழ்வுக்குக் களங்கம் வந்துவிடாதபடி அவரை எப்படிப் போற்றிப் பாதுகாத்தார்கள்! அவரை எப்படிக்கொண்டாடினார்கள்! தலைவர் இப்படி இருக்கிறாரே என்று அப்போது அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கவலைப்பட்டாலும் எத்தனைக் கட்டுக்கோப்பாக, ஒழுக்கமாக இருந்தார்கள். இது எப்படிச் சாத்தியமானது? கலைஞரின் ஆளுமைதான் அதைச் சாத்தியப்படுத்தியது. அவரது அன்புதான் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது.

கலைமாமணி யோகாவைத் தொடர்புகொள்ள: yogasavithphotocentre@gmail.com

முக்கிய குறிப்பு: இங்கே வெளியாகியிருக்கும் புகைப்படங்களின் காப்பிரைட் உரிமை ஒளிப்படக் கலைஞர் யோகவுக்கு உரியவை. அவரது அனுமதியின்றி இப்படங்களை மீள் பயன்படுத்த அனுமதியில்லை. இந்த நேர்காணலின் இணையப் பக்கத்தை மற்றவர்களுக்குப் பகிரலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x