மனச்சோர்வு நோயைக் கண்டறிந்து களைவது எப்படி? - ஓர் அடிப்படை வழிகாட்டுதல்

மனச்சோர்வு நோயைக் கண்டறிந்து களைவது எப்படி? - ஓர் அடிப்படை வழிகாட்டுதல்
Updated on
3 min read

நம் உடல், உளவியல், சமூகவியல் காரணிகளை உள்ளடக்கியதுதான் மனநல பாதிப்பு என்று கூறும் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன், எது மனநல பாதிப்பு, மன அழுத்தம் - மனச் சோர்வு அறிகுறிகள் என்னெனன, மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண யாரை அணுகுவது முதலான அடிப்படைக் கேள்விகளுக்குத் தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறார்.

"நம் வாழ்க்கையில் உடல்நலனுக்குக் கொடுக்கக் கூடிய முக்கியத்துவம், மனநலனுக்கு கொடுப்பது இல்லை. நம்மில் பலருக்கும் மனநலன் என்பது மிகவும் ஒதுக்கப்பட்ட தலைப்பாகவே உள்ளது. ஆரோக்கியம் என்பதற்கு உடல்நலன், மனநலன் மற்றும் சமூகநலன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் என்று விளக்கம் கொடுக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

உடல் நலனைப் பேணுவதற்கு பேணுவதற்காக மருத்துவ வசதிகள் அதிகமாக உள்ளன. மேலும், மக்களிடமே மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வும் அதிகம் வந்துள்ளது. நோய் அறிகுறிகள் இருந்தால் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களை அணுக ஆரம்பித்துள்ளனர். இதுவே மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்கள் பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தானே சமாளித்துக் கொள்வோம் என நிலைமையே பெரும்பாலானோரின் மனப்பான்மையாக உள்ளது.

மனதளவில் ஏற்படக்கூடிய பிரச்சினை தீவிர நிலையை எட்டும்போதுதான் மனநல மருத்துவரை அணுக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. மனதளவில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க ஏராளாமான வழிமுறைகள் உள்ளன. உடல் நலனை சீராக வைத்திருக்க நடைப்பயிற்சி செல்வது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளனவோ, அதுபோலவே மனநலப் பிரச்சினைகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன. முதலில் நம்மிடம் மன நலனைப் பேணவேண்டும் என்ற அக்கறையும், மனநலம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற்றிருப்பதும் அவசியம்.

எது மனநல பாதிப்பு?

மக்களிடம் உடல் நலம் சார்ந்த பாதிப்புகளைவிட மனநலம் சார்ந்த சார்ந்த பிரச்சினைகளே அதிகம் என்பதை கவனிக்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு தேசிய சுகாதார ஆய்வின் முடிவில், இந்தியாவில் குறைந்தது 15 சதவீத மக்களுக்கு சிகிச்சைத் தேவைப்படக் கூடிய அளவிலான மனநல பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதிலிருந்தே நாம் முக்கியத்துவத்தை அறிய முடியும்.

பொதுவாக, மனநல பாதிப்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பரவலாகக் காணப்படும் மனநல பாதிப்புகள் (Common Mental Disorders). இவற்றில் மனச்சோர்வு நோய் (Depressive disorder) மற்றும் மனப் பதற்றம் (Anxiety disorder) ஆகியவை பொதுவாகக் காணப்படும் மனநல பாதிப்புகள். இரண்டாவதாக, தீவிர மனநல பாதிப்புகள் உள்ளன. இவற்றுக்கு உதாரணமாக, மனச்சிதைவு நோய் (Schizophrenia), மேனியா - டிப்ரஷன் கோளாறுகள் மாறி மாறி வரக் கூடிய இருமுனைக் கோளாறு (Bipolar disorder) மற்றும் மூளைத் திறன் மழுங்குதல் (Dementia) முதலானவற்றைச் சொல்லலாம். இப்படியாக பலவிதமான மனநல பாதிப்புகள் உள்ளன.

டாக்டர் யாமினி கண்ணப்பன்
டாக்டர் யாமினி கண்ணப்பன்

சரி, நம் மனம் எங்கே இருக்கிறது? - இந்தக் கேள்வியை முன்வைக்கும்போது நம்மில் பலரும் நெஞ்சத்தைதான் சுட்டிக் காட்டுகிறோம். ஆனால், மனம் என்பது மூளையைக் குறிக்கக் கூடியது. மூளையின் அந்த உணர்வுப் பகுதியை ‘லிம்பிக் சிஸ்டம்’ (limbic system) என்று சொல்வோம். நம் உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் மூளையில் பிரத்யேக இடங்கள் உள்ளன.

மூளையை எடுத்துக்கொண்டால், அதில் பல விதமான நியூரான்கள், நரம்பு செல்கள், ரசாயனங்கள் நிறைந்துள்ளன. மூளையின் இயக்கத்தில் பங்கு வகிக்கும் இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடுகள் ஏற்படும்போது, அது மனநல பாதிப்பாக, மனநோயாக வெளிப்படலாம். இதன் அடிப்படையே பயாலஜிக்கல் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக, இன்றைய காலகட்டத்தில் டிப்ரஷன் (மன அழுத்தம்) என்ற பதத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இப்படி எதற்கெடுத்தாலும் பொத்தாம் பொதுவாக மன அழுத்தம் என்று சொல்வதால், மருத்துவர்களால் முழுமையாகத் தீர்வுகாண முடியாமல் போய்விடுகிறது. மன அழுத்தம், மனச் சோர்வு முதலான சொற்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தெளிவு முக்கியம்.

இதைக் கொஞ்சம் சிம்பிளாகவே பார்ப்போம். மனிதர்களுக்கு அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வருவது இயல்பு. நமக்கு சோகம் வந்தாலே மருத்துவரை நாட வேண்டுமா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. நம் இயல்பான மனநிலைகள் என்பது மனநல பாதிப்புகள் அல்ல. சோகமான நேரங்களில் அழுவதும், குதூகலமான நேரங்களில் சிரிப்பதும் இயல்பான மனநிலை.

அப்படியெனில், எது மனச் சோர்வு?

அறிகுறிகள்:

  • மனதளவில் எப்போதுமே ஒருவிதமான தேக்க நிலையை உணர்தல்.
  • எப்போதுமே ஒருவித சோகத்தில் மூழ்கி இருப்பது போன்ற மனநிலை நீடித்தல்.
  • Pervasive sadness என்று சொல்லக் கூடிய எப்போதுமே கவலையுடன் இருத்தல்.
  • இதற்கு முன்பு ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த செயல்களில் முற்றிலும் ஆர்வம் மங்கிவிடுதல்.
  • உடல் நலனில் எந்தப் பிரச்சினையும் இல்லாதபோதும் எப்போதுமே உடல் சோர்வுடன் இருப்பதாக உணர்தல்.
  • உடலில் எந்த சக்தியும் இல்லாததுபோல் உத்வேகமின்றி காணப்படுதல்.
  • விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் கூட ஆர்வமின்றி இருத்தல்

இவைதான் Cardinal symptoms of depression என்ற மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகள். இவற்றுடன் தூக்கமின்மை, பசியின்மை, சிந்தனைகளில் மாற்றங்கள், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணங்கள் போன்றவை இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவரிடம் நீடித்தால், அது மனச்சோர்வு நோயாக இருக்கலாம்.

மனச்சோர்வு நோய் ஏற்படும் அளவிற்கு பாதிக்கப்பட்டவரின் சொந்த வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று அவருக்கோ, அவர் உடன் இருப்பவர்களோ கருதலாம். இங்கேதான் புறக்காரணிகளுக்கு பதிலாக பயாலஜிக்கல் காரணிகள் கவனம் பெறுகின்றன. சம்பந்தப்பட்டவரின் மூளையில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்களாலும் மனச்சோர்வு நோய் வரக்கூடும்.

இதேபோல், புறக்காரணிகளான நமது மனதை பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள், ஏமாற்றங்கள், இழப்புகள், தோல்விகள் முதலானவையும் மனச்சோர்வு நோய்க்கு காரணமாக இருக்கலாம்.

ஆக, மனநல பாதிப்பு நம் உடல், உளவியல், சமூகவியல் காரணிகளை உள்ளடக்கியது என்பதை உணர வேண்டும்.

அவ்வாறு மனச் சோர்வோ அல்லது வேறு வித மனநல பாதிப்புகளோ ஏற்பட்டால், உரிய மனநல மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

யாரை அணுகுவது?

மனநல மருத்துவரை இயல்பாக நாடுவது என்பது பல காலமாக அச்சுத்துக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது. தற்போது அந்த நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது.

இங்கேதான் உளவியலாளர் (Psychologist), மனநல மருத்துவர் (Psychiatrist) இடையிலான வேறுபாட்டை அறிந்துகொள்வது அவசியம். சைக்காலஜிஸ்ட் என்பவர் நம் மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள், அதாவது கவுன்சிலிங் வழங்குவார். அதன்மூலம் நம் மனநலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதேவேளையில், மனநல மருத்துவ சிகிச்சைத் தேவைப்படுவோருக்கு சைக்ராட்டிஸ்ட் உறுதுணை தேவை. குறிப்பாக, மூளையில் பயாலஜிக்கல் கோளாறுகள் மூலம் ஏற்படுகின்ற மனநலப் பிரச்சினைகளுக்கு மருந்துகள், சிச்சைகள் மூலம்தான் தீர்வு காண முடியும். இதற்கு மனநல மருத்துவரை நாடுவதுதான் சரி.

ஆக, முதலில் நமக்கு எந்த விதமான மனநல பாதிப்பு என்பதை கண்டறிவதற்கு உரிய நிபுணர்களை அணுகி, அந்த பாதிப்பின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்பவே மருந்துகளோ அல்லது வல்லுநர்களிடம் ஆலோசனைகளையோ பெறுவது நல்லது. முதலில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் அச்சம், தயக்கமின்றி தாங்களாகவே முன்வந்து உளவியல் நிபுணர்களை அணுகுவதே நல்லது. மனமும் நம் உடலின் ஓர் அங்கம்தான். மனதளவில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் கையாளத் தேவையான வழிமுறைகள் கற்றுக் கொள்வது நல்லது.

அதேபோல், இளம் தலைமுறையினருக்கு மனநலம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இருந்தே இதைத் தொடங்கவேண்டும். பல்வேறு காரணிகளால் மன அழுத்தங்களுக்கு ஆளாகும் மாணவர்களை மீட்பதற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in