

சேலம்: சேலம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் 2,700-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் குளிர்சாதன வசதி மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றுடன் குழந்தைகள் சிறப்பு நூலகம் செயல்படுகிறது.
சேலம் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள மாவட்ட மைய நூலக வளாகத்தில் ரூ.40 லட்சம் செலவில் குழந்தைகள் சிறப்பு நூலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு குழந்தைகளுக்கான பொது அறிவு, கதைகள், ஓவியம், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட நுண்கலை நூல்கள், நாணயம் சேகரிப்பு நூல்கள், காகித சிற்பங்கள் உருவாக்கும் கலை நூல்கள், கார்ட்டூன் திரைப்படங்கள் குறித்த புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2,700-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
இங்கு குளிர்சாதன வசதியுடன் குழந்தைகள் அமர்ந்து புத்தகங்களை வாசிக்கும் வசதி, குடிநீர், கழிவறை, கண்காணிப்புக் கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நூலகத்துக்கு வரும் குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டுச் சாதனங்களும் உள்ளன.
இதுதொடர்பாக நூலகத் துறையினர் கூறியதாவது: சேலத்தில் குழந்தைகளுக்கான அறிவுசார் பொழுதுபோக்கு இடமாக குழந்தைகள் சிறப்பு நூலகம் செயல்பட்டு வருகிறது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் இங்கு வந்து விரும்பிய புத்தகங்களை படித்துச் செல்லலாம்.
வெள்ளிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து கிழமைகளிலும் பகல் முழுவதும் செயல்படும் நூலகத்துக்கு, பெற்றோருடன் வந்து செல்லலாம். பொது அறிவுக் களஞ்சியம் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் ஏராளமாக உள்ளன.
கோடை விடுமுறை குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து வந்து புத்தகங்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் பொதுஅறிவு தகவல்களை பெறுவதுடன், நூல் வாசிப்பு பழக்கமும் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.