வெற்றிக்கான மனநிலை என்ன?

வெற்றிக்கான மனநிலை என்ன?
Updated on
1 min read

வெற்றிக்கான பாதையில் இருப்பவர்கள், என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வெற்றிக்கான காலம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தால் அதற்குக் காரணம் உங்கள் மனநிலையாக இருக்கலாம். நீங்கள் இம்மாதிரியான பாதகமான மனநிலையில் இருந்துகொண்டு வெற்றிபெற்றுவிடுவேன் என முயன்று பயன் இல்லை. அதனால் முதலில் உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். அதை எப்படிக் கண்டுபிடிப்பது, என்பதைப் பார்க்கலாம்.

பொதுவாக மனநிலைகளை மாறாத பழமைவாத மனநிலை, வளர்ச்சிபெறும் மனநிலை ஆகிய இரு நிலைகளாகப் பிரித்துக்கொண்டு, நீங்கள் உங்கள் மனநிலையுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

மாறாத மனநிலை கொண்டவர்கள், காலங்காலமாகப் பின்பற்றப்படும் கோட்பாடுகள், நம்பிக்கைகள் போன்றவை மாற்ற முடியாதவை என ஆணித்தரமாக நம்புவார்கள். அவர்கள் நம்மால் புதிய விஷயங்களில் ஒன்றும் செய்ய முடியாது எனத் தாங்களாக ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். உதாரணமாகச் சில நம் குணங்கள், நம் பிறப்பு, சூழல் சார்ந்து உருவாகியிருக்கும். கண்டிப்பாக இதை மாற்ற முடியும். ஆனால் இத்தகைய மனநிலை உடையவர்கள் அதை மாற்ற முடியாது என உறுதியாக நம்புவார்கள்.

புதிய விஷயங்களைச் செயல்படுத்தத் தடைகளைக் கண்டு பயப்படுவார்கள். வாகனம் ஓட்டக் கற்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். வாகனத்தில் தனியாகச் செல்லும்போது பழுதாகிவிடுகிறது என்றால் அதை எதிர்கொண்டு பார்க்க வேண்டும். ஆனால், பழுதாகிவிடும் என்பதால் வாகனத்தையே எடுக்காமல் இருக்கலாமா?

இந்த மாறா மனநிலை இருப்பவர்கள், அவர்களது செயல்களைக் குறித்து அடுத்தவர்கள் சொல்லும் கருத்துகளைக்கூட விமர்சனமாகக் கருதுவார்கள். “நீங்கள் செய்த வேலை சரியாகத்தான் இருந்தது. ஆனால் சில விஷயங்கள் இன்னும் மேம்படுத்த வேண்டும்” என ஒருவர் சொன்னால், அதைத் தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக்கொள்வார்கள்.

இந்த மனநிலை உள்ளவர்கள், அடுத்தவர்களின் வெற்றியை அசெளகர்யமாக உணர்வார்கள். அடுத்தவர்களின் வெற்றியால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் வளர்ச்சி மனநிலை உள்ளவர்கள் அடுத்தவர்களின் வெற்றியைப் சாதகமாகப் பார்ப்பார்கள்.

அதுபோல் மாறா மனநிலை உள்ளவர்கள், கடினமாக உழைப்பதில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். திடீரெனக் கூடுதல் வேலை வந்துவிட்டால் தன்னால் அதைச் செய்ய முடியாது என நினைப்பார்கள்.

மேலும் தோல்விகளைக் கண்டு பயந்தே புதிய விஷயங்களைச் செய்யாமல் தள்ளிப் போடுவார்கள். அல்லது கைவிட்டுவிடுவார்கள். ஆனால், தோல்வி என்பதைத் தனக்கானதாகக் காணாமல் தன் முயற்சிக்கானது என வளர்ச்சி மனநிலை கொண்டவர்கள் தோல்விகளைப் பாடமாகக் கொண்டு முன்னேறுவார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in