

வாடிக்கையாளர்கள் என்ன பொருட்களை அடிக்கடி மறந்துவிட்டுச் செல்கிறார்கள், எந்த நகரங்களில் இந்த மறந்துவிட்டுச் செல்லும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன, வாரத்தின் எந்த நாளில், நாளின் எந்த நேரத்தில் அந்தப் போக்கு அதிகம் உள்ளது போன்றவற்றைக் குறித்த ஆச்சரியமான தகவல்களை உபெரின் பட்டியல் நமக்கு அளிக்கிறது. மதிய வேளையில் குறிப்பாக 1 முதல் 3 மணிக்குள் உபெர் காரில் பயணிப்பவர்களே அதிகமான அளவில் பொருட்களை மறந்துவிட்டுச் செல்பவர்களாக இருக்கின்றனர்.
சுவாரசியமான பட்டியல்
பொதுவாக மொபைல், பர்ஸ், பைகள் போன்றவற்றை காரில் பயணிகள் மறந்துவிட்டுச் செல்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வே. ஆனால், உபெர் வெளியிட்டு இருக்கும் இந்தப் பட்டியலில் சில அசாதாரண பொருட்கள் இடம்பெற்றுள்ளன. பிறந்தநாள் கேக், ராஜஸ்தானின் பிரபலமான கேவார் இனிப்பு, மாம்பழங்கள், கிரிக்கெட் மட்டைகள், டம்பெல்ஸ் (உடற்பயிற்சிக் கருவி) ஆகியவற்றை உள்ளடக்கிய அந்தப் பட்டியல் சுவாரசியமானதாக உள்ளது.
அமெரிக்காவின் விநோத பட்டியல்
இந்தியாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் மக்கள் தவறவிட்டுச் செல்லும் பொருட்கள் சற்று விநோதமாக உள்ளன. அமெரிக்காவின் பட்டியலில் பாட்டியின் பற்கள், புல் வெட்டும் இயந்திரம், மரம் வெட்டும் இயந்திரம், உள்ளாடை போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன.
மறதியும் நகரங்களும்
உடைமைகளை மறந்துவிட்டுச் செல்லும் போக்கு எல்லா நகரங்களிலும் இருக்கின்றன. இருப்பினும், மும்பையில் இது உச்சத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. அதைத் தொடர்ந்து லக்னோ, கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன.
2020 ஆம் ஆண்டில், உபெர் இதே போன்ற பட்டியலை வெளியிட்டபோது, அப்போதும் மும்பையே முதலிடத்தில் இருந்தது. அதில் டெல்லி நான்காம் இடத்திலும், கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அந்தப் பட்டியலில் அப்போது லக்னோ இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக பிரயாக்ராஜ் மூன்றாவது இடத்திலிருந்தது.
மறதியும் நேரமும்
உபெரின் கூற்றுப்படி, மறதிக்கு நேரம்கூட இருப்பதாகத் தெரிகிறது. 2022 ஆம் ஆண்டில், மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சவாரி செய்பவர்களே அதிகபட்ச பொருட்களை மறந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மறதிக்குப் பிடித்த நாட்கள்
உபெர் ஆராய்ச்சியின்படி, சில பொருட்களை இழப்பதற்கு ‘பிடித்த நாட்கள்’ இருப்பதாகவும் தெரிகிறது. உதாரணமாக, மக்கள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் ஆடைப் பொருட்களையும், மன அழுத்தம் நிறைந்த புதன்கிழமைகளில் தங்கள் மடிக்கணினிகளையும் மறந்துவிட்டுச் செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் பாட்டில்களையும், திங்கட்கிழமைகளில் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஹெட்ஃபோன்களையும் மறந்துவிட்டுச் செல்லும் போக்கு மக்களிடம் அதிகம் உள்ளது.
முதலிடம் பிடிக்கும் பொருட்கள்
பொதுவாக உபெர் கார்களில் மறந்து விட்டுச் செல்லும் பொருட்களின் பட்டியலில், மொபைல், ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள், வாலட்கள், பைகள் போன்றவை முதலிடம் வகிக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து மளிகைப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், ஃபோன் சார்ஜர்கள் போன்ற பொருட்கள் உள்ளன.
அதிகபட்ச எண்ணிக்கையிலான பிரயாணிகள் தங்கள் உடைமைகளை விட்டுச் சென்ற நாட்களையும் உபெர் கண்டறிந்துள்ளது. அதன் படி, மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்த எண்ணிக்கை அதிகம் உள்ளது.
நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வழி
தவறவிட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைப்பது என்பது எந்த ஒரு நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையை எளிதில் அதிகரிக்கும் வழி. இதன் காரணமாக, தவறவிட்ட பொருட்களை மீண்டும் பயணிகளிடம் ஒப்படைப்பதில் உபெரும் தொய்வின்றி ஈடுபடுகின்றன.
தவறவிட்ட பொருட்களைக் கண்டுபிடிக்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்குத் தன்னுடைய செயலியின் மூலம் உபெர் அளித்திருக்கிறது. அந்தச் செயலியில் சில எளிய உள்ளீடுகளின் மூலம் வாடிக்கையாளர்கள் ஓட்டுநரைத் தொடர்புகொள்ள முடியும். தங்கள் பொருள் காரில் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
மறக்கும் பட்டியலில் முதலிடம் பிடித்த 10 பொருட்கள்
நாளும் பொருளும்
முதல் நான்கு 'மறதி' நகரங்கள்