பெருந்தொற்றுகள் முதல் உணவு சார்ந்த நோய்கள் வரை - உலக சுகாதார மாநாடு முன்வைத்த யோசனைகள்

பெருந்தொற்றுகள் முதல் உணவு சார்ந்த நோய்கள் வரை - உலக சுகாதார மாநாடு முன்வைத்த யோசனைகள்
Updated on
2 min read

கரோனா தொற்று காலத்திற்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து உள்ளது என்றுதான் கூற வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக பேரிடர்களுக்கு இடையில் தான் வாழ்க்கை என்று ஐபிசிசி (பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு) அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றத்தால் அதிக அளவு பாதிப்பை எதிர்கொள்ள போவது சுகாதாரத்துறை.

இது மாதிரியான பலவேறு நெருக்கடியை சுகாதாரத்துறை வரும் சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடந்து முடிந்துள்ளது. உலகை முடக்கிய கரோனா தொற்றுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. மே 22 முதல் 28 வரையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல முக்கிய சுகாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

பெருந்தொற்றுக்கு ஏற்ற நகரங்கள்: சுகாதார அவசர நிலைக்கு ஏற்ற வகையில் நகரங்களை மேம்படுத்த வேண்டும் என உலக சுகாதார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுகாதார அவசர நிலை மற்றும் பெருந்தொற்று காலங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் நகரங்களில் பணியாற்றும் உள்ளூர் அதிகாரிகள் பங்கு முக்கியமானது. அதன் காரணமாக நகரங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளுக்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு, திட்டமிடல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசி சோதனை: தடுப்பூசியால் தான் கரோனா தொற்று இன்று கட்டுக்குள் வந்துள்ளது. இனிவரும் காலங்களில் பெருந்தொற்றுகளை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கும். எனவே இது தொடர்பாக ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்மானத்தில், தடுப்பூசி சோதனை தொடர்பான ஆராய்ச்சிகளில் அதிக அளவு முதலீடு செய்வது, சோதனை மேற்கொள்வது, முடிவுகளின் தரத்தை கண்டறிவது, வெளிப்படத்தன்மை போன்றவற்றை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டது.

தொற்றா நோய்கள்: கரோனா, போர், பேரிடர் காலங்களில் தொற்றா நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் வழங்க உரிய கொள்கைகளை தயார் செய்ய வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டர்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானால் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய இருந்த காரணத்தால் இதற்கான கொள்கைகளை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உணவு சார்ந்த நோய்கள் : உலகில் 10-இல் ஒருவர் உணவு சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து மக்களும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, உணவுப் பாதுகாப்பு அமைப்புகள் நவீனமாக மாற்றுதல், பல துறைகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பான உணவை அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்பதை உலக சுகாதார மாநாடு வலியுறுத்தியுள்ளது.

இதைத் தவிர்த்து நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் முன்னேற்றம், பாலியல் சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துவது, உடல் எடை அதிகரிப்பை குறைப்பது, சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பல சுகாதார பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in