தாய்க்கு நேர்ந்த சங்கடம்: மக்களுக்காக நடமாடும் கழிவறை அமைத்த பெங்களூரு காவல் அதிகாரி

காவல் உதவி ஆய்வாளர் சாந்தப்பா ஜடெம்மானவர்.
காவல் உதவி ஆய்வாளர் சாந்தப்பா ஜடெம்மானவர்.
Updated on
1 min read

பெங்களூரு: தனது தாய் எதிர்கொண்ட சங்கடத்தை தொடர்ந்து நடமாடும் கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் கர்நாடக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சாந்தப்பா ஜடெம்மானவர். அவரது முயற்சி பல தரப்பு மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

இந்தியாவின் சிலிகான் வேலி என அறியப்படுகிறது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு. அந்த நகரில் கோரகுண்டேபாளையா என்ற பகுதி மிகவும் முக்கியமான சந்திப்பாக இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இருந்தாலும் அங்கு முறையான கழிவறை வசதி இல்லை என தெரிகிறது. அது பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இப்போது அதற்கு ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளார் சாந்தப்பா.

விதான் சவுதா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக அவர் பணிபுரிந்து வருகிறார். ஆடவர், மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த நடமாடும் கழிவறையை அவர் அமைத்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை அவரே விளக்குகிறார்.

"ஒருநாள் எனது அம்மாவுடன் கோரகுண்டேபாளையாவிலிருந்து வெளியூர் செல்ல இருந்தேன். அப்போது அம்மா கழிவறை பயன்படுத்த வேண்டும் என சொன்னார். ஆனால் அங்கு கழிவறையே இல்லை. அதை அம்மாவிடம் சொல்ல முடியவில்லை. அது எனக்கும் மிகவும் சங்கடமாக இருந்தது. அப்போது முடிவு செய்தேன் அந்த இடத்தில் ஒரு பொது கழிவறை வேண்டுமென்று.

என் அம்மா எதிர்கொண்டதை யாரும் எதிர்கொள்ள கூடாது என நினைத்தேன். அது குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்பினேன். நான் மேற்கொண்ட முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன்.

எனது முயற்சி 100 நாட்களை எட்டியது. அதனை குறிப்பிடும் வகையில் அதே இடத்தில் நடமாடும் கழிவறை அமைத்துள்ளேன். எனது சொந்த செலவிலும், நல்லுள்ளம் கொண்ட சில மனிதர்களின் உதவியுடனும் இதை அமைத்துள்ளேன்" என்கிறார் அவர்.

கழிவறையை சுத்தம் செய்ய நபர் ஒருவரை அவர் பணி அமர்த்தியுள்ளார். இந்த கழிவறையை மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in