

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா என உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இருந்தாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 2022-க்கான உலக சமத்துவமின்மை அறிக்கையில் இந்தியாவில் பணம் படைத்தவர்கள், நடுத்தர மக்கள் மற்றும் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் ஈட்டும் வருமானத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், இந்தியாவின் பன்முகம் கொண்ட சமத்துவமின்மை அப்பட்டமாக தெரிவதாக சொல்கின்றனர் ஆய்வை மேற்கொண்ட வல்லுநர்கள்.
இந்த அறிக்கை பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி தலைமையில் தயாரானது. இதில் லூகாஸ் சான்சலும் உட்பட இன்னும் பிற ஆய்வாளர்கள் பங்கு கொண்டனர். பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான வருமானம் ஈட்டும் திறன் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் வித்தியாசம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த வருமானத்தில் டாப் 10 சதவீதம் பேர் 57 சதவீதத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இந்தியா இருந்தபோது இந்த 10 சதவீதத்தினர் ஈட்டி வந்த சராசரியான 50 சதவீதத்தை காட்டிலும் அதிகம். அதே நேரத்தில் கடைசி 50 சதவீதத்தை சார்ந்த மக்கள் வெறும் 13 சதவீத வருமானத்தை மட்டுமே ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்களும் அடங்குவர்.
மேலும், கடந்த ஜனவரி மாதம் வெளியான ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அறிக்கையில் 2021-இல் மட்டும் 84 சதவீத குடும்பங்கள் இந்தியாவில் வருமான இழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102-இல் இருந்து 142 என அதிகரித்துள்ளது. உலக அளவில் நிலவி வரும் வறுமையை ஒழிக்கும் நோக்கில் இயங்கி வருகிறது ஆக்ஸ்ஃபாம்.
இந்த இரண்டு ஆய்வுகளையும் படிக்கும்போது பிரிட்டிஷ் கவிஞர் ஷெல்லி எழுதிய “பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இதை சிவாஜி படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் சொல்லியிருப்பார். இந்த இரண்டு ஆய்வுகளும் வெறுமனே வருமான ரீதியிலான சமத்துவமின்மை குறித்து மட்டும் பேசவில்லை. அதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளன.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில் இடதுசாரிகளும், வலதுசாரிகளும் ஒரே புள்ளியில் இணைவார்கள். குறிப்பாக பிறப்பு, பிராந்தியம், இனம், பாலினம், நிறம் போன்ற பேதங்கள் இங்கு கணக்கில் கொள்ளப்படாது. இருந்தாலும் 2018-19 காலமுறை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்தியா அதிலிருந்து நெடுந்தூரம் விலகி நிற்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதத்திற்கு மேல் உள்ளதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதில் நிதிச் சிக்கல் காரணமாக 2008 மட்டும் சேராது. இருந்தாலும் இந்த வருமானம் நாட்டின் விளிம்புநிலை மக்களிடம் செல்லவில்லை எனத் தெரிகிறது. இந்த முடிவுகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது பிரேசிலை காட்டிலும் எல்லோருக்குமான வாய்ப்பில் சமத்துவமின்மை இந்தியாவில் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.
சம்பளம் ஈட்டும் நபர்களில் 30 முதல் 40 சதவீதத்தினருக்கு மட்டுமே தொழிலாளர் நலன் சார்ந்த பாதுகாப்புகள் கிடைக்கின்றன. இது கரோனா தொற்றுக்கு முன்னர் இருந்த கணக்கீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் செய்பவர்களின் நிலை மிகவும் மோசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 60 சதவீத தொழிலாளர் திறனை இவர்கள் ஆட்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகளை தீர்மானிக்கும் சாதி, இனம் மற்றும் பின்புலம்: வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பில் சுமார் 30 சதவீதத்தை மக்களின் சாதி, இனம் மற்றும் பின்புலம் போன்றவை தீர்மானிப்பதாக தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் பல ஆண்டுகளாக சாதிய ரீதியிலான வேறுபாடு இருந்து வருவது இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு மூலம் பட்டியலின மக்கள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு சாதிய ரீதியான இட ஒதுக்கீடு மூலமாக அவர்களது உரிமைகள் உறுதி செய்யப்படுகிறது. ஆனால், அதன் மூலம் உயர்கல்வி, பொதுத்துறை நிறுவனப் பணிகள், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் போன்றவை மட்டுமே உறுதி செய்யப்படுகிறது. இருந்தாலும் மற்ற சமூக மக்களுடன் ஒப்பிடும்போது இந்த சமூகத்தினருக்கான வருமானம் ஈட்டும் வாய்ப்பில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 30 முதல் 35 சதவீதம் என்ற எண்ணிக்கையில்தான் இந்த சமூகங்கள் உள்ளன.
மொத்தம் உள்ள 30 சதவீதத்தில் இந்த சாதிய ரீதியிலான காரணத்தால் வருமானம் ஈட்டும் வாய்ப்பை தீர்மானிக்கும் சமத்துவமின்மையின் எண்ணிக்கை வெறும் 7 சதவீதத்திற்கும் குறைவானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சதவீதத்தை பாலினம் மற்றும் குடும்ப பின்னணி தீர்மானிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற இந்திய மாநிலங்களில் பாலின ரீதியிலான வேறுபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான வேலைவாய்ப்பு விகிதத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு இடையில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய - அமெரிக்க பொருளாதார வல்லுநரான சைமன் கஸ்நெஸ்ட்ஸ் கூற்றுப்படி பார்த்தால். “பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது, சந்தை வாய்ப்புக்கான சக்திகள் முதலில் அதிகரித்து, பின்னர் பொருளாதார சமத்துவமின்மையை குறைக்கின்றன” என தெரிவித்துள்ளார். அவரது பார்வையில் இது தற்காலிகம் என சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் இதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் 2019-இல் வெளியான ஆய்வின் படி சமத்துவமற்ற வாய்ப்பு, பொருளாதாரத்தை மங்கச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வருமான வாய்ப்புக்கான சமத்துவமின்மைக்கு சாதி, இனம் மற்றும் குடும்பப் பின்னணி மட்டுமல்லாது இன்னும் பிற காரணங்கள் டஜன் கணக்கில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதைக் களைவதற்கான கொள்கை முடிவுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் குறைந்த அளவே பலன் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நிலவும் வாய்ப்பு சார்ந்த சமத்துவமின்மை குறித்து மேற்கொள்ளப்படும் சிறந்த ஆய்வுகள் மூலம் செயல்திறன் மிக்க கொள்கைகளை நடைமுறைப்படுத்தலாம். அதன் மூலம் இதற்கு தீர்வு காண முயற்சி செய்யலாம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தகவல் உறுதுணை - தி கான்வர்சேஷன்