

வாழ்க்கையில் மேம்பட பல முடிவுகளை நாம் எடுக்க வேண்டியிருக்கும். நட்புகளை மதிப்பிடுவது, அவற்றுள் ஒன்று. சில எதிர்மறையான விஷயங்களைத் தொடர்ந்து உங்களுக்குச் செய்துகொண்டு இருக்கும் நபர்களை விமர்சித்துத் திருத்த வேண்டும். இல்லையெனில் அந்த நட்புகளை விட்டு விலகுவது நம் வளர்ச்சிக்கு நல்லது.
அந்த விஷயங்கள் என்னென்ன எனப் பார்க்கலாம். நம் எல்லோருக்கும் சுய மதிப்பு இருக்கும். அந்தச் சுய மதிப்பைக் குறைக்கும் விதத்தில் எப்போது பேசும் நட்புகளைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக நீ எதற்கும் லாயக்கில்லாதவன் என எப்போதும் பேசும் நட்புகளைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் மனத்தின் சந்தோஷத்தைக் குறைக்கும் வகையில் எப்போதும் பேசும் நட்புகள் யார்யார் என மதிப்பிட வேண்டும். அந்த நட்பிடம் பேசினால் நம் மனச் சந்தோஷம் மறைந்து சங்கடம் தோன்றும். அந்த நட்புகளை நாம் விலக்க வேண்டும்.
எந்த நண்பர்களின் செயல்பாடுகள் உங்கள் தன்னம்பிக்கையைக் குறைக்கும் விதத்தில் இருந்தால் அவர்களைப் போன்ற நபர்களையும் நாம் கவனிக்க வேண்டும். நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு உனக்குத் திறமை இல்லை. அதில் நீ தோல்வி அடைவாய் எனச் சொல்லும் நட்பு உங்களுக்குத் தேவை இல்லை. அந்தக் காரியத்தை முன்னிட்டு உங்களுக்கு இருக்கும் சில பலவீனங்களை விமர்சனபூர்வமாகக் கூறி உங்களைத் தயார்படுத்தும் நட்புகள், நல்லவிதமானவை. ஆனால், எப்போதும் உங்களைத் தடாலடியாகக் குறை கூறுபவர்களைத் தவிர்க்க வேண்டும்.
ஏற்கெனவே நீங்கள் செய்த தவறுகளை அடிக்கடி உதாரணமாகக் காட்டி உங்களை முடக்குபவர்களைத் தவிர்க்க வேண்டும். தவறுகள் யாருக்கும் இயல்புதான். ஆனால், அதையே காரணமாகக் கொண்டு நீ அதைச் செய்யாதே. அது தோல்வியில் போய் முடியும் எனச் சொல்பவர்களைத் தவிர்க்க வேண்டும்.
உங்களது சுதந்திரத்தில் தலையிடும் நட்புகளைத் தவிர்க்க வேண்டும். ‘என்னால் இது செய்ய முடியாது’ எனச் சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லாத நட்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை.
நட்புக்குள் எப்போது நீங்களே விட்டுக்கொடுத்துப் போக வேண்டும் என்னும் ரீதியிலான நட்பு சரியானது அல்ல. பரஸ்பரம் விட்டுக்கொடுத்து இருக்க வேண்டும். இல்லாமல் ஒருவர் மட்டும் விட்டுக்கொடுத்துப் போவது சரியல்ல. மேலும் நட்புக்குள் எப்போதும் கணக்குப் பார்க்கும் நட்புகள் நல்லதல்ல. நான் உனக்கு என்னவெல்லாம் செய்தேன் எனச் சொல்லி மற்றுள்ளவரை அறிவுறுத்திக் கொண்டே இருக்கும் நட்பு, முறையானது அல்ல. அன்பு என்ற பெயரில் நமது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதும் நட்புக்கு அழகல்ல. பிறகு மறைமுகமாகப் புண்படுத்துவதும், நட்புக்கு ஒரு நலல் செயல் அல்ல. அதாவது நீங்கள் ஒரு தோல்வியால் கலங்கி நிற்கும்போது உனக்கு இது தேவைதான் எனக் குத்திப் பேசும் நட்புகளைத் தவிர்க்க வேண்டும்.
இம்மாதிரியான குணங்கள் உள்ள நட்புகளில் முதலில் இந்த விஷயங்களைச் சுட்டிக் காட்டி மாற்ற முயல வேண்டும். மீண்டும் தொடரும் பட்சத்தில் விலகுவது நம் வாழ்க்கைக்கு நல்லது.