Published : 31 May 2022 09:57 PM
Last Updated : 31 May 2022 09:57 PM

ரயில்வேயிடம் ரூ.35 கேட்டு 5 ஆண்டுகள் போராடிய தனி ஒருவரால் இப்போது 2.98 லட்சம் பேருக்கு பயன்!

சுஜித் சுவாமி.

கோட்டா: இந்திய ரயில்வே துறை தனக்கு திரும்பக் கொடுக்க வேண்டிய 35 ரூபாயை கேட்டு ஐந்து ஆண்டு காலம் போராடிய நபருக்கு ஒருவழியாக வெற்றி கிடைத்துள்ளது. இப்போது அவருடன் சேர்த்து சுமார் 2.98 லட்சம் ரயில்வே பயனர்களும் பலன் அடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா (Kota) பகுதியை சேர்ந்தவர் சுஜித் சுவாமி. பொறியாளரான அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரயில்வே துறை சார்பில் தனக்கு சேர வேண்டிய 35 ரூபாயை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் துணை கொண்டு போராடி வந்தார். இப்போது அதற்கான பலனையும் பெற்றுள்ளார் அவர். தனி ஒருவராக அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இப்போது 2.98 லட்சம் ஐஆர்சிடிசி பயனர்கள் பலன் அடைந்துள்ளனர். அவரது போராட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்.

என்ன நடந்தது? கடந்த 2017 ஏப்ரல் வாக்கில் தான் வசித்து வரும் கோல்டா நகரிலிருந்து தலைநகர் டெல்லிக்கு ஜூலை 2 வாக்கில் ரயிலில் செல்ல கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலுக்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்துள்ளார் சுவாமி. அந்த டிக்கெட்டின் விலை 765 ரூபாய். அவரது டிக்கெட் நீண்ட நாட்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருந்த காரணத்தால் டிக்கெட்டை ரத்து செய்துள்ளார். அவருக்கு 665 ரூபாயை திரும்ப கொடுத்துள்ளது ரயில்வே. மொத்த தொகையான 765 ரூபாயில், 65 ரூபாய் பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அது போக 35 ரூபாய் சேவை வாரியாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது கடந்த 2017 ஜூலை 1 வாக்கில் தான். ஆனால் அவர் அதற்கு முன்னதாகவே தனது டிக்கெட்டை ரத்து செய்துள்ளார். இருந்தும் சேவை வரி பிடித்தம் செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆர்டிஐ போராட்டம்: வழக்கமாக இது போன்ற சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடையும் இந்தியர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் அப்படியே அதை விட்டுவிட்டு நகர்ந்து விடுவார்கள். ஆனால் அவருக்கு அந்த 35 ரூபாயை விட்டுக் கொடுக்க மனம் இல்லை. தனக்கு சேர வேண்டிய தொகையை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) வழியே போராட்டத்தை தொடங்கினார். ஐந்து ஆண்டுகளில் ஐம்பது முறை ஆர்டிஐ விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார் சுவாமி.

"இது நீண்ட நெடிய போராட்டமாக அமைந்தது. ஐம்பது முறை ஆர்டிஐ தாக்கல் செய்திருந்தேன். ரயில்வே, ஐஆர்சிடிசி, நிதி அமைச்சகம், சேவை வரித்துறை என பல்வேறு இடங்களுக்கு கடிதங்களும் எழுதி உள்ளேன். இது தொடர்பாக பிரதமர், ரயில்வே துறை அமைச்சர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜிஎஸ்டி கவுன்சில், நிதி அமைச்சர் என பலரையும் டேக் செய்து, எனக்கு சேரவேண்டிய 35 ரூபாய் வேண்டும் என ட்வீட் மூலம் கோரிக்கை வைத்துள்ளேன்" என்கிறார் சுவாமி.

ஜிஎஸ்டி அமலுக்கு முன்னதாக முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு ரத்து செய்யப்பட்டால் சேவை வரை பிடித்தம் செய்யப்படும் என ஐஆர்சிடிசி தனது சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது. அதோடு ஆர்டிஐ பதிலில் ஜூலை 1, 2017-க்கு முன்னதாக பயணச்சீட்டு ரத்து செய்தால் சேவை வரி இல்லை என ஐஆர்சிடிசி தெரிவித்திருந்தது. பின்னர் 35 ரூபாய் சுவாமிக்கு வழங்கப்படும் எனவும் ஐஆர்சிடிசி தெரிவித்தது.

அதன்படி கடந்த மே 1, 2019 வாக்கில் சுவாமியின் வங்கி கணக்கில் 33 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை 2 ரூபாய் சேவை வரியாக அந்த 35 ரூபாயில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தன்னுடைய 2 ரூபாயை விட்டுத்தர சுவாமிக்கு மனமில்லை. அதற்காக ஆர்டிஐ தாக்கல் செய்யும் பணியை தொடர்ந்துள்ளார்.

ஒருவழியாக அதற்கான பலனை கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் பெற்றுள்ளார். அவரது ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு பதில் அளித்த ஐஆர்சிடிசி-யின் மூத்த அதிகாரி ஒருவர், சுமார் 2.98 லட்சம் பயனர்களுக்கு தலா 35 ரூபாயை திரும்ப கொடுக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். மொத்தமாக 2.43 கோடி ரூபாய் இப்போது பயனர்களுக்கு திரும்ப வழங்கப்பட உள்ளது. இதில் சுவாமிக்கு சேர வேண்டிய 2 ரூபாய் கடந்த சனிக்கிழமை அன்று அவரது வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் உறுதி செய்துள்ளார்.

"எனக்கு சேர வேண்டிய 35 ரூபாய் முழுவதுமாக எனக்கு கிடைத்துள்ளது. அதில் எனக்கு திருப்தி. என்னுடைய இந்த ஐந்து ஆண்டு கால போராட்டத்திற்காக ஆண்டுக்கு 100 ரூபாய் வீதம் 500 ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. அந்த தொகையையும் சேர்த்து 535 ரூபாயை PM கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளேன். அதோடு என்னோடு சேர்த்து பிற பயனர்களும் பலன் அடைவதில் எனக்கு மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார் சுவாமி.

— Sujeet Swami️ (@shibbu87) May 30, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x