

"போதும்... போதும்... ரொம்ப நீலிக்கண்ணீர் வடிக்காத", "ஆம்பள பிள்ளை அழக்கூடாது டா"... கண்ணீர் குறித்து நமது சமூகத்தில் சாதாரணமாக புழங்கும் வழக்கு மொழிகள் இவை. கண்ணீர் என்பது இப்போதும் பலவீனமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல எவ்வளவு அழுத்தத்தில் இருந்தாலும் எல்லா இடங்களிலும் நம்மால் அழுகையை வெளிப்படுத்திட முடியாது. ஆனாலும் நம்மையும் மீறி அழுகை வரத்தான் செய்கிறது.
உண்மையில் மற்றவர்கள் மீது நாம் வைத்திருக்கும் கருணையின் அடையாளமே கண்ணீர். அது அன்பின் மொழி என்கின்றனர் நிபுணர்கள். அதே நேரத்தில் உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் கண்ணீர் உதவுகிறது.
நமக்கு ஏன் கண்ணீர் வருகிறது, கண்ணீரினால் ஏற்படும் நம்மைகள் என்ன என்று விவரிக்கிறார் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் பெக்கி கெர்ன். தி கான்வர்சேஷன் தளத்தில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.
அன்பின் மொழி: நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் அல்லது இந்த உலகமே உங்களை கைவிட்டுவிட்டதென தனிமையை உணர்கிறீர்களா? அப்போது, யாருக்கும் தெரியாமல் தனியாக உட்கார்ந்து அழுதால் நன்றாக இருக்கும் என்று தோன்றலாம். உங்களுக்கு உடல் நலன் இல்லாமலோ அல்லது சோர்வாகவோ இருக்கும் போது வருத்தமாக உணர்கிறீகர்கள். சரி அப்போது நமக்கு கண்ணீர் வரும் கவனித்திருக்கிறீர்களா? சோகத்திற்கும் கண்ணீருக்கும் என்ன சம்மந்தம் என்று யோசித்திருக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. கண்ணீர் பல உளவியல் செயல்பாடுகளை செய்கிறது. நாம் அதிக சந்தோஷமாகவோ, துக்கத்திலோ இருக்கும் போது, நமது உணர்வுகளை கண்ணீரே வெளிப்படுத்துகிறது.
மனிதர்களுக்குள் ஏற்படும் அனைத்து வலுவான உணர்ச்சிகளையும் மூளையினுள் இருக்கும் மத்திய தன்னியக்க மண்டலமே இயக்குகிறது. இந்த பகுதி இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று 'சிம்பதிட்டிக் சிஸ்டம்' (Sympathetic System). இது மூளை ஆபத்தை உணரும் போது அதனை எதிர்கொள்ளவோ அல்லது அதிலிருந்து தப்பிக்கவோ கட்டளை இடுகிறது. மற்றொன்று 'பாராசிம்பதிட்டிக்' (Parasympathetic) நரம்பு மண்டலம். இது உடலை அமைதியாக வைத்திருக்கும் செயலைச் செய்கிறது. நாம் மிகவும் உணர்ச்சி வசப்படும் போது சிம்பதிட்டிக் சிஸ்டம் செயல்படுகிறது. ஆனால் நாம் அழும் போது பாராசிம்பதிட்டிக் பகுதி தூண்டப்பட்டு நம்மை ஆசுவாசப்படுத்துகிறது.
மன அழுத்தமும் மனித உடலும்: நாம் அனைவரும் சிறுவயதிலிருந்தே எல்லோரும் உணர்வுகளை கட்டுப்படுத்த பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். அதேபோல விரும்பிய நேரத்தில் இடத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத சமூகத்தில் உள்ளோம். உதாரணமாக சோகமான படம் பார்க்கும் போது அழ அனுமதிக்கப்படும் நாம், வேலை நேரத்தில் அழுவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
நமது மூளையின் மத்திய தன்னியக்க மண்டலம் உணர்ச்சிகள் உணரும் போது, மூளையின் முன்புறணி அல்லது சிந்திக்கும் பகுதி அதற்கு பதில் அளிக்கிறது. நமது உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, அதனை சரியான வழியில் வெளிப்படுத்துகிறது. முன்புறணி என்பது உங்கள் கனிணியில் உள்ள மதர்போர்டு போன்றது. அது கணினியை சிறப்பாக இயங்க அனைத்து காரணிகளையும் செயல்பட வைக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக நாம் மிகவும் மன அழுத்தம், சோர்வாக இருக்கிறோம் அல்லது நாம் அதிகமான உடல் மற்றும் மன வலியில் இருக்கும் போது மூளையின் சிம்பதிட்டிக் மண்டலம் தொடர்ந்து செயல்படும். அப்போது மூளையின் முன்புறணி, ஒரே நேரத்தில் பல்வேறு ப்ரோக்ராம்களால் இயங்கும் கணினியைப் போல நிரம்பி வழியும். மூளை நமது உணர்களை எதிர்பார்த்த வகையில் நெறிபடுத்த திணறும் போது கண்ணீர் அல்லது கோபம் போன்ற வெளிப்புற உணர்வுகள் நம்மிடமிருந்து வெளிப்படும். நமது முகத்தில் கண்ணீர் வழியும் போது தான் நாம் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டிருக்கிறோம் என்பது நமக்கு தெரியவரும்.
சிலர் மற்றவர்களை விட அதிகமாக அழுவதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக அழுகின்றனர். சமூகத்தின் எதிர்பார்ப்புகளை தவிர இதற்கான தெளிவான விளக்கக் காரணங்கள் இல்லை. அதிகமாக அனுதாபப்படக்கூடிய பண்புகளை கொண்டவர்கள், நரம்பியல்வாதம் உள்ளவர்கள் மற்றவர்களை விட அதிகம் அழக்கூடியவர்களாக இருப்பார்கள். அதிகமான அழுகையும் அழுத்தத்திற்கான வெளிப்பாடு தான். அதற்கு மூளை அதிகமான உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது என்று அர்த்தம்.
கண்ணீரின் பயன்கள்: உளவியல் காரணங்களைத் தாண்டி கண்ணீர் பல சமூக பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. உணர்ச்சிகளை வலுவாக வெளிப்படுத்துவதை நமது சமூக அமைப்பு ஏற்றக் கொள்ள மறுத்தாலும கண்ணீர் நீடித்த சமூக உறவுகள் உருவாவதற்கு உதவி புரிகிறது.
கண்ணீர் உதவிக்கான அறைகூவலாக செயல்பட்டு, நாம் நலமாக இல்லை நமக்கு ஆதரவு தேவைப்படுகிறது என்று மற்றவர்களுக்கு உணர்த்துகிறது. பல நேரங்களில் கண்ணீர் மற்றவர்கள் மீதான அனுதாபத்தை வெளிப்படுத்தி அவர்களுடன் இணைந்திருக்க உதவி செய்கிறது. மற்றொரு நபர் மீது ஆழ்ந்த அனுதாபம் வரும் போது கண்ணீர் வெளிப்பட்டு அவர்களுடன் சேர்ந்து நம்மையும் அழவைத்து விடுகிறது. இதனால் சமூக பிணைப்பு வலுப்படுத்தப்படுதிறது.
உளவியல், சமூக காரணிகளைத் தாண்டி கண்ணீருக்கான உடல் ரீதியான காரணங்களும் உள்ளன. நாம் மிகவும் சோர்வாக இருக்கும் போது கண்ளைத் திறக்க மிகவும் சிரமப்படுகிறோம். இதனால் கண்கள் உலர்ந்து விடுகின்றது. அப்போது நமது உடல் கண்ணீரை உற்பத்தி செய்து கண்களின் வறட்சிக்கு எதிராக செயல்பட்டு நமக்கு தெளிவான பார்வையைத் தருகிறது. சளி, காய்ச்சல், கரோனா வைரஸ் பாதிப்பு போன்ற நோய்த் தாக்குதல்களின் போது பொதுவாக கண்களில் நீர் வடியும். நமது உடலில் காயம் ஏற்படும் போது, கிருமிகளை எதிர்த்துப் போராட காயம்பட்ட இடத்தில் வெள்ளை அணுக்கள் சுரக்கும். இந்த ரத்த வெள்ளை அணுக்கள் கண்களில் உள்ள ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தி கண்ணீரை வரவழைக்கிறது.
கண்ணீர் மனித இயல்புகளில் ஒன்று. குறிப்பாக கடந்த சில வருடங்கள் அதிகமான அழுத்தங்களை தந்துள்ளது. அந்த மன இறுக்கத்திலிருந்து வெளியேறி அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு அழுகை சிறந்த தீர்வாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அதிமாக அழுவதாக உணர்ந்தால் மருத்துவரை சந்தித்து அழுகைக்கான உடல் மற்றும் உளவியல் காரணங்களைக் கண்டறியுங்கள்.