Published : 16 Jun 2022 11:36 PM
Last Updated : 16 Jun 2022 11:36 PM

கண்பயிற்சி  Vs கண்ணாடி: நிஜமும் நம்பிக்கையும் - ஒரு விளக்கம்

பிரதிநிதித்துவப்படம்

கதை சொன்ன காணொளி: சில நாட்களாக கண்பயிற்சி குறித்த ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைப் பார்த்திருக்கலாம். மேலும் கீழும் பக்கவாட்டிலும் செல்லும் சிறிய பந்து அளவிலான உருண்டை வடிவ உருவங்களைப் பார்க்கச் சொல்லுகிறது அந்த காணொளி. அதில் ஒரு அடிக்குறிப்பு வேறு. இதைச் செய்தால் கண்ணில் பார்வை அதிகரிக்கும் என்று.

பலரும் அதைப் பார்த்துவிட்டு அந்த காணொளி என்ன சொல்கிறது என்றும், அப்படிப் பார்த்தால் கண்ணாடி போடுவதைத் தவிர்க்க முடியுமா என்றும் கேட்கிறார்கள். ஜப்பான் கண் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் மிகச் சிறந்த தயாரிப்பு என்ற குறிப்பினையும் சிலர் சேர்த்து அனுப்பி வருவதால் பலரையும் அது கவர்ந்ததில் வியப்பில்லை.

கண்ணாடி ஏன்: இது போன்ற கண்பயிற்சிகள் கண்ணின் தசைகளுக்கு நல்லதுதான். ஆனால் பார்வையை மேம்படுத்துமா என்பதுதான் இங்கே கேள்வியே? கண்களுக்குப் பயிற்சி கொடுத்து கண்ணாடியைக் கழற்றலாம் என்றும் விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து தங்கி பயிற்சி பெற்று கண்ணாடிக்கு நிரந்தர ‘பை பை’ சொல்லுங்கள் என்றும் சொல்வது போன்ற காணொளிகள் இதற்கு முன்னரும் பகிரப்பட்டிருக்கின்றன.

எனவே தற்போதைய காணொளியினையும் பார்த்துவிட்டு கண்ணாடியைக் கழற்ற முடியுமா என்று கேட்கிறார்கள். பார்வை குறைபாட்டுக்கு ( Defective Vision ) கண்ணாடி அணிகிறோம். வசதியானவர்கள் காண்டாக்ட் லென்சு அல்லது லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். மருந்து, மாத்திரை, சொட்டு மருந்து வேறு பயிற்சிகள் எதுவும் பயன் தராது. அது புரிய வேண்டுமென்றால் கண்ணின் அமைப்பைத் தெரிந்து கொள்வது நல்லது.

பார்வைக் குறைபாடு: பார்வைக் குறைபாடு (Defective vision) என்பது கண்ணின் உருவ அமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினையால் ஏற்படக்கூடியது. ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணின் கருவிழி, விழிலென்சு வழியாக ஊடுருவி விழித்திரையில் பிம்பம் விழுகிறது. இதற்கு இவை அனைத்தும் இயல்பாக இருக்க வேண்டியது அவசியம். கண்ணின் கருவிழிக்கும் விழித்திரைக்கும் உள்ள தொலைவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பார்வை குறைபாடு ஏற்படலாம்.

இதனால் பிம்பம் விழித்திரையில் விழாமல் விழித்திரைக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ விழுகிறது. மைனஸ் லென்சு (-) அல்லது பிளஸ் லென்சு ( + ) கொண்டு விழித்திரையில் பிம்பத்தை விழச்செய்து பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது. காய்கறி, கீரை சாப்பிடுவதன் மூலமோ, கண்பயிற்சி செய்வதன்மூலமோ, மருந்து மாத்திரையின் மூலமோ இதனைச் சரி செய்ய முடியாது.

> இது, மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர், மு.வீராசாமி எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x