சீறுநீரக பாதிப்புகளும் பாதுகாப்பு வழிகளும் - மருத்துவரின் A to Z வழிகாட்டுதல்

சீறுநீரக பாதிப்புகளும் பாதுகாப்பு வழிகளும் - மருத்துவரின் A to Z வழிகாட்டுதல்
Updated on
4 min read

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதேபோல நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது. இரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரைப் பிரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சிறுநீரக நோய் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் அவரால் உணரமுடியாது. குழந்தைகளுக்கு கிரியாட்டினின் அளவு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர்.வி.ராமசுப்ரமணியனிடம் சிறுநீரகங்கள் குறித்த அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பேசினோம்...

டாக்டர்.வி.ராமசுப்ரமணியன் MD DM, பேராசிரியர் மற்றும் சிறுநீரகவியல் துறைத் தலைவர், மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, திருநெல்வேலி.
டாக்டர்.வி.ராமசுப்ரமணியன் MD DM, பேராசிரியர் மற்றும் சிறுநீரகவியல் துறைத் தலைவர், மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, திருநெல்வேலி.
சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மதுஅருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் பிரச்சினைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும். சுகாதாரக் குறைவால் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப்பாதையைத் தொற்றும்போது 'சிறுநீரக அழற்சி' ஏற்பட்டு குளிர்க்காய்ச்சல் வரும். சிறுநீர் செல்லும்போது எரிச்சல் வலி ஏற்படும். சிறுநீர் கலங்கலாகப் போகும்.  

சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கி, சிறுநீரக கற்கள் ஏற்படும். ஆகவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும். இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். அப்போது சரியான தூக்கத்தை மேற்கொள்ளதால் இருந்தால், சிறுநீரகமானது நேரடியாக பாதிக்கப்படும்.

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.

உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும்.

வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

சிறுநீரகத்தின் பணிகள்

இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது. அதிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது.

நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான். தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150, 180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்திச் செய்கிறது.

அறிகுறிகள்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவது குறையும். பசி குறையும். வாந்தி வரும். தூக்கம் குறையும். கடுமையான சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றுவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்துவிட்டால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ஆனால் சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மருத்துவச் சிகிச்சை மட்டும் போதாது.'டயாலிசிஸ்' என்கிற ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டியதும் வரும்.

சிறுநீரகக் கல்

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் கால்சியம் பாஸ்பேட், ஆக்சலேட் என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும் போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து கல் போலத் திரளும்.

ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். சிறுநீரில் ரத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். காசநோய், புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே சிறுநீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சிறுநீரகம் காக்க சில வழிகள்...

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக் கண்டம், சமையல் சோடா, வடாம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், சேவு, சீவல், சாக்லேட், பிஸ்கட், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

புகை பிடிக்காதீர்கள்.

தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரை ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை செக்அப் செய்துகொள்ள வேண்டும்.

நாம் பொதுவாக நம் வீடுகளில் அன்றாடம் சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கும்போது எந்தெந்தப் பொருட்கள் எவ்வளவு செலவாகி இருக்கிறது என்று ஒரு கணக்குப் பார்ப்போம். மற்ற பொருட்களில் இவ்வளவு செலவு ஆகியிருக்கிறது. இவ்வளவு மீதி இருக்கிறது என்பதை கரெக்டாக வைத்திருப்போம். ஆனால் உப்பில் மட்டும் இதுவரை இவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்று ஒரு வீட்டிலும் அளவும் வைப்பது இல்லை. எனவே அதனை முறைப்படுத்த வேண்டும். உங்கள் வீட்டில் இனி உப்பு செலவு மற்றும் பயன்பாட்டுக்கும் கணக்கு எழுதுங்கள்.

10-ல் ஒருவருக்கு சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதாக வந்த சமீபத்திய ஒரு ஆய்வறிக்கை நம்மையெல்லாம் கொஞ்சம் பயம்கொள்ளச் செய்தது. அதனை எப்படி 10ல் ஒருவர் பாதிக்கிறார்கள் என்பதை எதனை அளவீடாக வைத்து கணக்கிடுகிறார்கள்?

KDIGO (Kidney Disease Improving Global Outcomes) என்கிற அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு கிட்னி பாதிப்புகளை முன்னதாகவே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக சில வழிகளைச் சொன்னார்கள். அதில் ஜி.எப்.ஆர் என்கிற பாராமீட்டர் செயல்பாடுகளை வைத்துத்தான் சொல்கிறோம்.

இந்த ஜி.எப்.ஆர் (Glomerular Filtration Rate) நார்மலாக ஒரு 120 எம்எல் நிமிடத்துக்கு என்று சொல்கிறது. ஆனால் இந்த அளவு யாருக்கும் வராது. பொதுவாக ட்ரான்ஸ்பிளான்ட்ல கிட்னி தானம் பண்ணுகிற டோனருக்கு கூட அந்த அளவு இருக்காது. ஒரு 90 என்கிற அளவில் தான் இருக்கும். இதனை நாம் நார்மல் என்றுதான் கணக்கிடுகிறோம். ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்க்கும்போது கிட்னிகளில் ஒன்றுக்கொன்று அளவு வேறுபாடுகள் இருந்தாலோ, யூரின்ல அல்புமின் இருந்தாலோ அதனை ஸ்டேஜ் 1 என்று கொண்டு வந்துவிட்டார்கள்.

15 எம்எல் கீழே போகும்போது ஸ்டேஜ் 5 ஆகும். இந்த நோயாளிகளுக்குத்தான் ட்ரான்ஸ்பிளாண்ட் சிகிச்சைத் தேவைப்படும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஸ்டேஜிலும் உள்ள டேட்டாவை வைத்து 10ல் ஓருவருக்கு அல்லது 5ல் ஒருவருக்கு பாதிப்பு என்று கணக்கிடுகிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பு சிறுநீரகம் சார்ந்த நோய்கள் 3-வது இடத்தில்தான் இருந்தது. இன்று பார்த்தால் பெருகியிருக்கும் சிறுநீரக நோய்களுக்கு முக்கிய பாதிப்பாக பார்க்கப்படுவது டயாபட்டீஸ் தான்.

சிறுநீரக வியாதிகள் சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இன்று உவரி, கன்னியாகுமரி போன்ற கடற்கரை கிராமங்களில் இருந்து வரும் ஏராளமானோர்களுக்கு சர்க்கரையோ, ரத்தக்கொதிப்போ கிடையாது. ஆனால் அவர்களுக்கு பரிசோதனையின் போது நாட்பட்ட சிறுநீரக நோய் இருக்கிறது. இந்த மாதிரி அறிகுறிகள் இல்லாமல் பாதிப்படையும் சிறுநீரக நோய்களை இப்போதுதான் கணக்கெடுத்து வருகிறோம்'' என்கிறார் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in