Last Updated : 04 Jun, 2022 02:19 PM

Published : 04 Jun 2022 02:19 PM
Last Updated : 04 Jun 2022 02:19 PM

கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முன்னோடிகள் தேனீக்கள்

பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களில் இருந்து தேனீக்கள் தேன்களை சிறுகச்சிறுக சேகரிக்கின்றன. தேன்களை சேகரிப்பது மட்டுமல்ல அதன் பணி; தேனீக்கள் என்ற ஒரு உயிரினம் இல்லையென்றால் இந்த உலகமே அழிந்து விடும். 90 சதவீத கனி, காய்களின் உற்பத்தி தேனீக்களாலேயே நடக்கின்றன. அவற்றின் கால்களில் ஒட்டிச் செல்லும் மகரந்த துகள்கள் அயல் மகரந்த சேர்க்கைக்கு காரணமாகின்றன.

இதோ அதைப்பற்றி பேசுகின்றனர் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்புல பூச்சியியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சு.அறிவுடை நம்பியும், அவரது வழிகாட்டலில் இதுகுறித்து பயின்று வரும் வேளாண்புல இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி மாணவி கா.நிஷாந்தியும்… நமக்கெல்லாம் தித்திக்கும் தேனைத் தரும் தேனீக்கள், எதற்காகத் தேனை சேமித்து வைக்கின்றன..? இதை எப்போ தாவது யோசித்திருப்போமா..!

பல மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் தேனீக்கள், 6 கால்களைக் கொண்ட சிறு ஈக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவை. தங்களது தேவையைக் காட்டிலும் அதிகம் தேனை சேமித்து வைத்திருப்பதைக் கண்ட ஆதிமனிதன், இந்த தேனீக்களின் உழைப்பை தனது உணவு மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக, பயன் படுத்தத் தொடங்கினான்.

நாம் பயன்படுத்தும் தேனில் ஒரு வகை காட்டுத்தேன்; சற்று நீர்த்தாற் போல் இருக்கும், அதில் மகரந்த தூள், மெழுகு தூள் அதிகமாக காணப்படும். இது பெரும்பாலும் பல மலர்த்தேன் ஆகும். தேனீ வளர்ப்பகத்திலிருந்து பெறப்படும் தேன் சற்று சூடு படுத்தப்பட்டு பதப்படுத்துவதால் திடமாக காணப்படும். மேலும் இது தூய்மையானதாக இருக்கும். தேனீக்களை வளர்க்கும் பழக்கம் சுமார் 9ஆயிரம் வருடங்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வளர்ப்பு முறையில் பல வகைகள் உள்ளன.

இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளில் தேன் உற்பத்தி 58 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தற்போது ஆண்டுக்கு சுமார் 1,20,000 மெட்ரிக் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 60 ஆயிரம் மெட்ரிக் டன் தேன் ஏற்றுமதியாகிறது. இந்த ‘இனிப்பு புரட்சி’ கிராமப்புற இளைஞர்களின் பெரும் பங்களிப்பால் சாத்தியமாகியிருக்கிறது. கொம்புத் தேனீ (அபிஸ் புளோரியா), மலைத் தேனீ (அபிஸ் டோர்சாட்டா), வளர்க்கக் கூடிய தேனீக்கள், பெட்டித் தேனீ (அபிஸ் செரானா, அபிஸ் மெல்லிபெரா,) மற்றும் கொடுக்கு இல்லா தேனீ, கொசு தேனீ (டெட்ராகோனுலா இரிடிபென்னிஸ்) உள்ளிட்ட தேனீக்களின் வகைகள் உள்ளன.

ஒரு நல்ல ஆரோக்கியமான தேன்கூட்டில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் தேனீக்கள் இருக்கும். ஒரு கூட்டில் மொத்தமே மூன்று வகைத் தேனீக்கள்தான் இருக்கும், அதில் ஒரே ஒரு ராணித்தேனீ இருக்கும். 150 முதல் 200 வரையில் ஆண் தேனீக்கள் இருக்கும். மற்ற அனைத்துமே வேலை செய்யும் வகையைச் சார்ந்த மலட்டு பெண் தேனீக்கள் ஆகும்.
இதில் இந்த வேலைக்கார பெண் தேனீக்கள்தான், தேனைச் சேகரிக்கின்றன. அவற்றின் வாழ்நாள் 6 வாரங்கள் என்பதால், அவற்றின் எண்ணிக்கை குறையாமலிருக்க, நாள் ஒன்றுக்கு 500 முதல் 1,000 வரையிலான முட்டைகளை ராணி தேனீக்கள் இடும்.

ஒரு வேலைக்காரத் தேனீ தனது வாழ்நாளில் 500 மைல்கள் வரை பறந்து ஒரு டீஸ் பூனில் 12-ல் ஒரு பங்கு தேனைத்தான் சேகரிக்க முடியும். அரை லிட்டர் தேனை சேகரிக்க 1,200 தேனீக்கள், சுமார் 1,12,000 மைல் பறந்து 45 லட்சம் மலர்களிடம் சென்று வர வேண்டும். கொசு தேனீக்கள் மனிதர் களுக்கு பாதிப்பில்லாதவை. இதன் தேன் தனித்துவமான சுவை கொண்டது. இனிப்பும்புளிப்பும் கலந்த பழச்சுவை உடையது. கொசு தேனீக்கள் தனது கூட்டை வலுப்படுத்த, மரங்களில் இருந்து புரோபோலிஸ் என்ற பசையை சேகரிக்கிறது. இந்த புரோபோலிஸில் குறிப்பிடத்தக்க பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன. ஒரு தேனின் உற்பத்தி அளவு ஆண்டுக்கு 600-700 கிராம்.

மேலை நாடுகளால் அதிகமாக பேசப்படும் பருவநிலை மாற்றம் வாழ்விட மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகியன தேனீக்களின் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன. பல நாடுகள் தற்போது அயல் மகரந்த சேர்க்கையை செய்ய ரோபோ தேனீக்களை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் தேன் உற்பத்தியில் முதல் இடம் வகிப்பது பஞ்சாப். ராணித்தேனீ பொதுவாக ஒருமுறைதான் இனச்சேர்க்கையில் ஈடுபடும், இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் தேனீ இறந்துவிடும்.

வேலைக்கார தேனீக்கள்தான் ராணிக்கு உணவு ஊட்டுவது, குஞ்சுகளை உணவு ஊட்டி வளர்ப்பது, கூட்டை சுத்தம் செய்வது, மதுரம் சேகரித்து அதை தேனாக மாற்றுவது,கூட்டை பாதுகாப்பது, நடனம் மூலம் உணவு பற்றிய குறிப்பை மற்ற தேனீக்களுக்கு தெரியப்படுத்துவது என ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும். இப்படி உழைக்கும் வேலைக்கார தேனீக்கள் சுமார் ஒன்றரை மாதம் வரை உயிர் வாழும்.

ராணித்தேனீ தன் உடலில் சுரக்கும் ஒருவித திரவ வாசனையால் அனைத்து தேனீக்களையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. ஒரு கூட்டில் ஒரே ஒரு ராணித் தேனீ தான் இருக்க முடியும். ஒரு கூட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ராணித்தேனீ உருவானால், அவை சண்டையிட்டுக் கொள்ளும். வெற்றி வாகை சூடும் ராணியே தலைவி ஆகும்; மற்றொன்று கொல்லப்படும். தேனீக்களின் கூட்டு வாழ்க்கை பல அதிசயங்கள் கொண்டது. இந்த தேனீக்கள் கூட்டு குடும்ப வாழ்க்கையின் முன்னோடிகள்.

மருத்துவ குணம் மற்றும் பலவகை சத்துக்களை உள்ளடக்கிய தேனை நாள்தோறும் சாப்பிட புத்துணர்ச்சி பெறலாம். ஆனால் கலப்படமற்ற தேனை உண்பது முக்கியம்.தேனீக்களின் முக்கியத்துவம், அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அவற்றின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகளின் சபை ஆண்டுதோறும் மே 20-ம் தேதியை உலக தேனீ தினமாக கொண்டாடுகிறது.

தேனீக்கள் வாழ்வியல் சூழல் அவற்றால் பேணப்படும் பிற மகரந்தச் சேர்க்கைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே இந்த நாளை கடைப்பிடிப்பதன் முக்கியமாகும். இது உலகளாவிய உணவு விநியோகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வளரும் நாடுகளில் பசியை நீக்கு
வதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

நாமும் தேனீ வளர்க்கலாம்; தேனீ வளர்ப்பு எளிதான காரியம்தான். சிரத்தையுடன் கூடிய சிறிய பயிற்சி அவசியம். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் புல பூச்சியியல் துறை அதற்கான பயிற்சியை அளிக்கிறது. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் சிறிய இடத்தில் இதை செய்யலாம். வழிகாட்டுகிறோம். தேனீக்கள் வளர்த்து, தேன் பெற்று பயனடைவோம். அதன் மூலம் பல்லுயிர் வளர்ச்சியை நிலை நிறுத்துவோம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x