முடிவு எடுப்பதில் குழப்பமா?

முடிவு எடுப்பதில் குழப்பமா?
Updated on
1 min read

முடிவெடுப்பது, வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகை செய்யக் கூடிய ஒரு செயல். ‘தீர்மானம்தான் உங்கள் விதி’ எனச் சொல்வார்கள். அதனால் முடிவெடுப்பதில் உங்களுக்குக் குழப்பம் இருக்கக் கூடாது.

வெற்றி பெற்றவர்களுக்கு அடிப்படையான தகுதி, முடிவெடுக்கும் திறமையாக இருக்கும். தீர்மானங்களில் இருந்துதான் செயல்பாடுகள் பிறக்கும். செயல்பாடுகள் இருந்தால்தான் முடிவு இருக்கும். நீங்கள் எடுக்கும் தீர்மானம் தோல்வியானால், உங்கள் செயல்பாடுகள் எல்லாம் வீணாகும். அதனால் உங்கள் வாழ்க்கையும் தோல்வி அட்டையும் வாய்ப்பும் இருக்கிறது.

நம்மில் பெரும்பாலானோருக்குத் தீர்மானம் எடுப்பதில் சிக்கல் இருக்கிறது. ஏனெனில் தீர்மானம் எடுப்பதில் நமக்குப் போதிய அனுபவம் இல்லை. குழந்தைகளாக இருக்கும்போதே நம்முடைய தீர்மானங்களைப் பிறர் எடுக்கின்றனர். நம் குழந்தைகளுக்கு அதையே நாமும் செய்கிறோம். குழந்தைகள் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும், எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும், என்பதை நாம் தீர்மானித்து அவர்களைப் பின்பற்ற சொல்வோம். அதற்குப் பதிலாக ‘எவ்வளவு நேரம் நீ விளையாடப் போகிறாய்?’ என அவர்களிடமே தீர்மானம் எடுக்கச் சொல்லிக் கேட்டால் குழந்தைகள் தீர்மானம் எடுக்கப் பழகுவார்கள்.

தீர்மானம் எடுப்பதில் பல நிலைகள் உள்ளன. அந்த நிலைகளைத் தெரிந்துகொண்டால் நாம் எளிதாகத் தீர்மானம் எடுக்க முடியும். உதாரணமாக ஒரு வீடு வாங்கப் போகிறோம் என வைத்துக்கொள்வோம்.

முதலில் வீடு வாங்கத் தீர்மானித்த பிறகு அதன் சூழலை ஆராய வேண்டும். உங்கள் குழந்தைகளின் பள்ளி செல்வதற்கான வசதி, அடிப்படைத் தேவைகள், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையன வசதிகள் ஆகியவை அந்த வீட்டில் உள்ளனவா எனப் பார்க்க வேண்டும். அதாவது தீர்மானம் எடுக்கும் முன் அதன் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் ஏற்கெனவே சொன்ன இந்த வசதிகள் இருக்கின்றனவா, இந்த வசதிகள் உள்ள வீடுகள் எங்கு இருக்கின்றன போன்ற தகவல்களைத் தேடி அறிந்துகொள்ள வேண்டும். அதாவது அதன் புள்ளி விபரங்களைச் சேகரிக்க வேண்டும்.

மூன்றாவதாக நாம் வீடு வாங்குவதற்கு முன், ஒரே வீடு என்று இல்லாமல் நான்கைந்து வீடுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்கள் தீர்மானத்திற்கு மாற்றைத் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து தேர்ந்தெடுத்துள்ள வீடுகள் ஒவ்வொன்றையும் நாம் வாங்கினால் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். அதாவது மாற்று ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் நாம் தேர்ந்தெடுக்கும்போது ஏற்படும் பயன்களைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து நாம் எடுத்த தீமானத்தைச் செயலாக மாற்ற முயல வேண்டும். இறுதியாக நாம் எடுத்த தீர்மானத்தை மதிப்பிட வேண்டும். எடுத்த தீர்மானத்தில் ஏதாவது போதாமை உண்டா என்பதைப் பார்க்க வேண்டும். இருந்தால் அதைப் பொறுத்துத் தீர்மானம் எடுக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in