குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுப்பது எப்படி? - மருத்துவரின் A to Z ஆலோசனை

குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுப்பது எப்படி? - மருத்துவரின் A to Z ஆலோசனை
Updated on
4 min read

குழந்தைகள் குறைந்தது ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் போவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது; அத்தனை முறை போவார்கள். குழந்தைகளைச் செல்லமாகத் திட்டிக்கொண்டே அவர்களுக்கு உடை மாற்றிவிடும் தாய்மார்களை ஒவ்வொரு வீடுகளிலும் பார்க்கலாம். அப்படி சேட்டை செய்யும் குழந்தைகள் திடீரென சிறுநீர் போகாமல் இருந்துகொண்டு, மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு சொட்டுச் சொட்டாக அதிக நெடியுடன் அடர் மஞ்சள் நிறத்தில் போவார்கள். அந்த நேரத்தில் சில குழந்தைகள் அழவே செய்துவிடுவார்கள். சிறுநீர் பாதையில் அவ்வளவு எரிச்சல் இருக்கும். இதனைப் பார்க்கும் தாய்மார்களின் நிலையை கேட்கவா வேண்டும். பதறிப் போய்விடுவார்கள்.

இந்த நீரிழப்பில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் குழந்தை மருத்துவ இணைப் பேராசிரியர் டாக்டர் ஜி. செந்தில் குமரனிடம் பேசினோம்.

“குழந்தைகளுக்கு பொதுவாகவே சிறுநீர் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை போக வேண்டும். அப்படி போகாமல் இருந்தால் சிறுநீர் கொஞ்சம் அடர்த்தியாக வரும். சில நேரங்களில் நெடியும் அடிக்கும். அப்போது சிறுநீர்ப் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு குழந்தைகள் அழவும் செய்வார்கள். இதனை ஊர்ப்புறங்களில் சூடு பிடித்திருக்கிறது என்பார்கள். இல்லை, மஞ்சள்காமாலை என்று வைத்தியரைத் தேடி கொண்டிருப்பார்கள். இது தவறு. அவர்களுக்கு நீரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொண்டு அதற்கு தண்ணீரினை நன்றாகக் குடிக்க கொடுத்தாலே சரி செய்து விடலாம்.

நீரிழப்பு காரணங்களும் தடுக்கும் வழிகளும்

இதுபோக சில குழந்தைகளுக்கு உடம்பில் வேர்த்துக் கொண்டே இருக்கும். ஆனால் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். பெற்றோர்களும் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு வேர்க்கிறதே... அதற்கு ஏற்றவாறு நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும் என்று தோன்றாது. அதனால் உடலில் அதிக நீர்ச்சத்து குறையும். அதனையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதுபோக குழந்தைகளை வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் இரண்டு வேளை குளிப்பாட்டுவது இல்லை. குளிப்பாட்டுவது நல்லது ஆகும்.

முக்கியமாக குழந்தைகளுக்கு பழங்களை அதிகம் கொடுக்க வேண்டும். தர்பூசணியில் நிறைய நீர்ச்சத்து இருக்கிறது. அதனை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

டாஸ்க் வைத்து தண்ணீர் கொடுங்கள்

தற்போது பெற்றோர்கள் எவ்வளவுதான் சிரத்தை எடுத்து குழந்தைகளைப் பார்த்துக்கொண்டாலும் அவர்களுக்கு திட உணவினை ஒரு பிஸ்கட் ஆகவோ அல்லது இட்லி மற்றும் பருப்பு சாதமாகவோ எப்படியாவது ஊட்டி விடுவார்கள். ஆனால் தண்ணீர் கொடுக்கும் விஷயத்தைப் பற்றி மட்டும் அவ்வளவாக யோசிக்க மாட்டார்கள். அதிலும் தண்ணீர் கொடுப்பதுதான் அவர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். குழந்தைகளாகவே தண்ணீர் குடித்தால் மட்டும்தான் உண்டு. மிகவும் மல்லுக்கட்டி நாம் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.

கோடை காலத்தில் பொதுவாகவே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரைக்கும் வேர்வை ஏற்படும் என்பதால் நீரிழப்பு ஏற்படும். இதில் பெரியவர்களை விட சிறியவர்களுக்கு கொஞ்சம் சீக்கிரமே டீஹைட்ரேஷன் ஆகிவிடும்.

டாக்டர் ஜி. செந்தில் குமரன், குழந்தை மருத்துவ இணைப் பேராசிரியர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி.
டாக்டர் ஜி. செந்தில் குமரன், குழந்தை மருத்துவ இணைப் பேராசிரியர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி.

கோடை காலத்தில் வாந்தி, பேதி நோய்கள் அதிகம் வரும். பொதுவாக நமக்கு தாகம் எடுத்தால் நம்மை அறியாமல் அருகில் இருக்கும் வாட்டர் பாட்டிலினை கை தேடும். இல்லையென்றால் ஒரு எட்டு எழுந்து போய் தண்ணீர் குடித்து விட்டு வந்து அமர்ந்து வேலையைப் பார்ப்போம். ஆனால் குழந்தைகள் அப்படி செய்ய முடியாது. இதனால் வெகுசுலபமாக நீரிழப்புக்கு ஆளாகி விடுவார்கள். அதிலும் வெயில் காலத்தில் கேட்கவே வேண்டாம். குழந்தை நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும்பட்சத்தில் பயந்துகொண்டு உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை.

ஒரு இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டு தண்ணீரை உடலில் சமன் செய்தாலே நீர் வறட்சியை விரட்டிவிட முடியும். அதற்கு முதலில் நீரிழப்புக்கு ஆளான குழந்தைகளுக்கு ஒவ்வொரு தாய்மார்களும் செய்ய வேண்டியது, நாள் ஒன்றுக்கு 1-2 லிட்டர் தண்ணீர் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதினை ஒரு டாஸ்க்காக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் குழந்தைகளின் தாகம் பொறுத்து குடிக்கும் தண்ணீரின் அளவு கொஞ்சம் கூடும் குறையலாம்.

இருப்பினும், தாய்ப்பால் குடித்தாலும் தண்ணீர் புகட்டுவதை முக்கியத்துவமாக கருதி அதிக தண்ணீரினைப் புகட்டிவிட வேண்டும். இது தாய்மார்களுக்கு கொஞ்சம் சிரமமானதுதான். முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதும். தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தண்ணீர் கொடுக்கும் முறை

தண்ணீரை நன்கு சுட வைத்து, தேவையென்றால் கொஞ்சம் சீரகம் போட்டு சுட வைத்துக்கொள்ள வேண்டும். அதனை 1 லிட்டர் அளவு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட வேண்டும். தண்ணீர் குழந்தை குடிக்கும் அளவில் மிதமான சூடாக இருக்குப்படி கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். அந்த 1 லிட்டர் தண்ணீரை அளவீடாக வைத்து நாள் முழுவதும் பாட்டிலில் குடிக்க வைக்க வேண்டும். குழந்தை இரவு வரை அந்தப் பாட்டிலில் எவ்வளவு தண்ணீர் குடித்திருக்கிறது என்று பார்த்துக்கொள்ள வேண்டும். சில குழந்தைகள் அரை லிட்டர் குடித்திருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் கம்மியாகவே குடித்திருப்பார்கள்.

ஆனாலும், ஒவ்வொரு நாளாக இதனை கொடுத்து அவர்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அவர்கள் நீரினை குடிக்க குடிக்க உடல் தன்னைத்தானே நீர் வறட்சியிலிருந்து சரிசெய்து கொள்ளும். இதில் ஏன் டாஸ்க் வைக்கிறோம் என்றால் மற்ற நேரங்களில் தண்ணீர் கடமைக்கு கொடுப்போமே தவிர, இவ்வளவு தண்ணீரைக் குடித்து ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் கொடுக்க மாட்டோம். எனவே, குழந்தைக்கு தற்போது ஊட்டி விடும் திட உணவில் நாம் காட்டும் முக்கியத்துவம் போல் குடிக்கும் நீருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல பழக்கம் வரும். நீர் வறட்சியும் நீங்கி விடும். இதுபோல் தொடர்ந்து குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்துப் பழக வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது...

இது எல்லாமே, காய்ச்சல் இல்லாமல் நன்றாக சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டுதான். ஆனால் காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் அழுதுகொண்டே இருந்தாலும், சீறுநீரின் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், கைப் பக்குவம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏனென்றால் இன்பெக்ஷன் ஆகியிருக்கும் பட்சத்தில் அதனை நாம் தண்ணீர் கொடுத்து சரி செய்து கொண்டிருக்க முடியாது. பொதுவாக நீரிழப்பினை பெரியவர்கள் போல் குழந்தைகளால் ஓரிரு நாட்கள் என்று தாங்கி கொள்ள முடியாது. உடனே குழந்தை மருத்துவரைச் சந்தித்து சிகிச்சையளிப்பது நல்லது.

நீரிழப்பு ஏற்பட்டுள்ளதைக் குழந்தைகளிடம் எப்படித் தெரிந்து கொள்ளலாம்?

1. எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

2. கண்கள் மற்றும் நாக்கில் நீர்ச்சத்து இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

3. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் தலையின் உச்சங்குழி பள்ளமாக இருக்கும். அதனைத் தொட்டுப்பார்த்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

4. ஸ்கின் மிகவும் வறட்சியாக இருக்கும். அதனை லேசாக தொட்டு அமுக்கிப் பார்த்தால் மிகவும் மெதுவாக கீழ இறங்கும்.

5. எச்சில் வடிப்பார்கள்.


குழந்தைகளுக்கு உப்புக்கரைசல் தண்ணீர்

நீரிழப்பு ஏற்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. குழந்தைகள் மிகவும் சோர்ந்துபோய் விடுவார்கள். எனவே இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு உப்புக்கரைசல் தண்ணீர் அடிக்கடி கொடுக்க வேண்டும். அது குழந்தையின் நீர் வறட்சியைப் போக்கி விரைவாக மீட்டுக் கொண்டு வரும். குழந்தைகளுக்கு அதனை ஸ்பூன் ஸ்பூனாக ஊட்ட வேண்டும். இல்லையென்றால் வாந்தி எடுத்துவிடுவார்கள்.

இப்போது எல்லா அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் ஓஆர்எஸ் உப்புக்கரைசல் கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொடுப்பது சிறந்த தீர்வு. சில குழந்தைகள் ஓஆர்எஸ் உப்புக்கரைசலைச் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இளநீர் கொடுக்கலாம். மோரில் உப்பு போட்டும் கொடுக்கலாம். வடித்த அரிசிக் கஞ்சி தண்ணியில் உப்புப் போட்டும் கொடுக்கலாம். சால்ட் கலந்த லெமன் ஜூஸ் கொடுக்கலாம். இவ்வாறாக வீட்டில் தயார் பண்ணக்கூடிய உப்புக்கரைசலை ஹோம் மேட் ஓஆர்எஸ் என்பார்கள். இதுவும் நல்ல பலன் அளிக்கும்.

-தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in