

வெற்றிக்குத் துணையாகப் பல பழக்க வழக்கங்கள் நாம் கடைபிடிப்போம். ஆனாலும் வெற்றி நமக்கு எட்டாக் கனியாக இருக்கும். அதற்கு என்ன காரணம் என நாம் யோசிக்க வேண்டும். நம்முடைய பழக்க வழக்கங்கள் நமது தோல்விக்குக் காரணங்களாக இருக்கும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
நாளை மற்றொமோரு நாளை: எந்தக் காரியம் சொன்னாலும், ‘அதுவா அதை நாளை செய்கிறேன்’ எனத் தள்ளிப்போடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? உரிய காரணத்துடன் காரியங்களைத் தள்ளிப்போடுவது சரிதான். ஆனால், இதையே ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தால் நாளை, நாளை என்று நாட்கள் நகர்ந்துபோகும் நாம் அங்கேயே நிற்போம்.
எனக்கு நேரம் இல்லை
ஒரு நாளில் சில காரியங்களைத் திட்டமிட்டு முடிக்கவில்லை என்றால், அது நம் இயலாமைதான். ஆனால், ‘எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை. அதனால் முடிக்கவில்லை’ என அதற்கு ஒரு சாக்குச் சொல்வதையே பழக்கமாக வைத்திருந்தால் ஆபத்து. நம் தோல்விக்கு அது காரணமாகும்.
பிறரைக் குறை சொல்வது
ஏதாவது காரியங்களில் தவறு நிகழ்ந்துவிட்டால், அதற்குப் பொறுப்பேற்காமல் ‘அதற்குக் காரணம் நான் அல்ல. நீதான்’ எனப் பிறரைப் பொறுப்பாக்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதும் ஒரு நல்ல பழக்கம் அல்ல.
நான் அதிர்ஷ்டம் கெட்டவன்
வெற்றிகள் கைவசப்படாமல் போகும்போது அதற்குக் காரணம், ‘எனக்கு ராசியில்லை. நான் அதிர்ஷ்டம் கெட்டவன்’ எனச் சொல்வதைச் சிலர் வழக்கமாகக் கொண்டிருப்பர். முயற்சிகளை முன்னெடுக்கும்போதுதான் வாய்ப்புகள் வரும். தெய்வத்தால் முடியாவிட்டாலும் முயற்சி, தன் மெய்வருத்தக் கூலி தரும் என வள்ளும் சொல்கிறது.
நேரம் சரியல்ல
தோல்விகள் வரும்போது அந்தக் காரியம் தொடங்கிய நேரம் சரியில்லை என நேரத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடுபவர்கள் பலர். உண்மையில் நேரத்தின் பிரச்சினை அல்ல அது. அந்த நேரத்தில் நம் செயல்பாடுகள் சரியில்லாமல் போனதுதான் தோல்விக்குக் காரணம்.
யாரையும் நம்ப முடியவில்லை
பொதுவாகப் பலரும் சொல்வது, ‘இந்தக் காலத்தில் ஒருவரையும் நம்ப முடியாது” என்று. யாரையும் நம்ப முடியவில்லை என்றால் நாம் யாருடன் நட்புகொள்வோம், நட்புகள், சொந்தங்கள் இல்லாமல் வாழ்க்கை எப்படி முழுமை பெறும்?
வெற்றிபெற்றவர்கள், தவறானவர்கள்
வெற்றிபெற்றவர்கள், முறையாக வெற்றியைப் பெறவில்லை. அவர்கள் தவறான வழியில்தான் வெற்றிபெற்றிருப்பார்கள் என விமர்சிப்பதும் நல்ல பழக்கம் இல்லை.
நாடு உருப்படாது
யாரைக் குறை கூறுவது எனத் தெரியாமல் பலரும் ‘நாடு உருப்படாது’ என நாட்டைக் குறை சொல்வார்கள். நாமெல்லாம் சேர்ந்ததுதான் நாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.