உங்களுக்குப் பக்குவம் இருக்கிறதா?

உங்களுக்குப் பக்குவம் இருக்கிறதா?
Updated on
1 min read

வாழ்க்கையை அமைதியாக வாழ நமக்கு பக்குவம் அவசியம். பரபரப்பும் புறம்பேசுதலும் இகழ்தலும் என வாழ்க்கையைச் சச்சரவு உள்ளதாக நம்மில் பெரும்பாலானோர் வைத்திருக்கிறோம். ஒரு கண்ணாடி போன்ற நீரோடையில் மிதந்து செல்லும் சருகைப் போல் நாம் இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் பக்குவம் அடைய சில பழங்கங்களை நாம் குணமாக்கிக் கொள்ள வேண்டும். இவற்றைக் கடைப்பிடிக்கும்போது நாமும் பக்குவம் ஆவோம். நமக்கு மரியாதையும் கிடைக்கும். நம் வாழ்க்கை நதியும் தெளிவாகும்.

பொதுவாகப் பக்குவம் உள்ளவர்கள் மனிதர்களை விமர்சனம் செய்ய மாட்டார்கள். அவர்கள் கருத்துகளைத்தாம் விமர்சனம் செய்வார்கள். நமக்குப் பிடித்த ஒரு சினிமாவை ஒருவர் விமர்சித்துப் பேசும்போது அவர் கருத்தை விமர்சனம் செய்யலாம். மாறாக ‘இந்தப் படத்தை விமர்சிக்கிறாரே அவர்’ என அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சிக்கக் கூடாது. அது நல்ல பண்பு அல்ல.

பக்குவம் உள்ளவர்கள் முதலில் தன் மீது மரியாதை கொண்டிருப்பார்கள். தனக்குச் சில கருத்துகள், பழக்க வழக்கங்கள் என அவற்றில் உறுதியாக இருப்பார்கள். அதேபோல் பிறர் மீது மரியாதையுடன் இருப்பார்கள். அவர்களது பழக்க வழக்கங்களையும் மதிப்பார்கள்.

பக்குவம் உள்ளவர்கள், எளிமையாக இருப்பார்கள். நான் எவ்வளவு பெரிய ஆள். எனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை எனக் கோபம் கொள்ள மாட்டார்கள். அதே நேரம் தன்னைப் போல் எல்லோரையும் காண்பார்கள். பெரியவர்களும் இல்லை. சிறியவர்களும் இல்லை என்ற கருத்தைக் கொண்டிருப்பார்கள். பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே எனப் புறநானூறு சொல்வதுபோல் வாழ்வார்கள்.

அதேபோல் பக்குவம் உள்ளவர்கள் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒரே மாதிரியே பார்ப்பார்கள். ஒருவர் தன்னைப் பாராட்டுகிறார்கள் எனத் தலைகால் புரியாமல் நடக்க மாட்டார்கள். அதேபோல் விமர்சனம் செய்துவிட்டால் தன்னையே இகழ்ந்துவிட்டதாகக் கருதாமல் அதை ஏற்பார்கள். இரண்டையும் ஒன்றுபோல் காண்பார்கல். இந்தப் பண்பு வந்துவிட்டால் நமக்குப் பக்குவம் வரும்.

பக்குவம் உள்ளவர்கள், நமக்கு ஏற்படும் விளைவுகளை மற்றவர்கள் தலையில் கொண்டுபோய்க் கட்டமாட்டார்கள். நமக்கு நடக்கும் எல்லாவற்றுக்கும் நாம்தான் பொறுப்பு என எல்லாவற்றையும் ஏற்பார்கள். பொதுவாக நாம் நமக்கு நடக்கும் தோல்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பிறரைக் காரணமாகச் சொல்வோம். அப்பா இப்படிச் செய்யாதிருந்தால் நான் இன்றைக்கு நன்றாக இருந்திருப்பேன் எனச் சொல்வது உண்மையில் ஒரு பக்குவமற்ற தன்மை. பொறுப்பு ஏற்கும்போதுதான் பக்குவம் பிறக்கும்.

மேற்சொன்ன இந்தப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால் நாம் ஒரு பக்குவமான வாழ்க்கையில் பயணிக்கலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in