

உங்கள் உளவியல் எப்படிப்பட்டது எனக் கண்டறிய பல உளவியல் பரிசோதனைகள் உள்ளன. அவற்றுள் பிரபலமானது ‘ஸ்ட்ரூப் பரிசோதனை’.
பரிசோதனை உளவியலின் முன்னோடிகளில் ஒருவர் ஜான் ரிட்லி ஸ்ட்ரூப். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1935-ல் உருவாக்கிய ஸ்ட்ரூப் பரிசோதனை உளவியல் பரிசோதனைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரபலமான அமெரிக்க உளவியல் அறிஞரான ஜோசப் பீட்டர்சன் வழிகாட்டுதலில் ஸ்ட்ரூப் இந்த ஆய்வை மேற்கொண்டார். மனித மனத்தின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்கான பரிசோதனையான இது, இன்று அவர் பெயராலே ‘ஸ்ட்ரூப் பரிசோதனை’ என்று அழைக்கப்படுகிறது.
முதலில் இந்தப் பரிசோதனை செய்துபார்க்கலாம். கிழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களை வாசிக்க வேண்டும். இந்த படத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களை அப்படியே வாசிக்கலாம். இப்போது எவ்வளவு வேகத்தில் வாசித்தோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம். அடுத்து இந்த சொற்களின் நிறத்தைக் கொண்டு இந்தச் சொல்ல வாசிக்க வேண்டும். உதாரணமாக Blue என எழுதப்பட்ட சொல் சிவப்பு நிறத்தில் இருந்தால் ‘red’ என்றுதான் உச்சரிக்க வேண்டும். இப்போது இதை எவ்வளவு வேகத்தில் வாசிக்கிறோம் என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
இந்தப் பரிசோதனையின் மூலம் சில விஷயங்களை நாம் தெளிவாக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையில் சிவ விஷயங்களைப் படித்து நாம் பழக்கமாக ஆக்கிக்கொள்கிறோம். உதாரணமாக நாம் ஒரு மொழியைப் படிக்கிறோம்,. அதை வாசிக்க, எழுதப் படிக்கிறோம். எத்தனை மணிக்கு உறங்க வேண்டும், எத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்பதையும் நாம் பழக்கப்படுத்திக் கொள்வதையும் இதில் சேர்க்கலாம். இதைப் ‘படித்தல்’ எனக் கொள்வோம்.
அடுத்தது, ‘மீண்டும் படித்தல்’, இப்போது நீங்கள் ஏற்கெனவே படித்த ஒரு விஷயத்தை மாற்றி மீண்டும் படிக்க இருக்கிறீர்கள். படத்தில் காட்டியுள்ளபடி சிவப்பு (Red) எழுதப்பட்ட சொல்லை அதன் நிறத்தைவைத்து வாசிப்பதை ‘மீண்டும் படித்தல்’ எனலாம்.
இந்தச் செயல்பாட்டில் ஏற்கெனவே படித்த விஷயத்துக்கு மாறாகப் புதிததாக படிக்கும்போது ஏற்கெனவே படித்த நினைவு வந்து படிக்கவிடாமல் தடுக்கும். உதாரணமாக நீங்கள் கறுப்பு (Black) என எழுதப்பட்ட சொல்லை அதன் நிறத்தைக் கொண்டு படிக்க முற்படும்போது ஏற்கெனவே நாம் படித்த Black என்ற மொழி உச்சரிப்பு நம் நினைவிலிருந்து வந்து தடுக்கும். அப்படியானல் புதிய விஷயங்களைப் படிக்க ஏற்கெனவே கற்ற விஷயங்களை மறக்க வேண்டும் என்ற தெளிவு இதன் மூலம் நமக்குக் கிடைக்கும். அதாவது 6 மணிக்கு எழும்ப வேண்டும் என்றால் ஏற்கெனவே 8 மணிக்கு எழும்பிய பழக்கத்தை மறக்க வேண்டும்.
நம் மனத்தில் செயல்பாடு இருவிதமான அமைப்பில் செய்ல்படக்கூடியது என்கிறார் ரிட்லி ஸ்ட்ரூப். சொற்களை வாசிக்கச் சொன்னவுடன் கடகடவென வாசிப்பது முதல் அமைப்பால் நிகழக்கூடியது. அதே நேரம் சொல்லின் நிறத்தை வாசிக்கச் சொன்னபோது நமக்கு நிதானம் தேவைப்படும். அப்போது நம் இரண்டாம் அமைப்புதான் அதை வாசிக்கும். அதனால் சில முக்கியமான காரியங்களில் முடிவெடுக்க நாம் இரண்டாம் அமைப்பையே பயன்படுத்த வேண்டும்.
மூளையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் இந்தப் பரிசோதனை பயன்படுகிறது. ஒரு விஷயத்தைப் பார்த்தாலோ கேட்டாலே நாம் உணர்ச்சிவசப்படுவது வேகமாக நடப்பது. அதுதான் சொற்களைப் பார்த்தவுடன் வாசிக்கத் தொடங்குகிறோம். ஆனால், சொற்களின் வண்ணங்களை வாசிக்க நமக்கு அவகாசம் தேவைப்படுகிறது. இதன் மூலம் இந்தப் பரிசோதனை நிதானத்தை வலியுறுத்துகிறது.