Published : 31 May 2022 02:11 PM
Last Updated : 31 May 2022 02:11 PM

புகையிலை எதிர்ப்பு | நியூசிலாந்து காட்டும் பாதை! 

பெருந்தொற்று, கொள்ளை நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவுப் பஞ்சம், குடிநீர்த் தட்டுபாடு, உயிர்காக்கும் மருந்துத் தட்டுப்பாடு என வளரும், வளர்ந்த நாடுகள் எதிர்கொள்ளும் தீவிரப் பிரச்சினைகள் ஏராளம். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிய ஒரு பெரும் பிரச்சினை புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டால் விளையும் பயங்கரம். ‘புகையிலை’க்கு எதிரான சண்டையில்தான் உலகநாடுகள் தோற்றுக்கொண்டே இருக்கிறன.

ஆனால், நியூசிலாந்து என்கிற ஒரு மக்கள் நல தேசம், புகையிலைக்கு எதிரான தன்னுடைய கொள்கை முடிவில் அழுத்தமான முன்னகர்வை வைத்திருக்கிறது. அதை முன்மாதிரியாகக் கொள்ள மற்ற நாடுகள் முன்வரும்போது ‘மரண வியாபாரம்’ என்று வருணிக்கப்பட்டுவரும் புகையிலைப் பொருட்கள் விற்பனையும் அதை விளைவிக்கும் தொழிலும் தானாகவே ஒழிந்துபோகும். நியூசிலாந்து அப்படி என்ன செய்துவிட்டது என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். அதற்கு முன் புகையிலையின் பயன்பாட்டால் இந்தியா எதிர்கொண்டுவரும் மோசமான விளைவுளைக் கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம். ஏனேன்றால் உங்கள் வீட்டிலும் இருக்கலாம் ஒரு ‘புகைஞர்’!

2ஆம் இடம் என்பது பெருமை அல்ல!

உலகச் சுகாதார நிறுவனம் அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி, இன்று உலகப் புகையிலை உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்தது அமெரிக்கா. படிப்படியாக உயர்ந்த புகையிலை மரணங்களின் விளைவாக அங்கே உருவான மக்கள் விழிப்புணர்வு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கடந்த 75 ஆண்டுக் காலப் புகையிலை எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றின் விளைவாக, புகையிலை உற்பத்தியில் இரண்டாம் இடத்துக்குச் சென்று, தற்போது ஆறாவது இடத்துக்குச் சென்றுவிட்டது. அமெரிக்கா விழித்துக்கொண்ட நேரத்தில், இந்தியா தன் கண்களை மூடிக்கொண்டு விழுந்ததுதான் பெரும் சாபம்! ஆம்! கடந்த 2020ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில், புகையிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துகொண்டிருக்கிறது. இது ஒருபோதும் பெருமைகொள்ளத் தக்கது இடம் அல்ல. இந்தியா புகையிலையில் விழுந்த வரலாற்றுத் தடத்தைத் தேடினால் அவற்றைப் பெரும் பட்டியலாக வரிசைப்படுத்தலாம். அதைக் கடந்து இந்தியாவில் இன்று புகையிலைப் பொருட்கள் புதுப்புது வடிவங்கள் எடுத்து, 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியச் சிறார்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது பற்றித் தெரிந்துகொண்டு அவற்றுக்கு எதிராக நிற்க வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கிறோம்.

புகையிலைக்கு எங்கேயிருக்கிறது எதிர்ப்பு?

அமெரிக்காவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், புகையிலைப் பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ‘டி.சி.டி.எஃப்’ (The Campaign for Tobacco-Free Kids). எதிர்காலத் தலைமுறையைப் புகையிலைப் பொருட்களிலிருந்து மீட்டெடுக்க, கடும் அரசியல் அழுத்தங்களுக்கு நடுவே, மக்களின் ஆதரவுடன் புகையிலை நிறுவனங்களை எதிர்த்து வெற்றிகரமாகப் போராடி வந்திருக்கிறது. அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளில் கொண்டுவந்த மாற்றங்களால், அந்நாட்டின் பொருளாதார அடித்தளங்களில் ஒன்றாக இருந்த புகையிலை உற்பத்தியும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடும் மெல்ல மெல்லக் குறைந்துகொண்டு வந்ததது. இந்தத் தன்னார்வ அமைப்பின் தொடர்ச்சியான செயல்பாடுகள்தாம் இதற்குக் காரணம். இந்தியச் சூழலில் புகையிலைக்கு எதிராகப் பரப்புரைசெய்ய இங்கு இதுபோன்ற வலுவான அமைப்புகள் ஏதுமில்லை என்பது வருத்தற்குரிய உண்மை.

அதேநேரம் ஒன்றிய சுகாதாரத் துறை, தகவல் ஒளிப்பரப்புத் துறை ஆகியன முன்னெடுக்கும் பல செயல் திட்டங்கள், குறிப்பாகத் திரைப்படங்களில் தணிக்கைச் சான்றிதழுக்குப் பிறகு கட்டாயம் இடம்பெற வேண்டிய புகையிலைக்கு எதிர்ப்பு, பாதிப்பு விளம்பரப் படம் போன்றவை இன்று பெரும் மனமாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது.

ஆண்களை விஞ்சும் பெண்கள்

‘டி.சி.டி.எஃப்’ அமைப்பு கடந்த ஆண்டு (2021) இந்தியாவில் சேகரித்த புள்ளி விவரக் கணக்குகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட 26 கோடியே 70 லட்சம் இந்தியர்கள் புகைத்தல், மெல்லுதல் ஆகிய இரு வழிகளில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இது மக்கள் தொகையில் 28.6% ஆகும். இவர்களில் 21% பேர், துருவல் புகையிலை, வாசனைப் புகையிலை, பான், குட்கா உள்ளிட்டப் புகையிலைப் பொருட்களை மெல்லுகிறார்கள். புகையிலையை மெல்லுபவர்களில் ஆண்கள் 29.8% பேர், பெண்கள் 12.8% பேர். புகைப்பவர்களில் கடந்த இரு பத்தாண்டுகளின் பெண்களின் சதவீத எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருப்பதும் அதற்கு மாறாக புகைப்பதை கைவிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் ‘டி.சி.டி.எஃப்’ ஆய்வறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ‘ஏழை, எளிய உழைக்கும் மக்கள் தங்கள் பசியை அடக்கவும் அதை மரத்துப்போகச் செய்யவும் புகையிலையை மெல்லுகின்றனர்’ என பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஹெல்த் பத்திரிகை தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறது. புகைத்தல், புகையிலைப் பொருட்களை மெல்லுதல் ஆகியவற்றின் மூலம், வாய், தொண்டை, உணவுக் குழாய், நுரையீரல் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளாகும் குடிமக்களின் எண்ணிக்கை கவலை அளிப்பதாகக் கூறியிருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுண்சில் (ICMR). அது வெளியிட்டுவரும் ஆராய்ச்சி இதழின் அறிக்கை: ‘புகையிலைப் பொருட்களைப் புகைத்தும் மென்றும் வரும் புற்றுநோய்களினால் துன்புறும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஆகும் செலவு, புகையிலைத் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட அதிகரித்திருக்கிறது’ என்று உறுதியாகச் சொல்கிறது. அரசு அமைப்பே இதைக் கூறிய பிறகுதான் இந்தியாவில் அரசு சார்பிலான புகையிலை எதிர்ப்புப் பிரச்சாரம் வேகமெடுத்தது. ஆனால், இந்த வேகம் போதாது. அதை நியூசிலாந்திடமிருந்து நாம் கற்றுகொள்ள வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கிறோம்.

நியூசிலாந்து காட்டும் பாதை!

கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்து அரசு, அதிரடியான முடிவொன்றை எடுத்து அறிவித்தது. “2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் அல்லது வேறு எந்த வகையிலும் புகை பிடிப்பதற்கான எந்தவொரு புகையிலைத் தயாரிப்புப் பொருளையும் வாங்க வாழ்நாள் தடை!” என்று அதிரடியாகச் சட்டம் இயற்றி அறிவித்துவிட்டது. புகையிலையைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டிகொண்டு அழும் இந்தியா போன்ற நாடுகள் கவனிக்க வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இது. புகைப்பதை முற்றிலும் தடைசெய்யும் இந்தச் சட்டத்தின் வழியாக உலகத்துக்கே வழிகாட்டியாகத் தன்னை முன்னிறுத்தியிருக்கிறது நியூசிலாந்து. இப்போது அறிவித்திருந்தாலும் எதிர்வரும் 2027இல் ‌புகைபிடிக்காத‌ ‌தலைமுறையினர்‌ ‌இருக்கும் நாடாக‌ ‌நியூசிலாந்து‌ திகழப்போகிறது.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x