முகநூல் உலா: தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவது சரியா?

முகநூல் உலா: தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவது சரியா?
Updated on
1 min read

சென்ற ஞாயிறன்று நண்பர் ஒருவருடன் எர்ணாகுளம் விரைவுவண்டியில் நாகபட்டினம் சென்றேன். பூதலூரில் (நாம் எல்லாம் ஒதுங்கி நிற்கும் தோற்றத்தில்) ஒருவர் ஏறினார். அவரது தோற்றம் பிச்சைக்காரர், பிளாட்பார்ம்வாசி, குடிகாரர் என்ற ரீதியிலிருந்தது.

டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவரிடம் டிக்கெட் கேட்டார். எல்லோர் பார்வையும் அவரிடம் டிக்கெட் இருக்காது என்ற ரீதியில் தோன்றியது.

அவர் அழுக்கு லுங்கியைத் தூக்கி அன்டிராயர் பாக்கெட்டில் கையை விட்டு டிக்கெட்டை எடுத்தார். அப்போதும் நம்பிக்கை அற்ற நிலையில் பரிசோதகர் அவர் பாஸெஞ்சருக்கு டிக்கெட் எடுத்திருப்பார் என்கிற எண்ணத்தில் இது எக்ஸ்பிரஸ் வண்டியா என்றார். அவர் இந்த வண்டிக்குத் தான்யா டிக்கெட் எடுத்திருக்கேன் எனக் கூறி டிக்கெட்டைக் காண்பித்தார். அனைவர் முகமும் அமாவாசை நிலவாய் பிரகாசித்தது.

க்ளைமாக்ஸே இனிமேல் தான்...

அவர் யாரையும் சட்டை பண்ணாமல் ஒரு மூலையில் போய் அமர்ந்து பையைப் பிரித்தார். அப்பொழுதும் எல்லோருக்கும் அவர் பையிலிருந்து அனைவருக்கும் ஒவ்வாத வகையில் வெற்றிலை போடவோ அல்லது உணவினை எடுத்து அருவருப்பாய் உண்ணவோ போகிறார் என்கிற எதிர்பார்ப்பு.

அவர் பையில் கையை விட்டு எடுத்தது ஒரு புத்தகத்தை. எடுத்தவர் புத்தகத்தினை பிரித்து அவர் முன்பு படித்து விட்டு நிறுத்தியிருந்த பகுதியினை உறுதி செய்து கொண்டு யாரையும் சட்டை செய்யாமல் படிக்கத் தொடங்கினார்.

அவர் படித்த புத்தகம் என்ன தெரியுமா?
"மனமும் மனிதனும் "
அனைவர் முகமும் " ஙே " !!!

பயண நேரத்திலும், பயனாய் படிக்கும் அவர் எங்கே? தோற்றப் பிழை செய்து, அவரிடம் தோற்ற கனவான்களான நாங்கள் எங்கே?

- படைப்பு முகநூல் பக்கத்தில் ஆர்.எஸ். மனோகரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in