Published : 15 Jun 2022 02:21 PM
Last Updated : 15 Jun 2022 02:21 PM

'கவனமாக விழுங்கவும்' - மோமோஸ் சாப்பிடுவோருக்கு எய்ம்ஸ் எச்சரிக்கை

பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய இறக்குமதி உணவுகளை ட்ரெண்டில் பின்னுக்குத் தள்ளிவிட்டு இளைஞர்களை ஈர்த்த உணவாக உள்ளது ஆசிய இறக்குமதியான மோமோஸ். அதன் ருசியும், அதற்கு தொட்டுக்கொள்ளத் தரப்படும் மோமோஸ் சட்னியும் இந்திய நாக்குகளை அதற்கு வெகுவாக அடிமையாக்கி வைத்திருக்கிறது.

ஆவியில் வேகவைக்கப்பட்டு வாயில் வைத்தவுடன் வழுக்கிச் செல்லும் மோமோஸ் வகை உணவை ஒருவர் சாப்பிட ஆரம்பித்தால் இரண்டு ப்ளேட்டுகளையாவது லபக்கென்று உள்ளே தள்ளுவது எளிது. அதனாலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் உணவாக அது உருவெடுத்துள்ளது. ஆனால், அண்மையில் மோமோ சாப்பிட்டு அது தொண்டையில் அடைத்துக் கொண்டதால் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தது மோமோஸ் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கை ஃபரன்சிக் இமேஜிங் (Forensic Imaging) என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

அந்த எச்சரிக்கை குறிப்பு: அண்மையில் 50 வயது நபர் ஒருவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். அவரது உடற்கூறாய்வின்போது அவரது மூச்சுக்குழாயில் ஒரு முழு மோமோஸ் சிக்கியிருந்தது. அதனால் மூச்சுத்திணறி அந்த நபர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். வாயில் வைத்தவுடன் வழுக்கிச் செல்லும் மோமோஸின் தன்மையும், அதன் சிறிய அளவுமே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக் காரணம். அதனால் மோமோஸ் சாப்பிடும்போது அதை நன்றாக மென்று உண்ண வேண்டும். இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மோமோஸ் மட்டுமல்ல எந்த ஓர் உணவையும் நொறுங்கத் திண்ண வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்களின் வலியுறுத்தலும் கூட.

மோமோஸ் என்பது அரிசி மாவுக்குள் காய்கறி அல்லது இறைச்சிக் கலவையை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து சமைக்கும் உணவு. மோமோஸின் பிறப்பிடம் திபெத். அது அங்கிருந்து நேபாளத்துக்கு வந்தது. அங்கே பல்வேறு வகையிலும் புதுமைகள் சேர்க்கப்பட்டு இந்தியாவுக்குள்ளும் வந்தது.

டார்ஜிலிங், லடாக், சிக்கிம், அசாம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரபலமடைந்து தற்போது தென் தமிழகத்தின் கடைக்கோடி வரை மோமோஸ் விற்பனை களைகட்டியுள்ளது. பாகிஸ்தானிலும் மோமோஸ் வகை உணவை உண்ணும் பழக்கம் இருக்கிறது. அங்கே அதனை மம்டூ என அழைக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x