

‘Whataboutism’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டுள்ளீர்களா..? What about this? What about that? என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே ‘Whataboutism’ என்று அழைக்கப்படுகிறது. ஓர் உரையாடலின் போது உங்கள் எதிர் தரப்பினரை கபடம் செய்து வெற்றி கொள்வது போன்ற தோற்றத்தை உருவாக்குவதை, பொதுவாக ’Whataboutism’ என்று குறிப்பிடுகிறார்கள்.
அதாவது, எது தொடர்பாக விவாதித்து கொண்டிருக்கிறோமோ, அது தொடர்பாக கேள்வி எழுப்பாமல் அல்லது அது குறித்து பேசாமல், உண்மைகளைப் புறக்கணித்துவிட்டு அந்த விவாதத்துக்கு தொடர்பில்லாத ஒரு கருத்தை உள்ளே திணித்து, ‘இதனை நீங்கள் தானே முதலில் செய்தீர்கள்... நீங்கள் தானே இதனைக் கொண்டு வந்தீர்கள்?’ (உரையாடலுக்கு தொடர்பில்லாத, மதிப்பில்லா வாதம்) என்று எதிர் தரப்பின் வாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது அல்லது புதிய விவாதத்தை உள்ளே கொண்டு வருவதுதான் ‘Whataboutism’ . நயவஞ்சமாக ஒரு வாதத்தை தன் பக்கமாக ஈர்க்கும் ஆயுதம்தான் இந்த ‘Whataboutism’.
அதாவது ஓர் அரசாங்கம், பொது மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. இதில் பொதுமக்கள் பலர் பலியாகிறார்கள். இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ”உங்கள் ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லையா?” என விவாதத்தை மாற்றும் யுக்தி. Whataboutism-ஐ ஆங்கிலத்தில் Wrong + wrong = Right ( தவறு + தவறு = சரி) என்று குறிப்பிடுகிறார்கள்
அரசியல் தந்திரம்: பொதுவாக ‘Whataboutism’ வாத முறையை 1930-களில் நாஜிக்கள் தங்கள் அரசியல் தந்திரச் செயலாக பயன்படுத்தினார்கள். 1950-களில் சோவியத் யூனியனும் இந்த யுக்தியை பயன்படுத்தியது. தற்போது நிலவரப்படி பாஜக - காங்கிரஸை எடுத்து கொள்ளுங்கள்... காங்கிரஸ் தன் மீது வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கு பாஜக தலைமை 50 வருடங்களுக்கும் முன் இந்தியாவை ஆட்சியை செய்த நேருவை விமர்சிப்பதை கவனிக்கலாம். இதுவும் ‘Whataboutism’ வகைதான்.
அரசியல் யுக்தியாக பயன்படுத்தப்பட்ட ’Whataboutism’ தற்போது சுய தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
கணவர் - மனைவி , காதலன் - காதலி, சகோதரன் - சகோதரி உறவுகளில் நீங்கள் ‘Whataboutism’ விவாதத்தை காணலாம். உதாரணத்துக்கு“நீ நேற்று இரவு எங்கிருந்தாய் என்பது குறித்து என்னிடம் பொய் கூறினாய்” என்ற கூறியதற்கு, ”நீ எப்படி? நீ எப்போதும் என்னிடம் பொய்தானே கூறுவாய்” என்று பதிலளிப்பது ’Whataboutism’ தான்.
சமூக வலைதளங்கள், அரசியல் கட்சிகள், குடும்பங்கள், சர்வதேச விவகாரங்களிலும் ‘Whataboutism’ தற்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ‘Whataboutism’ தற்போது வெளிப்படையாக தெரிவதற்கு சமூக வலைதளங்களும் ஊடகங்களும் உதவுகின்றன.
Whataboutism தந்திரம் புதிதல்ல: இது 200 ஆண்டுகளுக்கு முன்னரோ, 500 முன்னரோ தோன்றியது இல்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் காலத்திலிருந்தே ’Whataboutism’ கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த தந்திர வாதம் முறை ‘Whataboutism’ என்று சொல்லாடலால் 1950-களுக்கு பிறகே பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது.
விவாதம் என்பதே உண்மை நோக்கி பயணிப்பது. உண்மையே நோக்கமாக கொண்டது. ஆனால், பல சூழல்களில், மக்கள் பெரும்பாலும் இந்த வழியில் வாதங்களைப் பார்ப்பதில்லை. அவர்கள் விவாதத்தை வெற்றிபெற வேண்டிய போர்களாகவே பார்க்கிறார்கள். எதனையும் தாங்களே விட்டுக்கொடுக்காமல், முடிந்தவரை எதிரணியை விட்டுக்கொடுக்க வைப்பதே தற்போது குறிகோளாக உள்ளது.
அவ்வாறான சூழலில் ‘Whataboutism’ கைகொடுக்கிறது. குற்றத்திற்கு மற்றொரு குற்றத்தை சுட்டிக் காட்டுவதே சிறந்த தற்காப்பு வடிவம் என்ற கொள்கையின் அடிப்படையில் இது செயல்படுகிறது.
Whataboutism ஏன் பிரபலமாக உள்ளது? - மாறுபட்ட அரசியல் கண்ணோட்டத்துடன் எதிராளியை எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்வதை விவாதிக்க வேண்டிய புள்ளியை காட்டிலும், அவர்கள் கூறுவதை எதிர்க்கும் விவாதமே நிறைய நபர்களால் ஈர்க்கப்படுகிறது. ஆனால் Whataboutism மூலம் தவறான தகவல் பரப்படும்போது அது தீமையை விளைவிக்கும் தன்மை கொண்டது. இதற்கு உலகப் போர்களே உதாரணம்.
தவறு + தவறு = சரி என்பது முற்றிலும் முரணானது. ஆனால், ’Whataboutism’ விவாத முறை நமக்கு அதனைத்தான் கடத்துக்கிறது. இம்முறையிலான விவாதங்கள் ஒரு தவறுக்கு பதிலாக இன்னொரு தவறை சுட்டுக்காட்டும்போதும் தவறை மறைத்து சரி என புகுத்த பயன்படுகிறது. அதாவது, இது பார்வையாளர்களை உளவியல் ரீதியாக திசை திருப்புகிறது. அவர்கள் தவறை சரி என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கப்படுகிறார்கள்.
இறுதியாக, ’Whataboutism’-ன் படி, தவறு + தவறு = சரியல்ல..!
உறுதுணை: The conversation