34 ஆண்டுகளுக்கு பின் சாயல்குடி அரசுமேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்.
34 ஆண்டுகளுக்கு பின் சாயல்குடி அரசுமேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்.

‘மருத்துவமனையில் உதித்த ஏக்கம்’ - 34 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த சாயல்குடி அரசுப் பள்ளி மாணவர்கள்

Published on

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1987-88ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆண்டுகள் பல கடந்தாலும் பள்ளிப் பருவ வாழ்க்கையையும் பால்ய நண்பர்களையும் நினைத்துப் பார்ப்பது நமக்கு இனிமையையும் உற்சாகத்தையும் தருகிறது. அவ்வகையில் 34 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடன் பயின்ற பள்ளிப் பருவ நண்பர்களைச் சந்திக்க ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் சிங்கப்பூரில் இருந்து சாயல்குடி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த அருள்மலைச் செல்வன் (50) சிங்கப்பூர் கினாக்ஸிஸ் சாப்ட்வேர் கம்பெனியில் இஞ்சினியராக இருக்கிறார். இவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது தன்னுடன் பயின்ற சாயல்குடி பள்ளி நண்பர்களைத் தேடிப் பார்த்திருக்கிறார்.

பள்ளியில் பயின்றபோது எடுத்த குழு புகைப்படம் தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. சமூக வலைதளங்கள் மூலம் தனது உடன் பயின்ற ராஜகுரு, ஜமால் முகமது, ராஜபாண்டி ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் மூலம் உடன் படித்த பல நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கி பள்ளிப் பருவ நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

சிங்கப்பூரிலிருந்து சாயல்குடி வந்த இஞ்சினியர்

ஞாயிற்றுக்கிழமை மாலை சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிங்கப்பூரிலிருந்து அருள்மலைச் செல்வனும், தமிழகத்தின் பிற பகுதியிலிருந்து 14 நண்பர்களும் வந்திருந்தனர். வெளிநாடுகளில் பணிபுரியும் சில நண்பர்கள் வீடியோ கால் மூலம் இந்தச் சந்திப்பின் மூலம் உரையாற்றினர்.

34 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் பயின்ற பள்ளி வளாகத்திலேயே நண்பர்களைச் சந்தித்தவர்கள் பரவசத்தோடு அன்பைப் பரிமாறிக் கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராஜகுரு, ரட்சிப்பு ராஜா, ஜமால் முகமது ஆகியோர் செய்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in