

தடுப்பூசியால் நாம் கரோனா தொற்றை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் கரோனா தொற்று பரவ தொடங்கிய 2020 ஆண்டு மார்ச் மாதம் அனைத்து உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் கூறியது ஒன்றே ஒன்றுதான். முறையாக கைகளை கழுவினால் மட்டுமே கரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதுதான் அது. கரோனா தொற்றின் தொடக்க காலத்தில் அனைவரும் சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக எப்படி கைகளை கழுவ வேண்டும் என்று கற்றுத் தரும் அளவுக்குதான் தமது தனி நபர் சார்ந்த தூய்மையின் நிலை இருந்தது என்றால் அது மிகையல்ல. அவ்வாறு கைககளை கழுவுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட பழக்கங்களால் மட்டுமே முதல் கரோனா அலையை தடுக்க முடிந்தது. தற்போது இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் படி முறையாக கை கழுவும் பழக்கத்தால் 70 சதவீத நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றை தொடர்ந்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு முறைகளால் எந்த அளவு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பது தொடர்பான ஆய்வு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் படி IPC என்று அழைக்கப்படும் (infection prevention and control) தர நிலைகள் உலக நாடுகளில் எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி முறையாக கைகழுவும் பழக்கத்தால் நோய் தாக்குதலில் இருந்து 70 சதவீதம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர நிலைகள், நோயாளிகள் பாதுகாப்பு, தூய்மையான தண்ணீர் மற்றும் சுகாதாரம், சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 9 நிலைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் படி 11 சதவீத நாடுகளில் ஐபிசி தொடர்பான திட்டங்கள் நடைமுறையில் இல்லை என்று தெரியவந்துள்ளது. 54 சதவீத நாடுகளில் இது நடைமுறையில் இருந்தும், முறையாக அமல்படுத்தபடவில்லை என்றும், 34 சதவீத நாடுகளில் மட்டும் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், 19 சதவீதம் நாடுகளில் மட்டுமே இது முறையாக கண்காணிக்கப்படுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொடர்பான திட்டங்கள் உள்ளதாகவும், ஆனால் அவைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே உலக நாடுகள் அனைத்தும் தங்களின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு பாதுகாப்பை கொடுப்பது மட்டுமல்லாமல், சுகாதார நிலைகளை மேம்படுத்துவதற்கும், சுகாதாரம் தொடர்பான செலவினங்களை குறைப்பதற்கும் உதவு என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.