

பொள்ளாச்சி: வால்பாறையில் மீட்கப்பட்ட புலிக்குட்டி 8 மாத சிகிச்சைக்கு பின்னர், நேற்று முன்தினம் மானாம்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி களத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பகுதியில், கடந்த ஆண்டு செப். 28-ல் முள்ளம்பன்றியை வேட்டையாடியதில், காயமடைந்த ஒரு வயது ஆண் புலி நடக்க முடியாமல் மயங்கியது. மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர், காயம்பட்ட புலிக்குட்டியை மீட்டு, வன உயிரின மீட்பு மையத்தில், கூண்டில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அதிக அளவில் புலிக்குட்டியை காண திரண்டதால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், வால்பாறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத மந்திரிமட்டம் பகுதிக்கு புலிக்குட்டி இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உடல் தேறிய நிலையில், பிற புலிகளைப் போல வேட்டையாட பயிற்சி அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, அப்பகுதியில் 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 6 மீட்டர் உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது. 50 அடி தொலைவில் சோலார் மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவடைந்த நிலையில், பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கூண்டில் பயிற்சிக்காக நேற்று முன்தினம் புலிக்குட்டி விடப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “சிகிச்சைக்கு பின் புலிக்குட்டி ஆரோக்கியமாக உள்ளது. வேட்டையாட கற்றுத்தரும் வகையில் பெரிய அளவிலான கூண்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
வேட்டையாடி பழகுவதற்காக, முயல், கோழி, மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் கூண்டுக்குள் விடப் படும். புலியின் செயல்பாடு குறித்து மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஓராண்டு பயிற்சிக்கு பின், அரசின் உத்தரவு பெற்று புலி வனத்தில் விடப்படும்” என்றனர்.