

சென்னை கிழக்குக் கடற்சாலை என்றாலே மாமல்லபுரம்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். மாமல்லபுரம் செல்லும் வழியில் முட்டுக்காடு, முதலைப் பண்ணை, புலிக்குகை ஆகிய பகுதிகளுக்கும் விசிட் அடிப்பவர்கள் உண்டு. இந்த இடங்களைத் தாண்டி கிழக்குக் கடற்கரை சாலையில் மண்மேடாகி போனாலும் கம்பீரம் குலையாமல் இருக்கும் ஒரு கோட்டையும் உண்டு. அது, ஆலம்பரை கோட்டை.
இயற்கை எழில் கொஞ்சும் கிழக்குக் கடற்கரை சாலையில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் கடற்கரையோரம் அமைந்துள்ளது ஆலம்பரை கோட்டை. ஒரு புறம் கடலாலும் மூன்று புறம் கழிமுகத்தாலும் சூழப்பட்ட பகுதி இது. எனவே இடைக்கழிநாடு என அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில்தான் வங்கக் கடலைப் பார்த்தபடி ஆலம்பரை கோட்டையின் நினைவுகளை அதன் எச்சங்கள் தாங்கி நிற்கின்றன. பழவேற்காடு கோட்டை, சதுரங்கப்பட்டினம் கோட்டையைப் போல, இதை டச்சுக்காரர்களோ போர்ச்சுகீசியர்களோ உருவாக்கவில்லை. முகலாய அரசர்கள்தாம் இக்கோட்டையைக் கட்டினர். கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் இதைக் கட்டியுள்ளனர். பழங்கால கருங்கல் கோட்டையைப் போல அல்லாமல், செங்கல், சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே ஆலம்பரை கோட்டையை எழுப்பியுள்ளனர்.
சதுர வடிவிலான கண்காணிப்பு மாடங்களுடன் 15 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோட்டையை அந்தக் காலத்தில் முகலாயர்கள் கட்டியிருக்கிறார்கள். கி.பி. 1735ஆம் ஆண்டு நவாப் தோஸ்த் அலிகான் என்கிற முகலாய அரசர் இப்பகுதியை ஆண்டபோது இந்தக் கோட்டைப் பகுதி சிறந்த துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்திருக்கிறது. 1750ஆம் ஆண்6டு இந்தக் கோட்டையைத் தங்கள் வசமாக்க ஆங்கிலேயர்கள் முயன்றனர். அப்போது ஆங்கிலேயர்களை எதிர்க்க பிரெஞ்சு தளபதி டியூப்ளஸ் உதவினார். இதனால் டியூப்ளஸுக்கு இப்பகுதியை ஆண்ட சுபேதார் முசார் பர்ஜங் இக்கோட்டையைப் பரிசாக அளித்தார். ஆனால், பிரெஞ்சு ஆட்சி இங்கே முடிவுக்கு வந்தபோது 1760களில் ஆங்கிலேயர்கள் வசமானது ஆலம்பரை கோட்டை.
இந்தக் கோட்டையைக் கைப்பற்ற நடந்த போர்களால் கோட்டையின் பெரும்பாலானப் பகுதிகள் சிதைந்துபோயின. தொடர் படையெடுப்புகள், இயற்கைச் சீற்றத்தால் இக்கோட்டை உருக்குலைந்து போனது. தற்போது கோட்டையின் உடைந்த சுவர்கள் மட்டும் இக்கோட்டையின் வரலாற்றைச் சுமந்தபடி நிற்கின்றன. கோட்டை நுழைவு வாயில் அருகே இருபுறங்களிலும் படிக்கட்டுகள் காணப்படுகின்றன. கோட்டையின் கீழ்ப்பகுதியில் 100 மீட்டர் நீளத்துக்குப் படகுத் துறை உள்ளது. அந்தக் காலத்தில் கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்க இந்தப் படகுத்துறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படகுத் துறையிலிருந்து சரிகைத் துணி வகைகள், உப்பு, நெய் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.
கிழக்குக் கடற்கரை சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலம்பரை கோட்டை தற்போது சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்ந்துவருகிறது. கோட்டையைத் தமிழ்நாடு தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.