

திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதில் வரும் சோகக் காட்சியைப் பார்த்து மவுனமாக அழுத நிகழ்வும், அதனை யாருக்கும் தெரியாமல் மறைக்கப் போராடிய அனுபவமும் நம்மில் பலருக்கும் உண்டு. அப்படி அழுவதற்காக வெட்கப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? இனி, அதற்கு அவசியம் இல்லை என்கிறார் கான்பெர்ரா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் டெப்ரா ரிக்வுட்.
வெளிப்படையாக அழுவது என்பது, ஒரு வகையான பலத்தின் குறியீடாகும். அது அந்த மனிதன் மற்றவர்களின் மீதான தனது உணர்வுகளை பயப்படாமல் வெளிப்படுத்துபவர் என்பதை காட்டுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உயிர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று கண்ணீர். பலருக்கு அது திரைப்படங்கள் பார்க்கும்போதும் வெளிப்படுகிறது. அது அவர்கள் சமூகத்துடன் கொண்டிருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பின் வெளிப்பாடு, மன வலிமையின் அடையாளம்.
இவ்வாறாக விவரிக்கும் டெப்ரா ரிக்வுட், தி கான்வர்சேஷன் தளத்தில் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது...
திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் அமைதியாகவோ, உடைந்தோ அழுதிருக்கலாம். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கண்கள் பனிப்பது யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்து மறைமுகமாக அதைத் துடைத்தும் இருக்கலாம் அல்லது வெடித்து அழுதும் இருக்கலாம். இந்த உணர்வு வெளிப்பாட்டிற்கு மார்லியோ நானுமோ கூட விதிவிலக்கு இல்லை. திரைப்படம் பார்த்து அழுவதும் கண்ணீர் வெளிப்படுவதும் பலவீனத்தின் அடையாளமா (அதனால்தான் அதை உங்கள் நண்பர்களிடமிருந்து மறைக்கிறீர்கள்) அல்லது அது வலிமையின் சின்னமா, உணர்வு முதிர்ச்சியின் வெளிப்பாடா என பல கேள்விகள் நம்முள் எழலாம்.
ஒரு நல்லத் திரைப்படம் என்பது பார்வையாளர்களை ஆழமாகப் பாதித்து, அவர்களை தன்னுள் ஒன்றச் செய்துவிடும்படியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். அது பார்வையாளர்கள் பார்ப்பதை, உணர்வதை நிஜமாக உணரச்செய்து, கதாபாத்திரங்களின் உலகத்திற்குள் அவர்களைப் பயணிக்க வைக்கும். திரையில் பார்ப்பது நிஜம் இல்லை என்று தெரிந்தாலும் சில நேரங்களில் பார்வையாளர்களை கதாபாத்திரமாகவே மாற்றி, அவர்களுடன் ஒன்றச்செய்து விடும். உண்மைக் கதைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் சில படங்கள் இந்த உணர்வை இன்னும் அதிகமாக்கும். சில படங்களின் உணர்ச்சி பிரவாகம் வசீகரிக்கும் தன்மையுடையவை.
அன்பின் ஹார்மோன்: நரம்பியல் நிபுணர் பால் சாக் தனது ஆய்வின் மூலமாக இதுபோன்ற அழுத்தமான கதைகளைப் படிக்கும் போதும் பார்க்கும் போதும் பார்வையாளர்களிடமிருந்து ஆக்சிடாக்சி வெளிப்படுகிறது என்று கண்டறிந்தார்.
ஆக்சிடாக்சின் பிரசவம், தாய்ப்பாலுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. பிரசவத்தின்போது சுருக்கங்களை அதிகரிக்கச் செய்து தாய்ப்பாலைத் தூண்டுகிறது. அதேபோல, கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், பாலுறவு, செல்லப் பிராணிகளை வளர்த்தல் போன்ற நேர்மறையான தொடுதல்கள், நேர்மைறையான சமூக உரையாடல்களின் போதும் ஆக்சிடாக்சின் வெளிப்படுகிறது.
இதன் விளைவாக அது அன்பின் ஹார்மோன் என்றழைக்கப்படுகிறது.
சமூக விலங்கினமான மனிதர்களின் வாழ்க்கை சமூகப் பிணைப்பைச் சார்ந்தே இருக்கிறது, அதில் ஆக்சிடாசின் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதுதான் மனிதர்களுக்கு அவர்களின் முக்கியமான பராமரிப்பாளர்களையும், பாதுகாப்பான சமூக குழுக்களையும் அடையாளம் காட்டுகிறது. மற்றொரு நரம்பியல் நிபுணரான, ராபர்ட் ஃப்ரோம்கே, "ஆக்சிடாக்சின், இன்னும் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு நபர் தற்போது என்ன உணர்கிறார் என்பதின் செயல்பாட்டை பெருக்கும் பெரிய காரணியாக செயல்படுவதை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என்கிறார்.
ஆகவே ஆக்சிடாக்சின் உயிரியல் ரீதியாக வலிமையான சமூகப் பிணைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அது உணர்வுபூர்வமான எதிர்வினைகளை அதிகரிக்கவும் செய்கிறது. திரைப்படம் பார்க்கும்போது அழுகை வருவது, மோசமான சமூக அனுபவத்தின் காரணமாக நீங்கள் உணரும் விஷயங்களால் ஆக்சிடாக்சின் தூண்டப்படுவதன் அறிகுறியாகும். படத்தின் கதை உங்களின் கவனத்தை ஈர்த்து உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. மேலும் ஆக்சிடாக்சின் அனுதாபம், இரக்க உணர்வுடன் அதிகப்படியான தொர்புடையது. அது சமூக பிணைப்பிற்கான உணர்வுகளை தீவிரப்படுத்தி, திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் சமூக குறிப்புகளை உன்னிப்பாக கவனிக்க வைக்கிறது. திடீரென உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
‘எம்ப்பதி’ பலத்தின் குறியீடு: தன்னைப் போல் பிறரைக் கருதுதல், பிறர் நிலையில் நின்று உணர்ந்து அணுகுதல் என்ற பொருள்படும் எம்ப்பதி (Empathy) என்பது உணர்வு முதிர்ச்சி ஆற்றலில் முதன்மையான ஒன்று. உணர்ச்சிவசப்படும்போது நீங்கள் உங்களுடைய சொந்த உணர்வுகளைக் கண்டடைந்து, அதனைச் சரி செய்யும் அதேவேளையில் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயலாற்றுகிறீகள்.
உளவியலாளர் டேனியல் கோல்மன் கூற்றுப்படி, "எம்ப்பதி என்பது சுய விழிப்புணர்வு, சுயகட்டுப்பாடு, உந்துதல், சமூக திறன் போன்ற உணர்வு முதிர்ச்சியின் 5 முக்கிய குணாதிசயங்களில் ஒன்று. மிகை உணர்வு முதிர்ச்சி, சிறந்த தலைமைப் பண்பு, தொழில் வெற்றி, கல்வி சாதனை மற்றும் சிறந்த சமூக மற்றும் தனிப்பட்ட உறவுகளுடன் தொடர்புபடுத்தி காட்டப்படுகிறது. அது உடல் மற்றும் மன வலிமை மற்றும் நன்நடத்தையுடனும் தொடர்புடையது. நல்ல உணர்வு முதிர்ச்சி மன அழுத்த பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகிறது.
திரைப்படத்தைப் பார்த்து அழுவது என்பது மிகையான எம்ப்பதி, சமூக விழிப்புணர்வு மற்றும் உணர்வு முதிர்ச்சியின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது. அதேபோல, பலவீனத்தை விட தனிப்பட்ட பலத்தினையும் உணர்த்துகிறது. வெளிப்படையாக அழுவது என்பது, ஒரு வகையான பலத்தின் குறியீடாகும். அது அந்த மனிதன் மற்றவர்களின் மீதான தனது உணர்வுகளை பயப்படாமல் வெளிப்படுத்துபவர் என்பதை காட்டுகிறது.
கண்ணீர் பலவீனத்தின் குறியீடில்லை: அழுவது, குறிப்பாக மற்றவர்களின் வலிக்காக அழுவது பலவீனத்தின் குறியீடாக பார்க்கப்படுவதற்கு காரணம், அது பெண்களின் குணமாக கட்டமைக்கப்படிருப்பதே ஆகும். இதில் ஆக்சிடாக்சினை இணைக்கும் போது, எம்ப்பதி, சமூகப் பிணைப்புடனான அதன் உறவு, குழந்தை பிறப்புடன் தொடர்புபடுத்தப்பட்டு, அழுகை = பெண்கள் = பலவீனம் என கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், உங்களுடைய உணர்வு முதிர்ச்சியை வெளிப்படுத்துவது பலவீனம் இல்லை. உணர்ச்சிவசப்பட்டு அழுவது மனித இயல்புகளில் ஒன்று. நல்ல திரைப்படங்கள் நம்மை வேறு உலகத்திற்குள் நுழையச் செய்து, சக்தி வாய்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி நமது மூளையில் உயிரியல் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
திடீரென கண்ணீர் வெளிப்படுவது என்பது உங்களின் மிகையான எம்ப்பதி உணர்வின் எதிர்வினையாகும். அதனை மழுப்பி மறைக்க முயற்சிக்காமல் ஏற்றுக்கொண்டு உங்கள் உணர்வு முதிர்ச்சியை நினைத்து பெருமைப்படுங்கள். அடுத்ததாக உங்கள் நண்பர்களின் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளைத் தெரிந்துகொள்ள கண்ணீர் சிந்த வைக்கும் படங்களின் பட்டியலையும் தேடுங்கள்.