Published : 15 Jun 2022 09:04 AM
Last Updated : 15 Jun 2022 09:04 AM

முதியோரை மதிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? | ஜூன் 15 - முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், சென்னை.

கடவுளுக்கு நிகராக முதியோரைக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. முதியோரை மதிக்கும் பண்பாடென்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட முதியவர்கள் இன்று சுமையாகவோ, தண்டனையாகவோ கருதப்படுகிறார்கள். இப்பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது. தாம் இருப்பதே தேவையற்ற ஒன்று என்று கருதத் தொடங்குகிறார்கள்.

சமீபகாலமாக கிராமங்களிலும் முதியோர் மதிக்கப்படுவதில்லை. நகர்புறங்களில் பல குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு தக்க மரியாதை கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வறுமை. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களில் நிதி வசதி குறைவால் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்களே. நிதி வசதி குறைவாக இருப்பதால் தன் குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யவே முடியாத நிலையில், முதியவர்களை கவனிப்பதும் அவர்களுக்கு தக்க மரியாதை கொடுப்பதும் அவசியம் இல்லை என்ற ஒரு நிலை ஏற்படுகிறது. ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறும் முதியவர்களை, இளைய சமுதாயம் கூட்டுக் குடும்பத்தில் வைத்துக் கொண்டு, பணத்திற்காக முதியவர்களை ஓரளவு மதித்து வருகிறார்கள்.

இதற்கு அடுத்ததாக, குடிப்பழக்கம் அதிகம் உள்ள இளைய சமுதாயத்தினரால் முதியவர்கள் மிகவும் புறக்கணிப்படுகிறார்கள். இளைஞர்கள் சந்திக்கும் குடும்ப பாரத்தை முதியவர்கள் அவமதிப்பை ஒரு வடிகாலாக எடுத்துக்கொள்கிறார்கள். கரோனா வேகமாப் பரவும் காலகட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லை. அதனால் வருமானம் ஏதும் கிடையாது. குடும்பத்தை நடத்துவதே பெரிதும் சிரமமாக இருக்கும் இக்கால கட்டத்தில் பெரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இதை முதியவர்கள் தங்களை இளைஞர்கள் மதிப்பதில்லை என்று எண்ணத் தொடங்குகிறார்கள்.

இதற்கு மாறாக வசதி படைத்தவர்கள் வீட்டிலும் எல்லோரும் முதியவர்களை நன்றாக மதிக்கப்படுகிறார்கள் என்று எண்ணிவிட முடியாது. காசோலையில் பொய் கையெழுத்து இட்டு பணத்தை அபகரிப்பதும், பெரியவரைத் துன்புறுத்தி தன் பெயருக்கு சொத்தை எழுதித் தரும்படி கட்டாயப்படுத்துவதும் அநேக குடும்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இன்றைய இளைஞர்களின பிரச்சினைக்கு தீர்வு; முதலில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுடன் சமூக நலத் துறையின் மூலமாகவும் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் மூலமாகவும் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். இளைஞர்களின் வருமானம் எவ்வளவு, எத்தனை பேர் படித்தவர்கள், எத்தனை பேர் படிக்காதவர்கள், எத்தனை பேர் வேலைக்குப் போக சம்மதம் தெரிவித்துள்ளார்கள் போன்ற விபரங்களை சேகரிக்க வேண்டும். முடிந்தளவிற்கு அவர்களுக்கு வேலை பெற்றுத் தர உதவ வேண்டும். மேலும் விருப்பமுள்ள படித்த இளைஞர்களுக்கு வங்கியின் மூலம் நிதி உதவி பெற உதவ வேண்டும்.

மதுப் பழக்கம் உள்ள இளைஞர்களுக்கு, மருத்துவமனைக்குச் சென்று தக்க சிகிச்சை பெற உதவ வேண்டும். குடிப்பழக்கத்தை கைவிட உளவியல் நிபுணர் மூலம் முதியவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்து பேசி அவர்களிடமுள்ள தலைமுறை இடைவெளியை குறைத்து நல்ல குடும்ப சூழ்நிலையை உருவாக்கலாம். மதுவை பூரணமாக ஒழிப்பது தான் இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.

முதியோரை அவமதித்தல் என்பது நிதி வசதி படைத்த பணக்காரக் குடும்பங்களிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதைத் தவிர்க்க முதியவர்கள், நல்ல குடும்ப சூழ்நிலையிருக்கும் பொழுதே உயில் எழுதி வைத்துவிடுவது நல்லது.

முதியோர்களின் உடல் நலத்திற்கு செலவு செய்வது, தேவையற்றது என்று இளைஞர் சமுதாயம் எண்ணுகிறது. இதை ஓரளவிற்கு சரி செய்ய நோயுற்று தொடர் சிகிச்சை பெறும் முதியவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை மருந்தை இலவசமாகக் அரசாங்கம் கொடுக்கலாம் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடி, காது கேட்கும் கருவி, பல் செட் மற்றும் கைத்தடி போன்ற உபகரணங்களை இலவசமாக கொடுக்க அரசு முன் வரலாம். மேலும் நாள்பட்ட நோய்களான உதறுவாதம், மறதி நோய், புற்று நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றைக் கவனித்து சிகிச்சையளிக்க தாலுக்கா அளவில் தொடர் சிகிச்சை மையங்களை தொடங்கலாம். இது ஓரளவிற்கு இளைஞர்களின் பாரத்தை சற்றே குறைக்க உதவும்.

ஐக்கிய நாடுகள் சபை, முதியோர்களின் கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ம் தேதியை ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்ச்சி ஊட்டும்’ நாளாக 2006-ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.

ஜூன் மாதம் 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவிகள் ‘முதியோர் அவமதித்தலை’ எதிர்த்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து வருடக்கணக்கில் உறுதிமொழியை எடுத்துக் கொள்வதின் மூலம் வருங்கால இளைய சமுதாயம், முதியோரை மதிக்கும் சமுதாயமாக உருவாகும் என்பது நிச்சயம்.

முதியோர்களை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டி தேசிய அளவில் ‘பத்மா விருதுக்கு’ நிகரான விருதினை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யலாம். ‘முதியோரை மதித்தல்’ பற்றிய கட்டுரைகள் பள்ளி பாடநூலில் இடம்பெறச் செய்யலாம்.

இன்றைய இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண்பது மற்றும் இன்றைய இளைஞர்களுக்கு முதியோரை மதிப்பதைப் பற்றி தொடர்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தால் முதியோரை அவமதித்தல் என்பது இல்லாமலேயே போய்விடும்.

உறுதிமொழி: ‘முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் - இவை வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ - எந்த உருவில் வந்தாலும் - அவற்றைக் களைவதற்காக - முளையிலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன். மேலும், அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் - அதாவது உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், உரிய அங்கீகாரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.’

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ம் தேதி பள்ளி மாணவ - மாணவிகள் மட்டுமின்றி இளைய சமுதாயத்தினரும் இந்த உறுதிமொழியை எடுத்து அதை தவறாமல் கடைபிடித்து வந்தால் வருங்கால சமுதாயம் முதியோரை வணங்கும் சமுதாயமாக, மாறுவது உறுதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x