ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது எப்படி? - மருத்துவரின் எச்சரிக்கையும் ஆலோசனைகளும்

ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது எப்படி? - மருத்துவரின் எச்சரிக்கையும் ஆலோசனைகளும்
Updated on
2 min read

உலகம் முழுவதும் மிகப் பெரிய மருத்துவப் பிரச்சினையாகவே ரத்த அழுத்த நோய் உள்ளது. குறிப்பாக, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயதினர்கூட ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப் பழக்கம் போன்றவை ரத்த அழுத்தம் மாறுபாட்டிற்கான காரணங்கள் என்று அடுக்கும் மருத்துவர்கள், முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர். இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

உலக சுகாதார நிறுவனம் ரத்த அழுத்தம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 2005-ம் ஆண்டு பிரச்சார இயக்கத்தை தொடங்கியது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் மே 17-ம் தேதி 'உலக ரத்த அழுத்த தினம்' கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. இதன்படி, இன்றைய தினம் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ரத்த அழுத்த நோயால் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை விளக்குகிறார், சிறுநீரக சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரகவியல் துறை பேராசிரியர் டாக்டர். செளந்தரராஜன்:

"சராசரி மனிதனின் ரத்த அழுத்தத்தின் அளவு 120/80. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும். உடல் மெலிந்து இருப்பவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும். உடல் எடையைப் பொறுத்து, ரத்த அழுத்தம் மாறுபடும். பொதுவாக 130/90 மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம். ஆனால், தற்போது 125/85 மேல் இருந்தாலே உயர் ரத்த அழுத்த அறிகுறியாக கருதப்படுகிறது.

மரபு வழி ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, நாளமுள்ள சுரப்பிகள், உடல் பருமன் அதிகரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்டவை ரத்த அழுத்தம் வர முக்கியக் காரணங்கள் ஆகும். காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்த அழுத்த பரிசோதனைதான் மிகத் துல்லிய அளவை காட்டும்.

குறைவான விலையில் இப்போது ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன. ஆகவே அனைவரின் வீட்டிலும் அவசியம் ரத்த அழுத்த பரிசோதனை கருவி மற்றும் உடல் எடை பார்க்கும் இயந்திரத்தையும் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். கடல் அலை போன்று காலையிலிருந்து மாலை வரை ரத்த அழுத்தம் மாறுபட்டு கொண்டே வரும்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சுமா‌ர் 20 கிராம் உப்பு சேர்த்து கொள்கிறோம். இது தவறானதாகும். நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்புக்கும் ரத்த அழுத்தத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு.

மேலும், பேக்கரி பொருள்கள், சிப்ஸ், பிரெட் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய் போன்ற பொருள்களும் ரத்த அழுத்தத்திற்கு முக்கியக் காரணம். முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப் பழக்கம் போன்றவை ரத்த அழுத்தம் மாறுபாட்டிற்கான காரணங்கள் ஆகும்.

தமிழக அரசு எடுத்துள்ள ஆய்வில் நகர்ப்புறங்களில் 33% பேருக்கும்,கிராமப்புறங்களில் 25% பேருக்கும் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, 10 -ல் 3 பேருக்கு ரத்த அழுத்தமும், 5-ல் ஒருவருக்கு சிறுநீரக கோளாறும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பது மிகவும் அவசியம். உணவில் உப்பின் அளவை குறைத்து பழங்கள், காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, உடற்பயிற்சி செய்யவேண்டும்.

ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் ரத்த அழுத்த மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தீடீர் இதய அடைப்பு மற்றும் வாத நோய், சிறுநீரக செயலிழப்பு வருவதற்கு முக்கிய காரணம் ரத்த அழுத்தம் ஆகும். எனவே, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in