

வெற்றிக்கு அடிப்படை தன்னம்பிக்கை. முதலில் நம்மைப் பற்றி நமக்கு நம்பிக்கை வந்தால்தானே அடுத்தவருக்கு நம் மீது நம்பிக்கை வரும். அப்போதுதான் நமக்கு வெற்றி சாத்தியமாகும். வெற்றிக்கு வினையாவது அவநம்பிக்கைதான். இந்த அவநம்பிக்கைகளைக் கொண்டுவருவது எதிர்ம்றை எண்ணங்கள்தாம். அந்த எண்ணங்களைக் குறித்துப் பார்ப்போம்.
என்ன விஷயத்தைச் சொன்னாலும் அது பற்றிய எதிர்மறை எண்ணத்தை மட்டும் காண்பது அவநம்பிக்கை உண்டாக்கும். உதாரணமாக ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் அந்த இடம் பற்றிய பாதகமான அம்சங்களை மட்டும் சிந்தனைக்கு வரும். இதை வெளிப்படுத்தவும் செய்வார்கள் இத்தகைய ஆட்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு விஷயத்தைப் பற்றி இரு நிலைகளுக்குச் செல்வதும் ஒரு பாதகமான அம்சமாகும். உதாரணமாக ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லும்போது அதீதமாக அதன் சாதக அம்சஙகளைச் சொல்வது, அதே நேரம் அதற்கு எதிராக அதீதமாக அதன் பாதக அம்சங்களைச் சொல்வது. சமநிலையில்லாமல் இங்கும் அங்குமாக ஆடிக்கொண்டே இருப்பதும் தன்னம்பிக்கையைக் கொல்லும் விஷயமாகும்.
பிறகு எல்லாவற்றையும் பொதுமைப்படுத்துதல் ஒரு சரியான விஷயம் அல்ல. உதாரணமாக சவாரி உடை அணிந்த ஒருவருடன் உங்களுக்கு ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கும். அன்று முதல் சவாரி உடை அணிந்த எல்லோரும் அவரைப் போல்தான் எனப் பொதுமைப்படுத்திக்கொண்டு எதிர்கொள்வது சரியானது அல்ல. கறுப்பாக இருப்பவர்கள் மட்டும் மோசமானவர்கள் என நினைப்பது போன்றது இது.
எதிரே உள்ளவர்களின் மனத்தைப் படிப்பது என்ற பெயரில் ஒருவரைப் பற்றி முன் அபிப்ராயத்தை உருவாக்கிக்கொள்வது சரியில்ல. பொதுவாக நாம் ஒருவரைப் பார்க்கும்போது நமது நினைவில் இருக்கும் பல நூறு உருவங்கள் மூலம் அவரைப் பற்றி ஒரு முன் முடிவு நமக்கு வரும். அது எதிர்மறை எண்ணங்களாகக்கூட இருக்கும். ஆனால், அது சரியாக இருக்க வேண்டும் என்று இல்லை. அதனால் அது போன்ற முன் முடிவுகளை இயன்ற வரை தவிர்ப்பது நல்லது.
எல்லா விஷயங்களை உணர்ச்சியின் அடிப்படையில் அணுகக்கூடாது. அப்படி அணுகுவது நல்லதல்ல. பகுத்தறிந்து அணுகுவதைச் சரியானதாக இருக்கும்.
அதீத ஒழுங்காக இருப்பது ஆபத்தானது. சிலர் பல விஷயங்களில் அதீத ஒழுங்கைக் கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். சில விஷயங்களில் தொடக்கத்தில் சிறு தவறுகளைச் செய்துதான் அதைப் படிக்க முடியும். தவறே செய்யக் கூடாது என முடிவுடன் இருப்பவர்கள். அந்த விஷயத்தையே கற்றுக்கொள்ள முடியாமல் போக நேரிடலாம்.
எல்லா விஷயங்களிலும் தன்னை வைத்துப் பார்ப்பதும் ஒரு எதிர்மறை எண்ணமாகும். உதாரணமாக ஒருவரின் உபாதைகளைச் சொல்லும் அது தனக்கும் இருப்பதாகக் கற்பனை செய்வதுகொள்வது, அலுவலகத்தில் சாதரணமாக அலுவலக நண்பர்கள் பேசிக்கொள்ளும்போது அவர்கள் தங்களைப் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள் எனக் கற்பனைசெய்துகொள்வது, இதெல்லாம் மிக மோசமான மனப் பிறழ்வை உண்டாக்கு நம்பிக்கையைக் கெடுக்கும்.