

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில்தான் லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு பார்வையாளர்கள் மத்தியில் பெண் போல வேடமிட்ட ஒருவர் மோனலிசா ஓவியத்தை தாக்க முற்பட்டார். இதனால் பெரும் பரப்பரப்பு நிலவியது. மோனலிசா ஓவியத்தை தாக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
லியோனார்டோ டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியம் எவ்வளவு பிரபலமானதோ, அவ்வளவு சர்ச்சைகளும் நிறைந்தது. ஆம், மோனலிசாவுக்காக எழுதப்பட்ட காதல் கடிதங்களை நீங்கள் அறிந்துள்ளீர்களா..? நிறைய காதல் கடிதங்கள் மோனலிசாவுக்கு வந்திருக்கின்றன. 1982-ஆம் ஆண்டு லூக் மாஸ்பெரோ என்ற கலைஞர், மோனலிசாவின் மீது தீவிர காதல் கொள்கிறார். முடிவில் தனது உயிரை விடுக்க முடிவு செய்து மரணிக்கிறார்.
``பல வருடங்களாக அவளின் புன்னைகையுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்... இறுதியாக நான் மரணத்தையே தேர்வு செய்தேன்!” - இது லூக் மாஸ்பெரோ எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த வரிகள்.
இவ்வாறு மோனலிசா ஓவியம் தன்னைச் சுற்றிலும் பல ரகசியங்களைச் சுழல வைத்துக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற ‘மோனலிசா’ ஓவியம் 1503-ஆம் ஆண்டு இத்தாலிய ஓவியர் லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்டது. கிட்டதட்ட 500 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தை தனது ஈர்ப்பில் வைத்துக் கொண்டிருக்கும் மோனலிசா ஓவியத்தைப் பற்றி பலரும் அறியாத தகவல்கள் இங்கே...
அவளது பெயர் மோனலிசா அல்ல: இந்த ஓவியத்தில் இருப்பவரின் பெயர் மோனலிசா கிடையாது... அவர் பெயர் லிசா கெரார்டினி. இத்தாலியைச் சேர்ந்த இவரை உருவகமாக வைத்துதான் டாவின்சி இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். இத்தாலியர்களால் மோனா என்று விரும்பி அழைக்கப்பட்டு பின்னர் மோனலிசா என இந்த ஓவியம் அழைக்கப்படுகிறது. இந்த ஓவியத்தை டாவின்சி முழுமையாக முடிக்கவில்லை. மோனலிசா ஓவியத்தை முடிப்பதற்கு முன்னரே டாவின்சி இறந்துவிட்டார். இதனால் அவரது உதவியாளர்களே இந்த ஓவியத்தை முழுமைப் பெற செய்திருக்கிறார்கள்.
நெப்போலியனும் மோனலிசாவும்: மோனலிசா ஓவியத்தால் ஈர்க்கப்பட்ட நெப்போலியன் பிரான்ஸில் இருந்த அவரது அரண்மனையில் நான்கு ஆண்டுகளாக மோனலிசா ஓவியத்தை வைத்திருந்தார் என்று வரலாறு கூறுகிறது. மேலும், மோனலிசா ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு இத்தாலி பெண்ணான தெரேசா குவாடாக்னி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். மோனலிசா ஓவியம் வரைவதற்கு காரணமாக இருந்த லிசா கெரார்டினி வழித்தோன்றல்தான் தெரேசா குவாடாக்னி என்றும் நம்பப்படுகிறது.
மோனலிசா ஓவியம் பெரியது அல்ல: பெரும் செல்வாக்கு மிகுந்த மோனலிசா ஓவியம் மிகச் சிறிய அளவிலே வரையப்பட்டுள்ளது. எண்ணெய் - மரப் பேனலில் வெறும் 30 அங்குலம் கொண்ட மோனலிசா ஓவியம் 18 பவுண்டுகள் எடை கொண்டது.
புருவம் எழுப்பிய விவாதம்: மோனலிசா ஓவியத்தை நீங்கள் உற்று நோக்கினால் அதில் புருவம் வரையப்படாமல் இருப்பது போல் தோன்றும். 1500 ஆம் ஆண்டுகளில் செல்வந்த மக்கள் புருவம் வைத்திருக்க மாட்டார்கள் அதனால்தான் மோனலிசா ஓவியத்தில் புருவம் இல்லை என்று கூறப்பட்டது. இன்னும் சிலர் ஓவியம் முழுமையாக முடிக்கப்படாத காரணத்தினால் புருவம் வரையப்படவில்லை என்று கூறினர். ஆனால் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதி நவீன ஸ்கேன் மூலம் ஓர் உண்மை தெரிய வந்தது. டாவின்சி மோனலிசாவுக்கு புருவங்கள் வரைந்திருக்கிறார். காலப்போக்கில் அந்த புருவங்கள் மறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
மோனலிசா ஓவியம் குறித்து ஏராளமான கதைகள், கவிதைகள் எழுதப்பட்டுள்ளது. மோனலிசாவின் மர்ம புன்னகை இன்னும் பெரும் தாக்கத்தை கவிஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் மோனலிசா: மோனலிசா ஓவியம் 1956-ஆம் ஆண்டு கல்லைக் கொண்டு தாக்கப்பட்டது. அதன்பின்னர் ஆசிட் வீச்சுக்கும் மோனலிசா ஓவியம் உள்ளானது. இந்தத் தொடர் தாக்குதல் காரணமாக குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் ஓவியம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட லிசா: 1911 ஆம் ஆண்டு மோனலிசா ஓவியம் திருடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோனலிசா ஓவியம் மாட்டப்பட்டிருந்த சுவரில் பிரான்ஸ் மக்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் பல்வேறு கட்ட தேடுதலுக்குப் பிறகு மோனலிசா ஓவியம் மீட்கப்பட்டது.
இவ்வாறு பல தடைகளையும், சர்ச்சைகளையும், ஆச்சரியங்களையும் தாங்கிக்கொண்டே மோனலிசா அந்த மர்மப் புன்னகையை வீசிக் கொண்டிருக்கிறார்.