உணவுச் சுற்றுலா - மிதக்கும் நாட்டு மருந்துக் கடை

உணவுச் சுற்றுலா - மிதக்கும் நாட்டு மருந்துக் கடை
Updated on
3 min read

இந்தியாவின் வெனிஸ் என அழைக்கப்படும் ஆலப்புழையின் நீர்வழித் தடத்தில், மழைச் சாரல் விரவிக்கொண்டிருந்த மாலை வேளை அது! நீல நிறத்தில் பிரதிபலித்த தண்ணீருக்குள், செந்நிறச் சூரியன் மெது மெதுவாக மூழ்கி ஓய்வெடுக்கச் செல்லும் கவித்துவமான காட்சியைக் காண எங்களை அழைத்துச் சென்றது 'படகு இல்லம்'. செல்லும் வழி நெடுகிலும் தென்னை மரங்கள் தலை அசைத்து எங்களை வரவேற்றன. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் மிகப் பெரிய ஏரிக்கு எடுப்பாக நெல் வயல்கள் பசுமையாகக் காட்சியளித்தன. அப்பகுதி மக்களின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்யும் நெற்களஞ்சியம் அது.

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மணி அளவில் 'கைநகரி' பகுதியில் இறக்கிவிடப்பட்டோம்! இயற்கையை ரசிப்பதற்கான அற்புதமான இடம் அது. நீளமாகக் கட்டமைக்கப்பட்டிருந்த அந்த பகுதியைச் சுற்றிலும் தண்ணீர்! ஏதோ தீவுக்குள் இருப்பதைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்குப் பசியாற்றச் சிற்றுண்டி கடைகள் அப்பகுதியில் நிறைந்திருந்தன. பசியாற்றிக் கொள்ளச் சிற்றுண்டி ரகங்களைத் தேடின கண்கள்!

உப்பில் ஊறவைத்த காய்

தண்ணீரில் அமைக்கப்பட்டிருந்த அந்த கடைத் தெருவுக்குள் நுழைந்தேன். முத்துச் சோளம், மாங்காய்ப் பத்து, பனிக்கூழ், பழங்கள் எனச் சாப்பிடுவதற்கோ குறைவில்லை! சில அடி தூரத்தில் தென்பட்ட வித்தியாசமான அமைப்பு ஒன்று என்னை ஈர்த்தது. அக்கடையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த பீங்கான் குடுவைகளும், ஞெகிழிக் குடுவைகளும் என்னை அன்போடு அழைத்தன!

கிட்டத்தட்ட ஐம்பது குடுவைகள் அந்தக் கடையில் அடைக்கலமாகியிருந்தன. உப்பில் ஊறவைத்த நெல்லிக்காய், மாங்காய் ரகங்களைப் பல இடங்களில் சுவைத்திருந்தாலும், அந்தக் கடையிலோ உப்பில் ஊறவைத்த எண்ணிலடங்கா காய், பழ ரகங்களைப் பார்க்க முடிந்தது! 'இவ்வளவு ரகங்களா!' என்று ஆச்சரியப்படுத்தியது அந்தக் கடை!

மிதக்கும் நாட்டு மருந்துக்கடை

கேரட், மிளகாய், வாழைத்தண்டு, செளசெள, திராட்சை, பப்பாளி, செர்ரி, எலுமிச்சை, கொய்யா, அன்னாசி, சிறுநெல்லிக்காய், பெரு நெல்லிக்காய், மாங்காய், ஊறுகாய் மாங்காய் என இவை அனைத்தும் உப்பு நீர் நிரப்பப்பட்டிருந்த தனித்தனிக் குடுவைகளில் வைக்கப்பட்டிருந்தன! மரப்பலகைகளை இணைத்து நீரில் மிதக்கச் செய்துதான், அந்தச் சிற்றுண்டிக் கடைகளை அமைத்திருக்கிறார்கள்! அதாவது 'மிதக்கும் நாட்டு மருந்துக்கடை' என்று அந்தக் கடைக்குப் பெயர் சூட்டலாம்!

ஊற வைக்கப்பட்டிருந்த உப்பு ஊறல் சிற்றுண்டி ரகங்கள், நாவில் படாமல் பார்வையாலேயே நாவூறச் செய்துகொண்டிருந்தன! எதை விடுத்து, எதைச் சுவைப்பது என்று தெரியவில்லை! இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து உப்பில் ஊறிய திராட்சைகளைச் சுவைக்கலாம் எனக் கடைக்காரரிடம் விருப்பத்தைத் தெரிவித்தேன். அடுத்த சில நொடிகளில் எனது கைகளில் அடைக்கலமானது 'உப்புளினிப்பு' திராட்சை!

உப்புளினிப்பு சிற்றுண்டி

அதென்ன உப்புளினிப்பு என்கிறீர்களா! திராட்சையில் இயற்கையாகவே இருக்கும் இனிப்பு, புளிப்போடு உப்புச் சுவையும் இணைந்துகொள்ள, சுவைத்த நொடியில் ‘உப்புளினிப்பு' எனும் புதுமையான கலவைச் சுவை நாவின் மொட்டுக்களை ஆக்கிரமித்துக்கொள்கிறது! நாவில் வைத்ததும் அல்வா போலத் திராட்சையோடு சேர்ந்து கலவைச் சுவையும் தொண்டையினூடே கரைந்து செல்கிறது. திராட்சைத் தொகுப்பு கொடுத்த புதுமையான அனுபவம் அது!

'வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இதை விரும்பிச் சுவைக்கிறார்கள். இங்கே வாழும் மக்கள் அவரவர் தங்கள் வீடுகளிலேயே இது போன்று தயாரித்துக்கொள்வார்கள். பல நேரங்களில் தொடு உணவாகவும், சில நேரங்களில் சிற்றுண்டி ரகமாகவும் இவை பயன்படுகின்றன. தொடு உணவாகவோ, சிற்றுண்டியாகவோ உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார் கடைக்காரர்.

விலையும் குறைவு

'திராட்சை மட்டும் போதுமா, எல்லாவற்றிலும் கொஞ்சம் சுவைத்துப் பாருங்கள், வித்தியாசமான அனுபவமாக இருக்கும்' என அவர் ஆசையைத் தூண்ட, உப்பில் ஊறவைத்த ஒவ்வொரு காய்கனி ரகத்தின் சிறு துண்டுகளையும் சுவைத்து முடித்தேன்! உப்புச்சுவை திகட்டும் அளவிற்கு 'உப்பு ஊறல்' சிற்றுண்டிகளை சுவைத்தாகிவிட்டது! நாவில் படர்ந்திருந்த சுவை மறைவதற்குப் பல மணி நேரமானது! இந்த ஊறல் சிற்றுண்டி ரகங்களின் விலை பத்து ரூபாயில் தொடங்குகிறது. தேவைப்படும் அளவு, உணவுப் பொருளுக்கு ஏற்ப ரூ.20, ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பாரம்பரியத்தின் நீட்சி

நெடுங்காலமாகவே உணவுப் பொருட்களை இயற்கையாகச் சேமித்து வைத்துப் பயன்படுத்தும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு. குறிப்பிட்ட பருவ காலத்தில் சில பொருட்கள் கிடைக்காதபோது அல்லது பஞ்சம் வரலாம் என்று அனுமானிக்கப்படும்போது இயற்கை முறையில் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் முறை வழக்கத்திலிருந்திருக்கிறது.

வற்றல், உப்பு ஊறல், கருவாடு என அவற்றின் பட்டியல் நீளும். உப்பிற்கு இருக்கும் ‘பிரசர்வேடிவ்' தன்மையால், பல உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு வைத்துப் பயன்படுத்த முடியும் என்பது அனைவரும் அறிந்த அறிவியல்! ஆலப்புழையில் பார்த்த உப்பில் ஊறவைத்த பல்வேறு உணவுப் பொருட்கள், பாரம்பரியத்தின் நீட்சியாகவே எனக்குத் தோன்றின!

பாரம்பரியத்தில் புகுந்த புதுமை

பயணிகளை அழைத்துக்கொண்டு அடுத்த படகு அப்பகுதியில் வந்து நின்ற சில நிமிடங்களில், 'ஊறல் கடையை' நோக்கியே நிறைய மக்கள் வருவதைப் பார்க்க முடிந்தது! புதுமை யாருக்குத்தான் பிடிக்காது! அதுவும் சிற்றுண்டிகளில் பாரம்பரியத்தைப் புகுத்தியது புதுமையோ புதுமை!

செரிமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம். இவை பசியை அதிகரித்து மலத்தை இளக்கும். வித்தியாசமான சுவை அனுபவத்தைப் பெற ஆசைப்படுபவர்களும் முயலலாம். பயணத்தின்போது உண்டாகும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் ஆபத்பாந்தவனாகவும் இவை பயன்படும். ரத்த அழுத்த நோயாளிகள், உப்பில் ஊறவைத்த சிற்றுண்டிகளைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது!

சித்த மருத்துவம் சார்ந்த இயற்கை உணவுப் பொருட்களை அப்பகுதியில் ரசித்ததில் மகிழ்ச்சியே! மிதக்கும் கட்டமைப்பு, அதன் மீது சுற்றுலா உணவுகள், சுற்றிலும் தண்ணீர்ப் பிரவாகம், சில்லெனும் காற்று, உப்பில் ஊறவைத்த சிற்றுண்டி ரகங்களை எச்சில் ஊற ஊறச் சுவைப்பதற்கு இதைவிட அழகான சூழல் தேவையா என்ன?

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in