

மேற்குத் தொடர்ச்சி மலையைவிடக் கிழக்குத் தொடர்ச்சி மலை மிகவும் பழமை வாய்ந்தது. சார்னோகைட், கருங்கல், கோண்டாலைட், படிகப் பாறைகளின் கலவைதான் கிழக்குத் தொடர்ச்சி மலை. மேற்குத் தொடர்ச்சி மலை அளவுக்குத் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான மலைத்தொடர்தான் கிழக்குத் தொடர்ச்சி மலை. இது தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டும் சில இடங்களில் குன்றுகள் போலவும் இருக்கும் மலைத்தொடர். இந்த மலைத் தொடரில் ஒன்றான ஜவ்வாது மலையைப் (ஏலகிரி மலை) பற்றிப் பார்ப்போம்.
கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கியமான ஒரு மலைதான் ஜவ்வாது மலை. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஜவ்வாது மலைத்தொடர் 262 ச.கி.மீ. பரப்பில் விரிந்துள்ளது. தென்பெண்ணை, பாலாறு ஆகிய ஆறுகளுக்கு இடையில் இந்த மலை அமைந்திருப்பது இதன் இன்னொரு சிறப்பு. இந்த மலையின் சராசரி உயரம் 1,060 மீட்டரில் இருந்து 1160 மீட்டர் ஆகும். செய்யாறு, ஆரணி ஆறு, கமண்டலா நதி, மிருகண்ட நதி போன்ற சிற்றாறுகள் எல்லாம் இந்த மலையிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. ஒரு காலத்தில் சந்தன மரங்கள் ஜவ்வாது மலைத் தொடரில் நிரம்பி வழிந்தன. ஆனால், தற்போது பெயருக்கு மட்டுமே சந்தன மரங்கள் தென்படுகின்றன.
ஜவ்வாது மலையில் உள்ள இன்னொரு புகழ்பெற்ற மலைத் தொடர் ஏலகிரி மலை. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகியவற்றுக்குப் பிறகு மக்கள் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்று ஏலகிரி மலை. ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் இது, வேலூர் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. ஜவ்வாது மலை, பாலமதி மலை ஆகிய இரண்டு சிகரங்களோடு சேர்ந்து ஏலகிரி மலை பிரம்மாண்டமாகக் காட்சியளித்து வருகிறது. வேலூரின் தென் மேற்கு எல்லையில் உள்ள ஏலகிரி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சிறிய சுற்றுலாத்தலம் இது.
கடல் மட்டத்திலிருந்து 1,048.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ஏலகிரி மலை. சுமார் 30 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள ஏலகிரி மலையில் உள்ள மலர்த் தோட்டங்களும் பழத்தோட்டங்களும் பச்சைப்பசேல் என்ற பள்ளத்தாக்குகளும் நீர்வீழ்ச்சிகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு வாய்ந்தவை. ஏலகிரி செல்லும் சாலையில் 14 குண்டூசி வளைவுகள் உள்ளன. இந்த 14 குண்டூசி வளைவுகளில் முதல் 7 குண்டூசி வளைவுகளுக்குத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களும், அடுத்த 7 வளைவுகளுக்குக் கடையேழு வள்ளல்களின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.
ஏலகிரி மலையில் 14 குக்கிராமங்கள் உள்ளன. ஏலகிரி மலை மீது கோயில்கள் அதிகமாக உள்ளன. இந்த மலைப்பகுதிக்குள்ளே மிக உயர்ந்த மலைப்பகுதியாகிய சுவாமி மலை உள்ளது. அதேபோல மிகவும் பிரசித்திபெற்ற புங்கனூர் செயற்கை ஏரியும் ஏலகிரி மலையில் உள்ளது. இந்த மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சி, வடக்கே அமிர்தி நீர்வீழ்ச்சி, மேற்கே ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி போன்றவை மலைக்குப் பெருமை சேர்க்கின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்குப் பூங்கா சிறார்களுக்கான சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது.
ஜவ்வாது மலைத்தொடருக்குப் பெருமை சேர்த்துவருகிறது, காவலூர் வானியல் ஆய்வகம். வைணு பாபு வான் ஆய்வகம் (Vainu Bappu Observatory) இங்குதான் அமைந்துள்ளது. 1986ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இந்த வான் ஆய்வகத்தைத் திறந்து வைத்தார். இங்குள்ள 2.34 மீட்டர் விட்டம் உள்ள தொலைநோக்கிதான் ஆசியாவிலேயே மிகப் பெரியது.