மன அழுத்தமும் சரும அரிப்பும்: உங்களின் பதற்றமும் தோல் பிரச்சினையை உருவாக்கலாம்! 

மன அழுத்தமும் சரும அரிப்பும்: உங்களின் பதற்றமும் தோல் பிரச்சினையை உருவாக்கலாம்! 
Updated on
3 min read

எண்ணம் போல் வாழ்வு என்பது மூத்தோர் வாழ்த்து. நமது எண்ணம்தான் நம்மை உருவாக்கி வழிநடத்துகிறது என்பதே இதன் மறைபொருள். நமது வாழ்க்கை, உடலுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை இன்றைய அறிவியல் ஆதாரபூர்வமாக நிரூபித்து வருகிறது. நமது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் மனதிற்கும் தொடர்பு இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நிக்கோல் 'தி கான்வர்சேஷன்' தளத்தில் நடால் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது...

மது உடலுக்கும் மனதிற்கும் (மூளை) நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஏதாவது ஒரு பீதியால் இதயம் வேகமாக துடிப்பதை, பதற்றப்படும்போது உள்ளங்கை வேர்ப்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது உங்களுக்குப் புரியும். அதேபோல் கவலை, கோபம், பயம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளும் பல்வேறு வழிகளில் உடல் மொழியாக வெளிப்படுத்தப்படுகிறது. அவை வலி, சோர்வு, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், செரிமானத்தில் பிரச்சினை போன்ற உடல் உபாதைகளில் மூலமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது.

ஒருவரது கவலையும் மன அழுத்தமும் அவரது முகப்பரு, சரும அரிப்பு, சோரியாசிஸ், படை போன்ற தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரக் காரணமாகலாம் என்கிறார் தோல் மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான என்ரிஸா பி. ஃபேக்டர் எம்.டி.,

கவலையால் உண்டாகும் சரும அரிப்பு உணர்வு "சைக்கோஜெனிக் இட்ச்சிங்" (psychogenic itching) எனப்படுகிறது. இந்த உணர்வு கவலை, மன அழுத்தம் போன்றவை ஏற்படும்போது சரும அரிப்பை அதிகரிக்கச் செய்து ஓர் இயல்பற்றத் தன்மையை உருவாக்கி உடனடியாக சொரிந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது.

மன அழுத்தமும் சரும அரிப்பு உணர்வும்: மன அழுத்தமும் சரும அரிப்பு உணர்வும் நெருங்கிய தொடர்புடையவை. மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிக்கும்போது அது தோலுக்கடியில் வீக்கத்தை ஏற்படுத்தி, அட்ரனல் சுரப்பியின் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தி தோல் அரிப்புக்கு காரணமாகி விடுகிறது என்கிறார் bowtiedlife.com-ல் தோல் மருத்துவ இயக்குனராக இருக்கும் செரில் ரோஷன் எம்.டி.,

மனித மூளையும் சரும அரிப்பு உணர்வை உண்டாக்குவதில் முக்கியமான பங்காற்றுகிறது. நமக்கு அரிப்பு போன்ற உணர்வு ஏற்படும்போது, மூளையின் உணர்வு, உணர்வு மையங்கள் தூண்டப்படுகின்றன. இது கவலை - அரிப்பு சுழற்சிக்கு வழிவகுத்து நோயாளியின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவரது வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது என்று நரம்பியல் மற்றும் நடத்தை குறித்த ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

சைக்கோஜெனிக் அரிப்பு நோய்க்கான காரணம் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் இது மிகவும் அரிதான ஒன்று என்றும், அடிக்கடி ஐடியோபதிக் அரிப்பு அல்லது காரணம் அறியப்படாத அரிப்பு உணர்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்று கருதுகின்றனர். க்ளினிகல் தோல் மருத்துவம் இதழில் பதிப்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், தோல் நோய்கள் மூன்று முக்கிய வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மனநலனை பாதிக்கும் அரிப்பு நோய்கள், மனநல காரணிகளால் மோசமடையும் அரிப்பு நோய்கள், சைக்கோஜெனிக் அரிப்புகள்.

மனநலனை பாதிக்கும் அரிப்பு நோய்கள்: நாள்பட்ட தோல்பாதிப்புகளால் ஏற்படும் அரிப்புகள், உடலுறுப்பு நோய்கள் நரப்பியல் நோய்கள் மனநலனை பாதிக்கின்றன. நோயாளிகள் நாள்பட்ட தோல் பாதிப்புகளால் உண்டாகும் தோல் தடிப்பு, தோல் அலர்ஜி, ஹைப்பர் தைராய்டிஸம், நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு, நரம்பியல் காரணங்களால் உண்டாகும் பக்கவாதம் போன்றவைகளால் பாதிக்கப்படும்போது மனரீதியாக அதிகம் பாதிப்படைகின்றனர்.

கவலை, மன அழுத்தம் நமைச்சல் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாக இருக்கின்றன. நாள்பட்ட தோல் நோய்கள் நோயாளியின் மனநலனில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அவரின் கவலை மற்றும் அழுத்தத்திற்குள் தள்ளி விடுகின்றன.

மனநல பாதிப்புகளால் மோசமடையும் தோல் நோய்கள்: அழுத்தமான சூழ்நிலை நமது மனம், உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எல்லோரும் அறிந்ததே. வேலை வாழ்க்கைச் சூழல், உறவுகள், கொந்தளிப்பான நிகழ்வுகள், பொருளாதார காரணிகள் போன்றவை நம்முள் அழுத்தத்திற்கு வழிவகுத்து தோல் அரிப்பை உண்டாக்குகிறது.

உதாரணமாக, ஒருவருக்கு சோரியாசிஸ் இருந்து, அது அதிக அளவிற்கான மன அழுத்ததை உண்டாக்கினால், அவரது அரிப்பு உணர்வு அதிகமாகும் என்று அமெரிக்க தோல் மருத்துவ அமைப்பு தெரிவிக்கிறது. மன அழுத்தம் சோரியாசிஸ், தோல் தடிப்பு,ரோசாசியா போன்ற தோல் அரிப்புக்கு காரணமாகின்றன. அது படை மற்றும் வகைப்படுத்தப்படாத தோல் நோய்க்கும் வழிவகுக்கும்.

சைக்கோஜெனிக் இட்சிங்: மன நலபாதிப்புகளும் நமைச்சலை ஏற்படுத்துகின்றது. இந்த நிலையை சைக்கோஜெனிக் இட்சிங் என்கின்றனர். மன அழுத்தத்தினால் உண்டாகும் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மன அழுத்தம், ஓசிடி, ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்டிருப்பர் என்கிறார் ரோசன். ஒருவரின் மனநல பாதிப்பு அவரை அதிக அழுத்தத்திற்குள்ளாக்குகிறது. இது அதிகப்படியான நமைச்சல் உணர்வுக்கு வழிவகுக்கிறது. கவலை உருவாகும்போது அது உங்கள் உடலின் அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. அது உங்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து தோலில் ஏரிச்சல், அரிப்பு உணர்வை ஏற்படுத்தலாம். இது வெளியே தெரியும்படியாகவோ, மறைமுகமாகவே இருக்கலாம். இது தோல் அலர்ஜி, முகப்பரு, படை நோய்களுக்கு வழிவகுக்கலாம். இந்த அரிப்பு உணர்வு உங்களின் கைகள், கால்கள், முகம் உச்சந்தலை என தோலின் எந்த பகுதியிலும் ஏற்படலாம்.

அரிப்பை உண்டாக்கும் அழுத்தத்தை அறிதல்: மன அழுத்தத்தினால் நமைச்சல் உண்டாகிறது என்பதை கண்டறிய பல வழிகள் உள்ளன.அவைகளில் ஒன்று நமைச்சல் ஏற்படுவதை கண்காணிப்பது. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது நமைச்சல் ஏற்பட்டால் அதுதான் பிரதான காரணம். அதேபோல நமைச்சல் அதிகமாகும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதையும் கண்காணிக்கலாம். நமைச்சல் ஏற்படும்போது நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், நமைச்சலுக்கு அதுதான் காரணம். இவை தவிர, நமைச்சல் வேறு சில முக்கியமான பிரச்சினைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அவை:

  • நீரிழிவு நோய்
  • இரத்த சோகை
  • கல்லீரல் நோய்
  • லிம்போமா போன்ற புற்றுநோய்கள்
  • மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
  • தைராய்டு பிரச்சினை

தோல் வறட்சி, ஒவ்வாமை பாதிப்பு, பூச்சிக்கடி, சிரங்கு போன்றவையும் அரிப்புக்கு காரணமாக அமையலாம். தோல் அரிப்பு அதிகமாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள், அதற்கு மன அழுத்தம் போன்ற உறுதியான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மனஅழுத்த அரிப்பை அறிதலும் சிகிச்சையும்: நீங்கள் அரிப்பு அதிமாக இருப்பதாக உணரும்போது உங்கள் மருத்துவர் உங்களின் நோய் காரணிகளை முழுமையாக ஆராய்ந்து அந்த அரிப்பு, தோல், உடலுறுப்பு, நரம்பியல், மனநோயால் ஏற்பட்டதா என்று கண்டறிகிறார். தோல் காரணங்களால் ஏற்பட்ட அரிப்பு ஆய்வக அல்லது திசு சோதனை மூலமாக கண்டறியப்படும். அரிப்புக்கான எந்த மருத்துவக் காரணமும் கண்டறியப்படாதபோது மருத்துவர் உங்களை உளவியல் நிபுணரை பார்க்க அறிவுத்துவார்.

துரதிர்ஷ்டவசமாக சைக்கோஜெனிக் அரிப்பு அரிதாகவே உளவியலாளரிடம் குறிப்பிடப்படுகிறது என்கிறார் பேர்டர். நோயாளி கவலையுடன் இருப்பதால் அல்லது மருத்துவரிடம் எந்த நோய்க் காரணத்தையும் குறிப்பிடாததால், சைக்கோஜெனிக் அரிப்பு காரணம் அறிப்பட்டாத இடியோபதிக் அரிப்பாக புரிந்து கொள்ளப்படுகிறது.

ஃபேக்டரின் கூற்றுப்படி, சைக்கோஜெனிக் அரிப்புக்கு மருத்துவ சிகிச்சைகள் எதுவும் இல்லை. கண்டறியும் காரணிகளும் சொல்லுக்கொள்ளும்படியாக இல்லை.

மன அழுத்தம், பதற்றத்தை எவ்வாறு குறைப்பது? - உங்கள் மன அழுத்தம், பதற்றத்தை குறைப்பது சைக்கோஜெனிக் அரிப்பை குறைக்கும். மருத்துவர் பதற்றத்தைக் குறைக்க நடத்தை பிஎம்டி மற்றும் வேறு சில வழிமுறைகளை தர முடியும். சிபிடி, யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, அக்குபஞ்சர் சிகிச்சை போன்றவையும் பதற்றத்தை குறைக்க உதவும். ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், உடற்பயிற்சி மேற்கொள்வதும் முக்கியம் என்கிறார் ஃபேக்டர்.

நீங்கள் மன அழுத்த அரிப்பு இருப்பதாக உணரும்போது கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். இல்லையெனில் அது பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்து வலி மற்றும் அயற்சியை உண்டாக்கும் என்கிறார் ரோசன்.

எது முதலில் வந்தாலும் பரவாயில்லை. அரிப்பு, பதற்றத்தின் சுழற்சியை உடைத்து, அதற்கான காரணத்தை கண்டறிந்து, மன அழுத்தத்தை சரியாகக் கையாண்டு, சருமத்தை நல்லமுறையில் பேண வேண்டும். இதற்கு அதிக நாள்கள் எடுக்கலாம். நிபுணர்களின் வழிகாட்டுதல்களுடன் சீக்கிரம் அரிப்பிலிருந்து விடுபட முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in