

உலக அளவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் முதன்மையானது இந்தியா. சர்க்கரை நோயின் தலைநகரம் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. உலகில் அதிக இளம் வயதினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு 150 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு சர்க்கரை நோய் இந்தியாவில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு பல தரவுகள் உள்ளன. இப்படி சர்க்கரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்தியாவில் 2020-ம் ஆண்டு ஆண்டில் 91,000 பேர் சர்க்கரை நோய் காரணமாக மரணம் அடைந்துள்ளனர். 2019-ம் ஆண்டை விட 13,000 பேர் கூடுதலாக 2020-ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளனர். குறிப்பாக 40 - 65 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ ரீதியாக சான்றிதழ் அளிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை சிவில் பதிவு அமைப்பின் கீழ் செயல்படும் பிறப்பு, இறப்பு பதிவு தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்படும்.
இதன்படி, 2020-ம் ஆண்டுக்கான அறிக்கையில் 91,000 பேர் மரணம் சர்க்கரை நோய் காரணமாக மரணம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு மொத்தம் மருத்து ரீதியாக சான்றிதழ் அளிக்கப்பட்ட மரணங்களில் 5 சதவீத மரணங்கள் சர்க்கரை நோய் மரணங்கள் ஆகும். இதில் ஆண்கள் 54,694 பேர். பெண்கள் 36,429 பேர் ஆகும்.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சர்க்கரை நோய் காரணமாக மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. 2015-ம் ஆண்டில் 40,293 பேரும், 2016-ம் ஆண்டில் 45,148 பேரும், 2017-ம் ஆண்டில் 65,441 பேரும், 2018-ம் ஆண்டில் 72, 674 பேரும், 2019-ம் ஆண்டில் 77,128 பேரும், 2020-ம் ஆண்டில் 91,123 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.
இதில் 1 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 52 பேர், 1 முதல் 4 வயது வரை உள்ளவர்கள் 70 பேர், 5 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 225 பேர், 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் 539 பேர், 25 முதல் 34 வயது வரை உள்ளவர்கள் 1852 பேர், 35 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 4468 பேர், 45 முதல் 54 வயது வரை உள்ளவர்கள் 12,552 பேர், 55 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் 23,012 பேர், 65 முதல் 69 வயது வரை உள்ளவர்கள் 14, 411 பேர், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32,940 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மாநிலங்களை பொறுத்த வரையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இங்கு 36,651 பேர் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 17,532 பேர் சர்க்கரை நோயால் மரணம் அடைந்துள்ளனர். 3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 10,535 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பரம்பரைத் தன்மை, உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு உணர்வு, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, சோம்பலான வாழ்க்கை முறை உள்ளிட்டவையால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் பெரும்பாலான காரணங்கள் வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படுபவதை ஆகும். எனவே சர்க்கரை நோய் வராமல் பாதுகாப்பு கொள்வது அவரவர் கையில்தான் உள்ளது.