

சித்திரையின் சிறப்புகளில் ஒன்று வட தமிழகக் கிராமங்களில் நடைபெறும் திரௌபதி அம்மன் திருவிழாவும் அதையொட்டி அரங்கேற்றப்படும் கட்டைக்கூத்தும். காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் மண்பாதையில் பயணித்தால் வருகிறது மேல்பங்காரம் கிராமம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே நடந்த கட்டைக்கூத்து நாடகம், எளிய மக்களின் வாழ்க்கையை அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் கலையைப் பறைசாற்றியது.
ஊருக்குள் நுழைகிறபோதே தென்படுகிற கோயில், அதையொட்டிய வேப்பமரம், வெயிலுக்கு அதன் நிழலில் இளைப்பாறியபடியே பேசிக்கொண்டிருக்கிற ஊர்ப்பெரியவர்கள், ஆடு, மாடுகளின் மணிச்சத்தம், பள்ளிவிடுமுறையில் ஆடிக்களிக்கும் குழந்தைகளின் உற்சாகக்குரல், அதைத் தோற்கடிக்கிற அக்காக்குருவியின் அழைப்பு... ஒவ்வொன்றிலும் வெளிப்படுகிறது அந்தக் கிராமத்தின் உன்னதம்.
அது சித்திரை மாதமோ, நள்ளிரவோ கிடையாது. பங்குனி மாத உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஊரின் மையத்தில் இருக்கும் கோயிலில், ஊர்மக்கள் திரண்டிருக்க நமக்காகக் கட்டைக்கூத்தை அரங்கேற்றினார்கள் பாலுசெட்டி பவானியம்மன் நாடக மன்றத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞர்கள். நிலவும் நட்சத்திரங்களும் விழித்திருக்க, இரவின் நிசப்த மேடையில் ஆரவாரத்துடன் நடத்தப்படுகிற கட்டைக்கூத்தைப் பார்த்த நமக்கு, பகலில் நடந்த அந்தக் கூத்து வித்தியாச அனுபவத்தைத் தந்தது.
மண்ணின் கலை
கலையும் கலை சார்ந்த கொண்டாட்டங்களும் இணைந்தது நம் மரபு. அவற்றுள்ளும் எளிய மக்கள் சார்ந்த கலைகள் தனித்துவம் நிறைந்தவை. எந்தக் கருத்தையும் அந்தக் கலைகள் மூலமாக எங்கு வேண்டுமானாலும் கொண்டு சேர்க்கலாம். மக்களின் மொழியை மண்ணின் பாரம்பரியத்தை அதில்தான் முழுமையாகப் பார்க்க முடியும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிற கட்டைக்கூத்தும் அப்படியொரு கலைவடிவம்தான். தெருக்கூத்தும் கட்டைக்கூத்தும் ஒரே வடிவுடையவை என்றாலும் இரண்டுக்கும் இடையே நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு என்று சொல்கிறவர்களும் உண்டு. கட்டைக்கூத்தில் வழங்கப்படுகிறவை எல்லாமே முன்னோர்கள் விட்டுச்சென்றவைதாம். அவற்றில் நாகரிகத்தின் எந்தவிதக் குறுக்கீடும் இன்றி அப்படியே வழிவழியாகத் தொடரப்பட்டு வருகின்றன.
எப்படித் தோன்றியது கூத்து?
பொதுவாகஒ பெரும்பாலான கலைவடிவங்கள் சாமானிய மக்களிடம் இருந்துதான் தொடங்கியிருக்கின்றன. கட்டைக்கூத்தின் நதிமூலமும் அப்படித்தான் உருவாகியிருக்கிறது. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், அதிகப்படியான குற்றேவல்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் குடிமக்கள் இருந்தனர். சூரியன் கண்ணயர்ந்த பிறகும் இவர்களுடைய வேலைகளுக்கு மட்டும் ஓய்வே இருக்காது. அப்படி உழைத்து உழைத்து ஓய்ந்து கிடந்த மக்கள் கூட்டத்தில் சிலர், பானைகளில் சிறு சிறு கற்களை வைத்து ஓசையெழுப்பினார்கள். அந்தத் தாளமும் லயமும் சுற்றியிருக்கிறவர்களை ஈர்த்தது. பிறகு கரித்துண்டை அரைத்து முகத்தில் புள்ளி புள்ளியாக வரைந்து கொண்டு ஆடல் கலையையும் அரங்கேற்றினார்கள். மொத்தக் கூட்டமும் அவர்களை வேடிக்கை பார்த்தது. வெறும் ஆடல், பாடலுடன் நிறுத்திக்கொள்ளாமல் உள்ளே புராணக்கதைகளையும் புனைகதைகளையும் வைத்தார்கள். தங்கள் அலுப்பும் சலிப்பும் மறந்து, அந்தக் கலை வடிவத்தில் மக்கள் ஒன்றிப்போனார்கள். ஓரிடத்தில் நிகழ்ந்த இந்தக் கதை மக்களின் பெரு வரவேற்பால் அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவியது. அந்தக் கலைஞர்கள் ஊர் விட்டு ஊர் சென்று அங்கும் தங்களுடைய திறமையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
“கட்டைக்கூத்து இன்ன தேதியில இப்படித்தான் தொடங்கியதுன்னு சரியா சொல்ல முடியாது. ஆனா சாதாரண மக்கள்கிட்டே இருந்து தோன்றியதுதான் இந்தக் கலை” என்று சொல்கிறார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டைக்கூத்து ஆடிவரும் சஞ்சீவி. உத்திரமேரூர் அடுத்த இளநகர் கிராமத்தைச் சேர்ந்த இவர், வயது முதிர்ந்த நிலையிலும் அபிமன்யு வேடம் கட்டுகிறார். கணீரென்ற குரலும் தாளம் தப்பாத கால்களுமாக பதினாறு வயது பாலகனாக மாறுகிறார். அரிதாரத்தைக் கலைத்தபிறகே முதுமை வெளிப்படுகிறது. கிருஷ்ணர், அர்ஜுனன், தர்மன், ஆஞ்சநேயர் என எந்த வேடமிட்டாலும் அந்த பாத்திரமாகவே மாறிப்போகிறார்.
சித்திரைத் திருவிழா
கட்டைக்கூத்து என்றதுமே பொதுவாக அது பாரதக்கூத்தை குறிக்கும்விதமாகவே இருக்கிறது. தமிழகத்தில் எங்கெல்லாம் திரௌபதி அம்மன் கோயில் இருக்கிறதோ அங்கெல்லாம் சித்திரை மாதத்தில் பாரதக்கூத்து நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, துரியோதனன் படுகளத்தைத் தொடர்ந்து தீமிதி திருவிழாவில் நிறைவடையும். ஆரம்ப நாட்களில் தினமும் காலையில் ஓதுவார்கள் ஊர்ப்பொதுவில் அமர்ந்து பாரதக்கதை சொல்வார்கள். காலை என்ன கதை சொல்லப்படுகிறதோ, அன்று இரவு அதுதான் கூத்தாக நடித்துக் காட்டப்படும். ஆனால், வில் வளைப்பு அன்றுதான் இரவில் கூத்து தொடங்கும்.
இரவு முழுக்கக் கட்டைக்கூத்து கலைஞர்களின் ஆட்சிதான். ஊர்ப்பொதுத் திடலில் அரிதாரம் பூசி களமிறங்குவார்கள். ஊரே விடிய விடிய விழித்தபடி அவர்களின் ஆட்டத்தில் மூழ்கியிருக்கும். பொதுவாகப் பாரதக்கூத்து பத்து நாட்கள் நடக்கும் என்றாலும் வில் வளைப்பு, அர்ஜுனன் தபசு, பகடைத்துகில், கிருஷ்ணர் தூது, கர்ண மோட்சம், துரியோதணன் படுகளம் ஆகியவை நடக்கும் நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும். இவற்றில் ஒரு காட்சியைக்கூடத் தவறவிடாமல் கண்டு ரசிப்பார்கள்.
அற்புதக் கலைஞர்கள்
பனப்பாக்கம் அருகில் இருக்கும் உளியநல்லூரைச் சேர்ந்த ராஜி, பரம்பரை கட்டைக்கூத்து கலைஞர். ஸ்த்ரீ பார்ட் கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கூந்தல் வளர்த்து வருபவர்.
“எங்க தாத்தாமாருங்க ஏழு பேருக்கும் கட்டைக்கூத்துதான் அடையாளம். சின்ன வயசுல இருந்தே அவர்களைப் பார்த்து வளர்ந்த எனக்கும் கூத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. நானும் அவங்க வழியில கட்டைக்கூத்து கலைஞனாகிட்டேன்” என்று சொல்லும் ராஜி சகுனி, பீமன் போன்ற அதிரடி கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகிறார். அதற்கு எதிர்ப்பதமாக ஸ்த்ரீ பார்ட் எனப்படும் பெண் வேடங்களிலும் முத்திரைப் பதிக்கிறார். காந்தாரி வேடமிட்டு இவர் வைக்கிற ஒப்பாரிப்பாடலை நாள் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக உறுமுகிறார் மேல்பங்காரத்தைச் சேர்ந்த ஜெகநாத நாயக்கர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிய கால்களும், பாடிய வாயும் இப்போதும் ஓயவில்லை. அரிதாரம் பூசும் அளவுக்கு உடலில் வலுவில்லை என்றாலும் அதைக் குரல் மறக்கடித்துவிடுகிறது. கணீர்க்குரலில் கூத்தைத் தொடங்கிவைத்துப் பாடுகிறார். இடையிடையே ஏற்படுகிற தொய்வைத் தன் நகைச்சுவையால் போக்குகிறார். தன் கலை வாரிசாக மூத்த மகன் ராமனை வார்த்தெடுத்திருக்கிறார். இவருடைய இளைய மகன் காமராஜ், மிருதங்க வாசிப்பில் மிளிர்கிறார்.
ராமன், 25 ஆண்டுகால கூத்தாட்ட அனுபவம் மிக்கவர். தந்தையுடன் கூடவே இருந்த அனுபவம் அவருக்குக் கூத்துமேடைகளில் கைகொடுக்கிறது. தன் தந்தை சொல்லக்கேட்டு பல கூத்துக்கதைகளை எழுதி வைத்து, அவற்றைப் பாதுகாத்து வருகிறார். பாரதக்கூத்து தவிர மற்ற கதைகளையும் நடிக்கிறார்கள்.
“நம்ம முன்னோர்கள் சொன்னதைக் காதால கேட்டு அதை வழிவழியா கடைபிடிச்சுட்டு வர்றோம். இதுல புதுசா சேர்க்கறதுக்கோ, நீக்கறதுக்கோ எதுவுமே இல்லை. எல்லாத்தையும் அவங்களே எழுதிவச்சிட்டுப் போயிருக்காங்க. கட்டைக்கூத்துன்னாலே பொதுவா பாரதக்கூத்துதான் நிறைய பேருக்குத் தெரியும். ஆனா சித்திரை மாசம் மட்டும்தான் அதை நடத்த முடியும். ஆடி மாசத்துல நடக்கிற கூத்துல வெவ்வேறு கதைகளை எடுத்து நடிப்போம். ராமாயணம், ரேணுகாதேவி சரித்திரம், தட்சண்ய யாகம், மார்கண்டேய விலாசம்னு பல கதைகளை நடிப்போம்” என்று சொல்லும் ராமன், “மக்களிடம் கூத்து பார்க்கும் ஆவல் இப்போதும் இருக்கிறது. ஆனால், இளம் தலைமுறையினருக்கு இதன் மீது அவ்வளவு ஆர்வமும் ஈடுபாடும் இல்லை” என்பதை வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.
“முன்னெல்லாம் கூத்துக் கலைஞர்கள் மேல மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். அதனால, இந்தக் கலையைக் கத்துக்கணும்னு பலருக்கும் ஆர்வம் அதிகமா இருந்தது. இப்போ இருக்கற இளம்தலைமுறைக்கு இந்தக் கூத்து மேல மதிப்பு இருந்தாலும் இதைக் கத்துக்கிட்டு தொழிலா செய்ய ஆர்வம் காட்டுறது இல்லை. காரணம் இதுல நிலையான வருமானம் இல்லை. ‘கூத்தாடி பொழப்பு’ன்னு சும்மாவா சொன்னாங்க? ஆறு மாசம் வாய்ப்பு இருக்கும், வருமானம் இருக்கும். மீதி ஆறுமாசத்துக்கு வேற வேலையோ, நில புலனோ இருந்தா பொழைச்சுக்கலாம். அது இல்லாதவங்க திண்டாடத்தானே செய்யணும். இந்தப் பயம்தான் அவங்களை இந்தக் கலை பக்கம் வரவிடாம தடுக்குது” என்று ராமன் சொல்ல, தன் தரப்பு கருத்தைப் பகிர்ந்தார் திம்மசமுத்திரம் கேசவன்.
“எங்க துணி மூட்டையைப் பார்த்தாலே நிறைய பஸ்காரங்க நிறுத்தாம போறாங்க. அப்படியே நிறுத்தினாலும் ஏத்த மாட்டேங்கறாங்க. இந்த மூட்டை இருக்கற இடத்துல மூணு பேர் நிக்கலாம்னு சொல்றாங்க. லக்கேஜ் வாங்கினாகூடப் பரவாயில்லை. ஆனா பஸ்ஸுலயே ஏற வேணாம்னு சொல்றது நியாயமா? அப்புறம் நாங்க கூத்து நடக்கற ஊருக்கு எப்படிப் போவோம்?” என்று சில நடைமுறை சிக்கல்களைச் சொன்னார்.
பெண்களுக்குச் சிரமம்
கட்டைக்கூத்து என்பது அவ்வளவு சுலபமில்லை. கல்யாண முருங்கை மரத்தின் கட்டையில் செய்யப்படும் அணிகலன்களையும், கிரீடங்களையும் அணிந்துகொண்டு நடிக்க வேண்டும். கட்டைகளைக் கட்டிக்கொண்டு ஆடுவதாலேயே இதற்குக் கட்டைக்கூத்து என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். உச்சி முதல் உள்ளங்கால் வரை 32 கட்டுக்கள் கொண்டது இந்தக் கட்டைக்கூத்து. இவற்றின் எடை கிட்டத்தட்ட ஆறு கிலோ வரை இருக்கும். இவ்வளவு எடையைச் சுமந்துகொண்டு இரவெல்லாம் பாடி, ஆடுவது பெண்களுக்குச் சற்றுக் கடினம் என்பதாலேயே கட்டைக்கூத்தில் பெண்கள் பங்கேற்பதில்லை.
“நாங்கள் ஒருமுறை மதுரையில் கல்லூரி மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கச் சென்றிருந்தோம். அப்போது அவர்களுக்கு வேடமிட்டு, உடல் முழுக்கக் கட்டைகளைக் கட்டினோம். கொஞ்ச நேரத்துக்கே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘எப்படி தாத்தா இவ்ளோ எடையைக் கட்டிக்கிட்டு ஆடுறீங்க?’ன்னு கேட்டாங்க. ஆனால், தொடர்ந்து நாங்க இத்தனை வருஷமா ஆடிக்கிட்டு இருக்கறதால எங்களுக்குப் பழகிடுச்சு” என்று சொல்லும் சஞ்சீவி, கட்டைக்கூத்து என்பது குழு முயற்சியின் வெளிப்பாடு என்கிறார்.
வெற்றிதரும் குழு உணர்வு
“கட்டைக்கூத்து ஆடுறவங்க ஒரு குடும்பமா இணைந்து செயல்பட்டாதான் கூத்து சிறப்பா அமையும். களத்துல இறங்கி ஆடுறவங்க மட்டுமில்ல, பெட்டிக்காரர்ல இருந்து கட்டியங்காரர் வரைக்கும் எல்லாருக்கும் கூத்துல பொறுப்பும் கடமையும் இருக்கு. பொதுவா ஒருநாள் கூத்துக்கு பெட்டி, மிருதங்கம், முகவீணை, துரியோதணன், சகுனி, துச்சாதனன், கர்ணன், பீமன், தர்மன், அர்ஜுனன், நகுல சகாதேவன், கிருஷ்ணர், திரௌபதி, பானுமதி, பெருந்திரள், கட்டியங்காரன், தோழிமார் இருவர் என கிட்டத்தட்ட பதினேழு பேராவது தேவைப்படுவார்கள்.
இவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு ஒற்றுமையும் புரிந்துணர்வும் இருந்தால்தான் கூத்து சிறப்பா நடக்கும். பொதுவா யாருக்கு எந்த வேடம்னு முடிவு பண்றதுல சில சிக்கல்கள் இருக்கும். ஆனா வாத்தியார் என்ன சொல்றாரோ அதை எல்லாரும் ஏத்துக்கிட்டு அந்த வேஷத்தைச் சிறப்ப நடிச்சு கொடுப்பாங்க. சில சமயம் யாருக்காவது உடம்பு சரியில்லாம போயிடும். அப்போ ஒருத்தரே ரெண்டு வேஷம் கட்டுற மாதிரி இருக்கும். இது சினிமா மாதிரி ஒரு வேஷத்துக்கு ஏத்த வசனத்தை மட்டும் படிச்சா போதாது. கூத்துல நடிக்கிற எல்லாருக்கும் எல்லா விருத்தமும், வசனமும் தெரிஞ்சிருக்கணும்” என்கிறார் சஞ்சீவி.
வதியூர் பூபதியும் ராமுவும் இந்தக் குழுவின் இளம் தலைமுறைக் கலைஞர்கள். கேசவன், இரண்டு வருடங்களாகத்தான் கூத்து கட்டுகிறார். ஹார்மோனியம் வாசிக்கும் ராமுவின் அனுபவம் ஐந்து ஆண்டுகள். இருவருமே இந்தக் கூத்துக்கலையின் மேல் ஆர்வம் ஏற்பட்டு, இதில் இணைந்திருக்கிறார்கள். வதியூர் சிவப்பிரகாசம் முகவீணையில் பிரமாதப்படுத்துகிறார். ராமு, தவற விடுகிற இடங்களைப் பொறுமையாகச் சுட்டிக்காட்டி, அதை நேர்ப்படுத்துகிறார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் அனுபவத்தின் வெளிப்பாடு.
சுந்தரி திருமணம்
மதியப் பொழுதில் ஒரே இடத்தில் கூடியிருந்த கூத்தாட்டக் கலைஞர்களைப் பார்த்ததும் மேல்பங்காரம் கிராம மக்களுக்கு உற்சாகம் தாளவில்லை. மதியம் ஒரு மணிக்கு அரிதாரம் பூசத் தொடங்கினார்கள். முத்து வெள்ளை பவுடர்தான் ஆதாரம். அதனுடன் தேவையான வண்ணங்களைக் குழைத்து, வேடத்துக்கு ஏற்ற மாதிரி பூசுகிறார்கள்.
பெண் வேடத்துக்குப் பசிய மஞ்சள், அர்ஜுனன்னுக்குப் பச்சை, கிருஷ்ணருக்கு நீலம், சூரன், துரியோதனன் வேடங்களுக்கு சிவப்பு என அவர்கள் பூசுகிற வண்ணங்களே கதாபாத்திரத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. கம்பீரமாக இருக்கிற ஆண் மகன், கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்ணுரு எடுக்கும் அந்த அரிதாரக் காட்சியே அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. கண் மையில் தொடங்குகிற பயணம் கூந்தல் அலங்காரம், கழுத்தணி, காதணி, புடவை எனத் தொடர்கிறது. எல்லாம் முடிந்து பளபள புடவையில் காட்சி தருகிற நொடியில் அவருடைய முகத்தில் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்கிறது மெல்லிய வெட்கம்!
அன்று நடந்தது சுந்தரி திருமணம். கட்டியங்காரன் வந்து கூத்தைப் பற்றி விவரிக்க கதை மாந்தர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர். ஆண்டவனாக இருந்தாலும் இங்கே தன்னை யார், எந்த ஊர், என்ன தொழில் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகே தொடர்கிறார்கள். பாடல்கள் செந்தமிழில் இருந்தாலும் மக்களால் எளிதில், புரிந்து ரசிக்க முடிகிறது. இருந்தாலும் கட்டியங்காரனின் எளிய வசங்னங்கள் கூத்தைத் தொய்வில்லாமல் நகர்த்துகின்றன. வெயிலின் தாக்கத்தைக்கூடச் சில்லென்று மாற்றியது அந்தச் சூழலும் அந்தக் கலைஞர்களின் அரங்கேற்றமும்.
அபிமன்யு தன் நண்பர்களுடன் விளையாடப் போகிறான். சூழலுக்கு ஏற்றபடிதான் அவன் பாடலும் இருக்கிறது.
வெப்பமாய் காயுதே அந்த
ஒப்பில்லாச் சூரியன்..
மாலை நேரத்து மஞ்சள் வெயிலை மேலும் மகிமையுறச் செய்தன அந்தக் கணீர்க்குரலும் அதைத் தொடர்ந்த தாளவாத்தியங்களும். அந்தக் கிராமத்தின் வீதிகளெங்கும் வியாபித்துக் கிடந்தது நம் பாரம்பரியக் கலையின் உன்னதம்!