Last Updated : 03 Jun, 2022 09:58 AM

Published : 03 Jun 2022 09:58 AM
Last Updated : 03 Jun 2022 09:58 AM

கலைஞர் 100 -1 | கலைஞரிடம் நான் என்ன கற்றுக் கொண்டேன்?

திருச்சி சிவா எம்.பி.

சீருடன், சிறப்புடன், செல்வத்துடன், புகழுடன் விளங்கி பின்னர் சீரழிந்த நாடுகள் உண்டு. செழித்து சிறந்து பின்னர் சிதைந்து நலிந்துபோன சமுதாயங்கள் உண்டு. அவை மீண்டும் துளிர்த்து எழுந்து புகழ்பெற்று நின்ற வரலாற்று நிகழ்வுகள் நிறையவே உண்டு. இந்த மாற்றங்களுக்கு எல்லா காலகட்டங்களிலும் அடித்தளமாக, மூலமாக யாரோ ஒரு தலைவன் இருந்திருப்பார். அதைக் கண்டு உணர நேர்கிறபோதுதான், இருந்ததும், இழந்ததும், மீண்டும் அதை அடைந்ததற்கும் அந்த யாரோ சில தலைவர்கள்தான் காரணம் என்பது சிந்திக்கவும், சிலிர்க்கவும் வைக்கக்கூடிய பேருண்மை. இதை பலர் உணர்ந்தும், சிலர் இன்னும் உணராததும் சமூக யதார்த்தம்.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழிமுறைகள், அவற்றை அடைவதற்கான கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் என்கிற அடித்தளத்தில் உருவாகும் அமைப்புகள் அனைத்தும் வெற்றி முகட்டை எட்டியதில்லை. உருவாக்கிய தலைவர்களுக்குப் பின்னால் உருகிப் போனவை ஏராளம். தொடர்ந்து அந்தக் கடமையினை ஏற்று, ஓய்வின்றி லட்சியப் பாதையில் பயணம் மேற்கொண்ட, அடுத்தக்கட்ட தலைவர்களாலேயே அமைப்பின் வலிமையோ, மாற்றத்தின் தொடர்ச்சியோ, வளர்ச்சியின் பொலிவோ குன்றாமல் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. நாடுகள் பல. அவற்றில் உருவான பிரச்சினைகளும், அவற்றின் தன்மைகளும் பற்பல. உதிர்வதும், துளிர்ப்பதும் இயற்கையின் நியதி என்பதைப் போலவே மனித குலத்தில் மாற்றங்கள் நிகழும்.

ஒளிவீசும் தமிழகத்தின் பின்னணியில் திராவிட இயக்கம்

தமிழ்நாடு..! இந்திய துணைக் கண்டத்தின் தனிப்பெரும் குணங்கள் நிரம்பிய நிலம். இங்கு சிறந்த ஆட்சிகளும் உண்டு. சீரழித்த ஆட்சிகளும் உண்டு. தொன்மை மொழி, வாழும் வகை சொல்லும் இலக்கியங்கள், வாழ்ந்து காட்டிய மனிதர்கள், பார் புகழும் பண்பாடு, செறிந்த கலாச்சாரம், இத்தனைக்கும் மீறிவந்த மொழி, இன அரசியல், பண்பாட்டுப் படையெடுப்புகள், இவற்றை எதிர்கொண்டு தனித்தன்மை மங்காமல் ஒளிவீசும் தமிழகத்தின் இன்றைய வளமான வாழ்வின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியாக திராவிடப் பேரியக்கம் இருந்திருக்கிறது என்பது, ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.
என் போன்ற ஒருவன் இத்தனை சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் காரணம் இப்பேரியக்கம்தான். மனதில் எழுந்த எண்ணங்களும், அவற்றின் அடிப்படையில் விளைந்த கேள்விகளும், ஆதாரத்தோடு கிடைத்த விடைகளும், இவ்வழியே வளர்ந்த ஆர்வமும் எங்களைக் கொண்டுவந்து நிறுத்திய இடம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிடப் பேரியக்கத்தின் அடித்தளமான சர்.பி.டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றோரின் முயற்சியால் உருவான இந்த இயக்கத்தினரின் உழைப்பு, பயன்களால் தமிழகம் சிறந்து விளங்கத் தொடங்கியது.

மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, பேராசிரியர் க.அன்பழகன், கலைஞர் மு.கருணாநிதி

அண்ணா விட்ட இடத்திலிருந்து தொட்டு வளர்த்தவர் கலைஞர்

மூடப் பழக்க வழக்கங்களால் முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்த சமுதாயத்திலிருந்து தந்தை பெரியாரால் விடுதலை கிடைத்தது. சமூக நீதி என்கிற அடிப்படையில் சமத்துவத்தை உருவாக்குவதையே தன்னுடைய முதல் கடமையாகக் கொண்டு தந்தை பெரியார் செயல்பட்டார். அதில் முகிழ்ந்த இயக்கம்தான், திராவிடர் கழகம். அதிலிருந்து அறிஞர் அண்ணா கண்ட இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம். பொருளாதாரம், சமூகம் என இரண்டுக்கும் பாடுபடக்கூடியதாக அண்ணா அதைத் தந்தார். அவரது பேச்சுகள் பாமரனையும் சென்றடைந்தன. படித்தவர்களின் மனதையும் பண்படுத்தி தன்பக்கம் திருப்பின. அவர் எழுதிய கட்டுரைகளும் கடிதங்களும் உலக வரலாற்றினை, அரசியல் மாற்றங்களை, தமிழ்நாட்டின் தொன்மையை, இலக்கியச் செழுமையை சாதாரணமானவர்களுக்கும் கொண்டு சேர்த்து, அவர்களைப் படைவீரர்களாக மாற்றின.

பண்டிதர்களின் சபைகளிலே உலவிய தமிழ், பாமரர்களின் மன்றங்களில் முழங்கத் தொடங்கியது. ஆலமரத்தடியில் இருந்தவனும் அரசியல் பேசத் தொடங்கினான். இலக்கியம் என்பது எல்லோருக்கும் கைவரப் பெற்றது. தமிழ் புத்துணர்ச்சி பெற்றது. அதேநேரத்தில், சமுதாயத்தில் படர்ந்திருந்த சாதி, சமய ஏற்றத்தாழ்வுகள் அகன்று எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை என்கிற இலக்கை அடையவும், உழைப்பவர்கள் உயரவும், சமதர்மப் பூங்காவை உருவாக்கிடுவதற்குமான முயற்சியில் அறிஞர் அண்ணாவின் இயக்கம் ஈடுபட்டது. அந்த அண்ணாவுடன் சேர்ந்து வளர்ந்து, அவர் விட்ட இடத்திலிருந்து தொட்டு வளர்ந்த மாபெரும் தலைவர்தான் கலைஞர் கருணாநிதி.

எண்ணிப் பார்த்தால் இவர்களெல்லாம் யாரோ தனி மனிதர்கள் அல்ல. பெரியார் என்கிற பெருந்தலைவனின் சமூக சீர்திருத்தக் கருத்துகள், அறிஞர் அண்ணாவின் அற்புத அரசியல் இயக்கம், அவற்றால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மனமாற்றம், சமுதாய மாற்றம், மொழிப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பண்பாட்டுக்கு மிகப்பெரிய படைக்கலனாக திமுக கிடைத்தது. கலைஞர் என்கிற தலைவன், இவற்றின் மொத்த உருவமாக மாறினார். சர். பிட்டி தியாகராயரையோ, பனகல் அரசரையோ, நாயரையோ படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய இடத்தில்தான் எங்களைப் போன்றோர் இருந்தோம். தந்தைப் பெரியாரைப் பார்த்திருக்கிறேன். அறிஞர் அண்ணாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கலைஞருடன்தான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். பெரியார், அண்ணாவின் ஒட்டுமொத்த வடிவமாக கலைஞர் திகழ்ந்தார்.

வயதில் குறைவானவர்களையும் சரிக்கு சமமாக நடத்துவார்

1971ஆம் ஆண்டிலிருந்தே கலைஞரின் பொதுக்கூட்ட பேச்சுகளைக் கேட்டு வந்தேன். வளர்ந்தேன். அவருடைய திரைப்படங்களைப் பார்த்து, வசனங்களைக் கேட்டு பரவசப்பட்ட அந்த தலைவருடன், அவசர நிலை காலகட்டத்தின்போது மிசா சட்டத்தில் கைதாகி, ஓராண்டுக்குப் பின் விடுதலையாகி வெளியே வந்ததிலிருந்து நெருங்கி பயணம் செய்கின்ற பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தலைவர் கலைஞரிடமுள்ள தனிப்பெரும் குணமே, இளைஞர்களையும் சரிசமமாக நடத்துவது, திறமையுள்ளவனை உயர்த்தி உரிய இடத்தில் உட்கார வைப்பது, எல்லோரையும் தனது நெஞ்சத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் அன்புகாட்டுவதுதான்.

ஒரு இயக்கத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் கொள்கைகளாக இருக்கலாம். லட்சியங்களாக இருக்கலாம். அணுகுமுறைகளும், செயல்பாடுகளுமாக இருக்கலாம். இவை, எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரிடம் உள்ள ஈடுபாடும், அதேபோல் தலைவர், தொண்டர் மீது காட்டக்கூடிய அக்கறை, அன்பினால் ஏற்படக்கூடிய தொடர்பும், நெருக்கமும் தொண்டரின் தொடர் இருப்புக்கு காரணமாக இருக்கும். சலனங்கள் இல்லாமல், சபலங்கள் இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பொருட்படுத்தாமல், தொடர் லட்சியப் பயணத்தில் செல்வதற்கு தலைமையிடம் ஏற்படக்கூடிய தனிப்பெரும் அன்பும், ஈடுபாடும் மிக முக்கிய காரணமாக அமையும்.

அந்த வகையில் தலைவர் கலைஞருடன் காரில் பயணம் செய்கின்ற வாய்ப்பும், தனியாக பேசுகின்ற நேரங்களும் எனக்கு நிறையவே அமைந்திருக்கின்றன. அவருடன் பயணம் செய்யும்போது, சில நிகழ்வுகளை எதேச்சையாக சொல்வதுபோல் சொல்வார். ஆனால், அதன் நோக்கம் என்ன என எனக்குத் தெரியும். அவர் சொல்லக்கூடிய ஒரு செய்தி, தகவல் அல்லது ஒரு நிகழ்வு பல பேருக்கு தெரியாத ஒன்றாக இருக்கும். அதை என் போன்றவர்களிடம் சொல்லும்போது, நாங்கள் கூட்டங்களில், அவற்றை மக்களிடம் எளிதில் சென்று சேரும் வகையில் எடுத்துச் சொல்வோம் என்பதும் அவருக்குத் தெரியும்.

அத்துடன் மட்டுமின்றி, யாரிடம் எதைச் சொல்ல வேண்டும் என்பதும் கலைஞருக்கு நன்கு தெரியும். பின்னாளில் அவர் கூறியவற்றைப் பொதுக்கூட்ட மேடைகளில் நான் பயன்படுத்தும்போதும், மாநாடுகளில் பேசும்போதும் அந்த தகவல்கள் பலருக்கு புதியதாக மட்டுமின்றி, பெரும் வரவேற்பை பெறக்கூடியதாகவும் இருக்கும். அதைக்கண்டு கலைஞர் பெருமகிழ்ச்சி அடைவார். ஏதோ ஒரு காலகட்டத்தில், யாருக்கும் தெரியாமல் நிகழ்ந்த ஒரு அரசியல் நிகழ்வினை, அவர் எடுத்த முடிவினை, அவர் செய்த செயலால் ஏற்பட்ட மாற்றத்தினை பலரிடம் சென்று சேர்க்க வேண்டும் என்று கருதுவார். அதைக் கொண்டு செல்ல, அவரைவிட வயதில் பலமடங்கு குறைவான என்னைப் போன்றோரைக்கூட சரிக்கு சமமாக நடத்தும் பாங்கு தனித்துவமானது. அவரைப் பற்றி பல புத்தகங்கள் எழுதும் அளவுக்கு நினைவுகள் உள்ளன.

கலைஞருடன் உரையாடும் திருச்சி சிவா, மு.க.ஸ்டாலின்

கலைஞருக்குக் கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசு

அவரது குணம் எப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக, ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். 1984ஆம் ஆண்டு, அவரது மணிவிழாவின்போது, அவருக்கு ஏதாவது பரிசு தர வேண்டுமென தற்போதைய திமுக தலைவரும், முதல்வரும், அப்போதைய இளைஞரணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலினும், அவருடன் துணைச் செயலாளராக பணியாற்றிய நானும், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களும் ஒன்றுசேர்ந்து கொஞ்சம் பொருள் திரட்டி பரிசு தர முனைந்தோம். கலைஞரிடம் ஒரு குணம் இருந்தது. அவருக்கென்று எதையுமே வைத்துக் கொள்ள மாட்டார்.

அவரது சட்டப்பேரவை வெள்ளிவிழாவைப் பாராட்டி, திருச்சியில் மறைந்த அன்பில் தர்மலிங்கம் 60 பவுனுக்கு ஒரு ஆரம் அணிவித்தார். அதைக் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சியின் கருவூலத்துக்கு வழங்கினார். அதேபோல், சென்னையில் அவரது எடைக்கு 3 மடங்கு அளவுக்கு வெள்ளிக்கட்டியாகக் கொடுத்தார்கள். அதையும் கட்சிக்குக் கொடுத்தார். பிரச்சாரப் போக்குவரத்துக்கு வசதியாக நல்ல கார் வாங்கிக் கொள்ளுங்கள் என்று நிதி கொடுத்தார்கள். அதையும் கட்சிக்கே கொடுத்தார். எனவே, எதைக் கொடுத்தாலும் கட்சிக்கு கொடுத்துவிடும் மனநிலையில் உள்ள கலைஞருக்கு, அவர் வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு பரிசினைக் கொடுக்க வேண்டும் என நாங்கள் யோசித்து திட்டமிட்டோம்.

அன்றைய காலகட்டத்தின் பொருள் மதிப்பு, பண மதிப்புக்கு எங்களால் மாவட்டத்துக்கு சுமார் ரூபாய் 2 ஆயிரம் வீதம் தமிழகம் முழுவதும் இருந்து 60 ஆயிரம் வரை சேகரித்தோம். அறிவாலயம் கட்டுகிறபோதுகூட, அதற்காக கலைஞரிடம் 2 ரூபாய், 5 ரூபாய் நிதியாக கொடுக்கப்பட்டது. அந்த விவரம், முரசொலியிலும் வெளிவந்தது. அதுபோன்ற காலகட்டத்தில் நாங்கள் ரூ.60 ஆயிரம் சேகரித்து, தளபதி ஸ்டாலின் யோசனையின்பேரில், கலைஞரின் வீட்டில் அவரிடம் இல்லாத புத்தகங்களை ரூபாய்.50 ஆயிரத்துக்கு வாங்கினோம். அவற்றை வைப்பதற்காக 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சுழல் அலமாரி வாங்கினோம். இதனை, சென்னை கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது தலைவர் கலைஞரிடம் கொடுத்தோம். அதைப் பெற்றுக்கொண்டபோது அவரின் மனமும், முகமும் மிகுந்த மலர்ச்சியாக, மகிழ்ச்சியாகக் காணப்பட்டது. அதன்பின் அந்த அலமாரியும், புத்தகங்களும் நீண்ட நாள் வரை, அவரது வீட்டில் அவர் உட்காரும் இடத்துக்குப் பின்னாலேயே இருந்தது எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தலைவரையும், அவருக்குப் பின்னால் நாங்கள் பரிசளித்த புத்தகங்கள் மற்றும் அலமாரியைப் பார்க்கும்போதெல்லாம் பரவசமடைவோம்.

நாம் கொடுக்கும் பரிசு தகுதி வாய்ந்ததாகவும், வைத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு பயன்தரக் கூடியதாகவும் இருக்குமேயானால், அதை அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள் என்பதை அந்த நூல்களும், அலமாரியும் எங்களுக்கு எடுத்துக் காட்டியது. தலைவர் கலைஞர் விலை மதிப்பில்லாததாக கருதியது நூல்களை மட்டும்தான். அனைத்து நூல்களையும் படிப்பார். அனைத்து மொழிகளின் இலக்கியங்களையும் படிப்பார். வரலாற்றைப் படிப்பார். எனவேதான், அவற்றைத் தேடித்தேடி சேகரித்துக் கொண்டு போய் கொடுத்தோம்.

சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், மு.க.ஸ்டாலின்

அகில இந்திய அரசியலுக்கு அழைப்பும் மறுப்பும்..

அந்த பரிசினை நாங்கள் கொடுத்த நிகழ்வு நடைபெற்றபோது, சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் அன்றைய மிகப்பெரிய தலைவர்களான பாபு ஜெகஜீவன் ராம், பகுகுணா, அப்போதுதான் அரசியலில் தலையெடுத்து வைத்திருந்த பரூக் அப்துல்லா, முகமது கோயா என பல தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.

நானும், தளபதி ஸ்டாலினும் பரிசினைக் கொடுத்துவிட்டு ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தோம். அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கலைஞரைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்கள். அப்போது அவர்கள், “நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஒரு மாநிலக் கட்சியின் தலைவர். ஆனால், அரசியலில், ஆட்சி நிர்வாகத்தில் இருந்த பல காலகட்டங்களில் நீங்கள் எடுத்த உங்களின் முடிவுகளும், நீங்கள் ஈடுபட்ட செயல்களும்தான் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. அகில இந்திய அரசியலில் ஈடுபட்டுள்ள எங்களைப் போன்றோர் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து பேசும்போது, முக்கிய பேசுபொருளாக உங்கள் பெயரும், உங்களின் செயல்களும் இருக்கின்றன. இவ்வளவு அறிவாற்றல் உடைய ஒருவர், ஒரு மாநிலத்தின் மூளையில் முடங்கிக் கிடக்கக் கூடாது. இப்போது வேண்டுகோள் வைக்கிறோம். நீங்கள் அகில இந்திய அரசியலுக்கு வாருங்கள். உங்களுக்கு மிகப்பெரிய பதவி காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்குரிய இடத்தை நாங்கள் தருவோம்" என்றுகூறி, கலைஞரை அகில இந்திய அரசியலுக்கு அழைத்தனர்.

அப்போது, எங்களைப் போன்ற இளைஞர்கள் அனைவரும், இந்த வேண்டுகோளை தலைவர் கலைஞர் ஏற்கப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஆனால் கலைஞர் பேசும்போது, அவருக்கே உரிய வகையில் நேரடியாக பதில் சொல்லாமல் வேறு உதாரணத்தைச் சுட்டிக் காட்டி குறிப்பிட்டார். கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. அதை எடுத்துக்காட்டி “இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்துள்ளது. இந்தியா ஏவிய விண்கலம் வெற்றிகரமாக வானத்தில் பறந்துகொண்டிருக்கிறது. அந்த விண்கலத்தில் முதன்முதலாக ராகேஷ் சர்மா, மல்கோத்ரா ஆகிய இரண்டு இந்திய விண்வெளி வீரர்கள் பறக்கின்றனர். அவர்களைப் பார்த்து நாட்டு மக்கள் பரசவத்துடன் பாராட்டுகிறார்கள். நானும் பாராட்டுகிறேன். இதை ஏன் சொல்கிறேன் எனில், வானில் பறக்கும் விண்கலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்குத் தெரியாது, அந்த விண்கலத்தையும் அதில் பயணம் செய்பவர்களையும் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு சாதனம் பூமியில்தான் இருக்கிறதென்று. அதுபோல், இங்குள்ள தலைவர்களே.. நீங்களெல்லாம் அரசியல் வானில் மின்னும் நட்சத்திரங்களாக இருக்கலாம். பெரிய தலைவர்களாக இருக்கலாம். நீங்கள் சார்ந்திருப்பது பெரிய கட்சிகளாக இருக்கலாம். ஆனால், உங்களுடைய அரசியல் போக்கின் திசை எப்படி இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு சாதனமாக திமுக தமிழகத்தில் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரை, என் கைகள் நடுங்காமல், நான் எழுதும் கடைசி எழுத்து எழுதுகிறவரை, என் நாக்கு தடுமாறாமல் கடைசி தமிழ்ச் சொல்லை உச்சரிக்கும் வரை, என் பேச்சு, எழுத்து, செயல் என அனைத்தும் தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்பதாகவே இருக்கும் என்பதை சூளுரையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பெரிய இடம், அதில் கிடைக்கும் வசதி வாய்ப்புகளை விட, நாம் யாராக இருக்கிறோம் என்பதில்தான் நமக்கு நிரந்தர மரியாதை இருக்கக்கூடும் என்பதை அவரது பேச்சில் சொல்லியதுடன், பின்னாளில் அதன்படியே நடந்தும் காட்டினார். பெரிய பதவி, புகழ், அதனால் கிடைக்கக்கூடிய அதிகாரம், பெருமை ஆகியவற்றைவிட, நோக்கம், லட்சியமே எந்த காலத்திலும் உயர்ந்தது என்பதை இந்த நிகழ்வின்மூலம் என் போன்றோர் உணர்ந்து இன்றளவும் அவர்வழி நின்று வருகிறோம். கலைஞரிடம் கற்றதை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்கிறோம்

இந்திய அரசியலில் அவசர நிலை காலத்தில் மட்டுமின்றி, குடியரசுத் தலைவர்களாக எப்படிப்பட்டவர்கள் உட்கார வேண்டும், பிரதமராக யார் வரவேண்டும், எந்த நேரத்தில் எப்படிப்பட்டக் கூட்டணி அமைக்க வேண்டும், அரசியல் சட்டத்தின் மாண்புகள் என்ன, மாநிலங்களின் அதிகாரங்கள் என்ன, கூட்டாட்சித் தத்துவம் என்றால் என்ன என்பதையெல்லாம் விளக்கும் நேரங்களில் தலைவர் கலைஞர் ஒன்றை மறக்காமல் அடிக்கடிச் சொல்வார்.

“மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்கிறோம் என்கிறபோது, இந்தியாவின் வலிமையைக் குன்றச் செய்துவிட்டு கேட்கிறோம் என யாரும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்தியாவின் வலிமை குன்றாமல், அனைத்து மாநிலங்களும் அதிகாரத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை” என வலியுறுத்துவார். அதைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்களால், இன்னமும் இதில் குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கலைஞரைப் போல் தெளிவான கொள்கை உடையவர்கள், அதை வெற்றிகரமாகச் செய்திட வழிமுறைகளைக் கண்டவர்களை வரலாற்றில் தேடிப் பார்த்தால் மிகச் சிலர் மட்டுமே இருப்பர். வாழ்ந்த 90 ஆண்டுகளில் எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தன. எத்தனை சாதனைகள், எழுத்து, பேச்சு, திரைப்பட வசனங்கள், தனிப்பட்ட பண்புகள், நகைச்சுவை உணர்வுகள் என கலைஞரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். என்னைப் போன்றவர்கள் இன்று நிலைத்து நின்று, எந்த நேரத்திலும் கட்சியின் கொள்கைகளை காப்பாற்றிட மன உறுதியுடன் இருப்பதற்கு தலைவர் கலைஞரே காரணம். இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர்ந்து கண்ணியம் குறையாமல், கொள்கையின் வலிமையை மாற்றாரின் மனம் புண்படாமல் அழுத்தமாக எடுத்துச் சொல்லும் பண்பு என்னிடம் வளர்ந்திருப்பதற்கு கலைஞரே காரணம். இந்த பயிற்சியெல்லாம் அவர் கற்றுக் கொடுத்தது. இளையவர்களுடன் இணைந்து சென்றால்தான் ஒரு இயக்கமும், அமைப்பும் எல்லா கால ஓட்டங்களிலும் வெற்றிகரமாக இருக்க முடியும் என அடிக்கடி கூறுவார். தொய்வில்லாமல் தொடர் சங்கிலி போல், அடுத்தடுத்த தலைமுறைகளுடன் ஏற்ற, இறக்கங்களுடன் பழகும் பாங்கு எல்லோருக்கும் கைவராது. அது, கலைஞரிடம் இருந்தது. அவரிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். அவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்கிறோம்.

கட்டுரையாளர்: திருச்சி சிவா எம்.ஏ.பி.எல்., திமுக மாநிலங்களவைத் தலைவர், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்.


தொகுப்பு: அ. வேலுச்சாமி.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x