உலகின் அற்புதமான 10 இயற்கை நிகழ்வுகள்

உலகின் அற்புதமான 10 இயற்கை நிகழ்வுகள்
Updated on
3 min read

இயற்கையின் நிகழ்வுகளும், அவற்றின் அழகும் நம் கற்பனைக்கு எட்டாதவை. இயற்கையின் அற்புதமான காட்சிகள் இந்த உலகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. நம்மை மெய்மறக்கச் செய்யும் அந்த இயற்கை நிகழ்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறந்த காட்சிகள்:

நார்தென் லைட்ஸ், ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்காவிக் நகரிலிருந்து, வானத்தில் சிவப்பு, நீலம், பச்சை ஆகிய நிறங்களின் அற்புதமான ஒளி வடிவங்களைக் காணலாம். இந்த நிகழ்வு அரோரா பொரியாலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனில் உள்ள சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் வளிமண்டலத்தில் உள்ள அணுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது இந்த வண்ண ஒளி சிதறல் ஏற்படுகிறது. டிசம்பர், மார்ச் ஆகிய மாதங்களுக்கு இடையே அங்கே செல்வது நமக்கு உன்னத அனுபவத்தை அளிக்கும்.

பயோலுமினசென்ட் கடற்கரைகள் மாலதீவுகள்

மாலத்தீவின் வாதூ தீவின் கடற்கரையில் அலைகள் இருளில் ஒளிரும். அந்தக் கடற்கரையில் இரவின்போது, தண்ணீரில் மிதக்கும் நுண்ம உயிரினத் தொகுதி ஒரு கதிரியக்க நீல ஒளியை வெளியிடுகிறது. இதனால் தண்ணீரே ஒளிரும். ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையில் சென்றால், உங்கள் கால்விரல்களை ஒளிரும் நீரில் நனைக்கலாம்.

மூன்போ, ஜிம்பாப்வே

மூன்போ என்பது நிலவின் ஒளியால் ஏற்படும் வானவில். ஒரு முழு நிலவு, போதுமான சாரல், தெளிவான வானம் போன்ற பல காரணிகள் மூன்போ தோன்றுவதற்குத் தேவை. சாம்பியா, ஜிம்பாப்வேயின் எல்லையில் உள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சியில், ஜூன், ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்கு இடையில் நீங்கள் இவற்றில் ஒன்றைப் பிடிக்கலாம்.

கட்டடம்போ மின்னல் புயல், வெனிசுலா

கட்டடம்போ நதி வெனிசுலாவின் மரக்காய்போ ஏரியில் கலக்கும் இடத்தில் கட்டடம்போ மின்னல் ஏற்படுகிறது. இந்தப் பகுதியின் தனித்துவமான காற்று, வெப்ப சலனங்கள் போன்றவற்றின் காரணமாக இந்த மின்னல் ஓர் ஆண்டில் 100 நாட்களுக்கு மேல் நிகழ்கிறது. இந்த இடைவிடாத புயல்களுக்கு இடையே உள்ளூர்வாசிகள் இயல்பாக வாழப் பழகிவிட்டனர்.

பறவைத்திரள், டென்மார்க்

டென்மார்க்கில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும், ஸ்டார்லிங் பறவைகள் லட்சக்கணக்கில் வடக்கு நோக்கிச் செல்கின்றன. இந்தப் பறவைத்திரள் மிகவும் பெரியது. சூரியன் மறையும் போது, அதன் ஒளி பறவைத்திரளால் மறைக்கப்படுகிறது. எனவே, இது "கருப்பு சூரியன்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். அந்தக் காட்சி நம் மனத்தை விட்டு எளிதில் நீங்காது.

கானோ கிறிஸ்டல்ஸ், கொலம்பியா

லா மக்கரேனாவில் உள்ள கானோ கிறிஸ்டல்ஸ் நதி இயற்கையின் நீர் வண்ண ஓவியத் தட்டு. ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களுக்கு இடையில், அந்த நதி சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல நிறங்களின் கலவையில் ஒளிரும். நீர் வாழ் தாவரங்களின் இனப்பெருக்கம் காரணமாக இந்த நிறங்கள் தோன்றுகின்றன. அவை அந்த நதியில் ஒரு திரவ வானவில்லை உருவாக்குகின்றன.

பிங்க் ஏரி, ஆஸ்திரேலியா

இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்குப் பிடிக்குமா? தெற்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லுங்கள், அங்கே இருக்கும் மக்டோனெல் ஏரியும், பம்புங்கா ஏரியும் உண்மையான இளஞ்சிவப்பு நிறம் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு உணர்த்தும். அதிக உப்பு செறிவுகள், பாசிகள், ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள் போன்றவை அந்த ஏரிகளுக்கு இந்த தனித்துவமான நிறத்தைக் கொடுக்கின்றன.

ரத்த அருவி, அன்டார்டிகா

டெய்லர் பனிப்பாறையின் அருவிகள், அவற்றின் அடர் சிவப்பு நிறத்தின் காரணமாக ரத்த அருவிகள் என அழைக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக, அதன் தோற்றம் ஒரு மர்மமாகவே இருந்தது. ஆனால் 2017 இல், விஞ்ஞானிகள் உப்புநீரில் உள்ள ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரும்பே இந்தச் சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தனர்.

கிரேட் ப்ளூ ஹோல், பெலிஸ்

கிரேட் ப்ளூ ஹோல் என்பது பெலிஸ் கடற்கரையில் உள்ள ஒரு மாபெரும் கடல் மடு. பனியுகத்தில் நீர் மட்டம் கணிசமாகக் குறைந்தபோது, கோள வடிவிலான இந்த ஆழமான நீல பள்ளத்தாக்கு உருவானது. இன்று, அது உலகின் பிரபலமான டைவிங் தளமாக இருக்கிறது.

ஸ்கை மிரர், பொலிவியா

தென்மேற்கு பொலிவியாவில் உள்ள சாலார் டி உயுனி உலகின் மிகப்பெரிய உப்பு படுகை ஆகும். டிசம்பர், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு இடையில், ஏரி நீர் படுகையின் மீது பாயும் போது, தெளிவான நீரின் மெல்லிய அடுக்கு மேல் பிரகாசமான நீல வானம் பிரதிபலிக்கும். இங்கே, இந்த ஆழமற்ற படுகையின் மீது நீங்கள் நடக்கும்போது, உங்கள் மேலும் கீழும் வானம் இருக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in