கிழக்குத் தொடர்ச்சி மலை 2: சேர்வராயன் மலையும் ஏற்காடும்

கிழக்குத் தொடர்ச்சி மலை 2: சேர்வராயன் மலையும் ஏற்காடும்
Updated on
3 min read

தமிழகத்தில் வடகிழக்காகத் தொடங்கி தென்மேற்காகக் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பரந்து விரிந்துள்ளது. தமிழகத்தில் மேட்டு நிலப்பகுதிகளையும் கிழக்குப் பகுதியாகக் கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த மலைத்தொடர். தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பளவு 98,000 சதுர கிலோ மீட்டர்.

தமிழகத்தில் இந்த மலைத்தொடர் திருநெல்வேலியில் வல்லநாட்டில் தொடங்கி குருமலை, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம் மலை, அழகர்மலை, நாகமலை, யானைமலை, கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன்மலை, கல்வராயன் மலை, சிறுமலை என விதவிதமான பெயர்களில் இந்த மலைத் தொடருக்குச் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றன. இதில் சேர்வராயன் மலையைப் பற்றி பார்ப்போம்.

தமிழகத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் பெரியது சேர்வராயன் மலை. இது சேலம் மாவட்டத்தின் அருகே காணப்படும் கிழக்கு மலைத் தொடர்ச்சியின் ஒரு பகுதி. சேலம் என்றதும் மேற்கு தொடர்ச்சி மலையாகத்தான் இது இருக்கும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால், இது கிழக்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது என்பதே சிலருக்கு வியப்பளிக்கலாம். சேலத்தில் சேர்வராயன் மலை கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சற்று விலகி 400 ச.கி.மீ. பரப்பில் தனி சாம்ராஜ்யமாக உள்ளது. பண்டைய காலத்தில் சேரப் பகுதியின் நிலமாக இருந்திருக்கக்கூடும் என்று வரலாற்றுக் கூறுகள் சொல்கின்றன. சேர்வராயன் என்கிற பெயர் ‘சேரன்’ என்கிற சொல்லிலிருந்து வந்திருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

சேர்வராயன் மலை தமிழகத்தின் இதயம் போன்றது. இந்த மலை திசைகள்தோறும் சமவெளியால் சூழப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. 900 மீட்டர் முதல் 1,624 மீட்டர் வரையுள்ள முகடுகள் சேர்வராயன் மலையில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன. இந்த மலையில் பிரம்மாண்டமாகக் காணப்படும் ‘வானியர்’ என்கிற பள்ளத்தாக்கு இந்த மலைக்கு மகுடமாக ஜொலிக்கிறது.
இந்தப் பள்ளத்தாக்கு கிழக்கு, மேற்காக சேர்வராயன் மலையைப் பகுத்துள்ளது. இந்த மலை கடல்மட்டத்திலிருந்து 4,000 – 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கைக்கு வாக்கப்பட்ட இந்த மலையில் அடர் மரங்களும் மூலிகைச் செடிகளும், வன விலங்குகளும் காபி உள்ளிட்ட வணிகப் பயிர்களும் இந்த மலையைப் பிரம்மாண்டமாக உலகுக்குக் காட்டுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சியைக் காணாவிடாலும், ரயில் பாதைகள் அமைப்பதற்காக (ஸ்லீப்பர் கட்டைகள்) இந்த மலையிலிருந்துதான் மரங்கள் பெருமளவு வெட்டப்பட்டன. 1900-களில் சேலத்திலிருந்து சேர்வராயன் மலைக்குச் சாலை வழி அமைந்த பிறகு இம்மலை கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகின் கவனம் ஈர்க்க ஆரம்பித்தது. இந்த மலையில் அமைந்துள்ள ஏற்காடு மலை புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உருவெடுத்தது. ‘ஏழைகளின் ஊட்டி’ என்று சொல்லும் அளவுக்கு அது பெருமை பெற்றது.

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. இங்குள்ள அண்ணா பூங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளது. அண்ணா பூங்கா ஏரிக்கு அருகே உள்ளது. ஏற்காட்டில் கோடை விழாவின்போது மலர் கண்காட்சி இங்குதான் நடைபெறும். இதனுள்ளே உள்ள ஜப்பானிய பூங்கா கண்டிப்பாக கானவேண்டிய ஒன்று. இதேபோல் தோட்டக்கலை துறை சார்பில் அமைதுள்ள பண்ணையும் காண வேண்டிய ஒன்று. இங்கு பல்வேறு தாவரங்களின் கன்றுகள் கிடைக்கும். இந்தியத் தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படும் தாவரவியல் பூங்காவில் அதிகமான தாவரங்களின் தொகுப்பைப் பார்க்கலாம். இங்குள்ள மணிப்பாறையில் கல்லால் மோதினால் மணிச் சத்தம் கேட்கும்.

இதேபோல ஏற்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி. ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்குதான் நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. ஏற்காட்டில் லேடிஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் போன்றவை இயற்கை எழில் கொஞ்சம் இடங்களாகும். இங்கு பாறைகள் இயற்கையாகவே காட்சித் தளங்களாக அமைந்துள்ளன. இங்கிருந்து சேலம் நகரத்தின் அழகை காணலாம். ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பெருமாள் குகைக் கோயிலாகும். மே மாதத்தில் இங்கு நடைபெறும் திருவிழா வண்ணமயமானதாக இருக்கும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் பங்கேற்பார்கள். காலை 6 முதல் இரவு 8 வரை இந்தக் கோயில் திறந்திருக்கும்.

ஏற்காட்டில் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியாக பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றித்தான் மான் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணா பூங்கா, ஹோட்டல் தமிழ்நாடு போன்றவை உள்ளன. இந்த ஏரியில் படகுச் சவாரி மிக ரம்மியமாக இருக்கும். ஏற்காட்டில் இருக்கும் முக்கியமான காட்சிமுனையாக பகோடா காட்சி முனை உள்ளது. இது ஏற்காட்டின் கிழக்கு முனையில் உள்ளது. இந்தக் காட்சிமுனை ‘பிரமிட் பாய்ண்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோயில் உள்ளது. இங்கிருந்து அயோத்தியாபட்டிணம் பகுதிகளைக் கண்டுகளிக்கலாம். இந்த இடம் ஏற்காட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஏற்காட்டில் உள்ள பட்டுப் பண்ணையில் மெல்பெரி செடிகள் பெருவாரியாக வளர்க்கப்படுகின்றன. இங்கு பட்டுப் பூச்சி வளர்ப்பையும், அதிலிருந்து பட்டு நூல் தயாரிப்பையும் கானலாம். இங்குள்ள ரோஜா தோட்டத்தில் பல வண்ண ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ரோஜா நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இடம் ஏற்காட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in