

ஹைதராபாத்: தாய்மார்கள் - பிள்ளைகள் இடையிலான பாசப் பிணைப்பு குறைந்து வருவதாக ஹைதராபாத் பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர்கள் குழு ஒன்று 10-20 வயதுடையவர்களிடையே கடந்த இரண்டு வருடங்களாக நடத்திய ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது. இதனால், இந்திய சமூகத்தில் குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து விலகிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 162 தாய்மார்களும், அவர்களது பிள்ளைகளும் தேந்தெடுக்கப்பட்டனர். இதில் தங்களின் விருப்பு, வெறுப்பு, ஆசை, சாதனைகள் என 37 கேள்விகள் தாய்மார்களிடம் கேட்கப்பட்டன. தங்களது தாயைப் பற்றி அதே கேள்விகள் பிள்ளைகளிடமும் கேட்கப்பட்டன. இதில் பெறப்பட்ட ஒரே பதில்களின் அடிப்படையில்தான் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வை முன்னின்று நடத்திய ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் மீனா ஹரிஹரன் கூறும்போது, “மதிப்பெண்களால் மட்டுமே தாயை சந்தோஷப்படுத்த முடியும் என்று இந்த இளம்பருவத்தினர் நினைக்கின்றனர். இதனைத் தாண்டி தாயின் மகிழ்ச்சி குறித்து அவர்கள் சிந்திப்பது இல்லை. இதில் தங்கள் தாயின் வாழ்க்கையைப் பற்றி 40%-க்கும் குறைவானவர்களே அறிந்திருந்தனர். 28% மாணவ, மாணவிகளுக்கு தங்கள் தாயைப் பற்றி எதுவும் தெரியவில்லை.
ஆனால், சிறந்த மதிப்பெண்கள் தங்களது தாய்மார்களை மகிழ்ச்சியடையச் செய்யும் என பிள்ளைகள் தீர்க்கமாக நம்புகின்றன. இதிலிருந்து குழந்தைகள் தாயிடம் நெருக்கமாக இல்லை என்று தெரிகிறது.
இதற்கு நாம் யாரை பொறுப்பாக்குவது பெற்றோர்களையா.. பிள்ளைகளையா? - இந்த ஆய்வின் மூலம் தாயை குழந்தைகள் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ளவில்லை என தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக கல்வி மதிப்பெண்களே நம் வாழ்க்கையின் உண்மையான வெற்றி என்று கருதி, நாம் மனித உறவுகளை மறந்துவிட்டோம். மனித உறவுகள், குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த இளம் பெற்றோர்கள் தங்களது குழந்தை வளர்ப்பு முறையை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இதுவாகும்” என்று அவர் தெரிவித்தார்.