

நம்மில் பலருக்கும் வெற்றியின் மீது விருப்பம்தான். ஆனால், நமக்கு விதித்தது அவ்வளவுதான் என நமக்கு நாமே சமாதானம் சொல்லிவிட்டு முடங்கிப்போய்விடுவோம். நமக்கு விதித்ததை நம்மால் மாற்ற முடியாதா என்ன?
அப்படி விதியை மாற்றியவர்கள்தாம் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள். விதியை மாற்ற நீங்கள் விண்வெளிக்கு எல்லாம் செல்ல வேண்டாம். உங்கள் அன்றாடப் பழக்க வழக்கங்களை மாற்றினாலேயே போதுமானது. நமக்குத் தோஷமாக இருக்கும் பழக்கங்களை மாற்றிப் பயனுள்ளதாக ஆக்கினால் விதியும் வசப்படும். வெற்றியும் கைகூடும்.
கடைப்பிடிக்க வேண்டிய முக்கியப் பழக்கங்களில் ஒன்று, சுய ஒழுக்கம். நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தை வேறு யாருக்காகவும் இல்லாமல் நமக்காகச் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் தியானம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அப்பா சொன்னதால் செய்கிறேன் எனச் செய்யக் கூடாது. பிறர் பார்க்கிறார்கள் என்று ஒழுக்கமாக இருப்பதில் உண்மையில் ஒழுங்கு இல்லை. யாரும் கவனிக்கவில்லை என்றாலும் நாம் வாழ்க்கையில் ஓர் ஒழுங்கைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அடுத்ததாக நம் ஒவ்வொரு நாளையும் திட்டுமிட்டுச் செலவழிக்க வேண்டும். காலையில் எழுந்து மனம்போன போக்கில் ஒரு நாளைக் கழித்தால் அது பயனுள்ளதாக இருக்காது. இன்று என்னவெல்லாம் செய்யப்போகிறோம் என்பதை முன்பே திட்டமிட்டுச் செய்ய வேண்டும். ஒரு நாளில் செய்யும் திட்டமிடல் முறைதான், நம் வாழ்க்கையைத் திட்டமிட நமக்கு உதவும்.
திட்டமிடும்போது கவனிக்க வேண்டியது எந்த வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதையும் நாம் தீர்மானிக்க வேண்டும். நம் வாழ்க்கைக்குப் பயனுள்ள செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் தேவையின் அடிப்படையில் வேலைகளை வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும்.
தேவையற்ற விஷயங்களில் நேரத்தையும் உடல் உழைப்பையும் செலவிடக் கூடாது. நாம் செய்யும் செயல் பயனுள்ளதாக இருக்க வேண்டும். உதாரணமாக, வரும் வழியில் ஒரு தேவையில்லாத பிரச்சினை வந்துவிட்டது. சட்டென அதைத் தீர்த்துவிட்டுக் கிளம்ப வேண்டும். அது குறித்துப் புலம்பிக்கொண்டு இருக்கக் கூடாது.
தோல்விப் பயம் கூடாது. முயற்சியை நாம் மேற்கொண்டால்தான் வெற்றி தேடி வரும். உதாரணமாக எனக்கு கார் ஓட்டினால் விபத்து நேரிடும் எனப் பயந்து கார் ஓட்டுவதையே தவிர்த்தால் கார் ஓட்டவே முடியாமல் போகும்.
பிறகு செயல்களை நாளை, நாளை எனத் தள்ளிப் போடக் கூடாது. நாளை என்பது வெற்றியாளர்களுக்கு இல்லை. இன்றே முடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
செயல்களில் சோம்பேறித்தனம் வெற்றிக்கு வினையாகும். ஓய்வெடுக்கிறேன் என உறங்கி நாளைக் கழிக்கக் கூடாது.
உங்கள் வெற்றி வினையாகும் நட்புகளைத் தவிர்க்கப் பாருங்கள். எதிர் மறையாகவே எப்போதும் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் ஆளுமையை அவர்களது எண்ணங்கள் பாதிக்கும்.