

சென்னை: தமிழகத்தில் 5-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு என்றளவில் அண்மைக்காலமாக பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நாள்பட்ட சிறுநீரக நோய் பரவல் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் குறித்தான தரவுகள் இல்லாத காரணத்தினால் முதல் முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடைபெற்றது.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, சென்னை மருத்துவ கல்லூரியின் சிறுநீரகவியல் துறையுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. தேசிய சுகாதார இயக்க நிதியில், 1 மருத்துவ அதிகாரி, 1சுகாதார செவிலியர், 1 சுகாதார ஆய்வாளர், 1 ஆய்வக நுட்புனர் மற்றும் 1 துணை பணியாளர் ஆகியோர் அடங்கிய 92 ஆய்வுக் குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டன.
இதன்படி 5,310 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ரத்த சிவப்பணுக்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பது. இதில் 455 பேருக்கு சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்படையும் நிலை ஆரம்ப நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரகத்தில் இருக்கும் புரதம் வெளியேறும் தன்மை 367 பேருக்கு உள்ளது. இதுவும் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளான நிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக 934 பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஆரம்பகட்ட கணக்கெடுப்பின் மூலம் 5-ல் 1 நபருக்கு சிறுநீரக பாதிப்பு என்ற அளவில் சிறுநீரக நோய்கள் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆரம்பக்கட்டத்தில் உள்ள இந்த நபர்களுக்கு 3 மாதங்களுக்குப் பின்பு மறுபரிசோதனை செய்யப்படும். இந்த சோதனையில் சிறுநீரக செயல்பாடுகள் சீரான முறையில் இல்லையென்றால், அவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது உறுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.